ஒரு மனிதனின் பிரிவுக்காக, அவன் தாய் அழுதால் அவன் நல்ல மகன், அவனது பிள்ளைகள் அழுதால் அவன் நல்ல தகப்பன், அவனது மனைவி அழுதால் அவன் நல்ல கணவன், ஆனால் நாடே அழுதால் அவன் நல்ல தலைவன் என்ற வசனம் இவருக்கு சினிமாவில் மட்டும் பொருந்தவில்லை.
சென்ற ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் ஒட்டுமொத்தமாக அழுது தீர்த்தது.
மெரினாவில் இருந்த கடற்கரை கோயம்பேட்டிற்கு இடம் மாறியதாக கண்ணீர் ததும்ப மக்கள் அலை அலையாகத் தங்கள் தலைவனுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தனர்.
பொதுவாக ஒரு கட்சித்தலைவரின் நினைவு நாளை அந்தக் கட்சியின் தொண்டர்கள் சுய லாபத்திற்காக அனுசரிப்பது வழக்கம். அது அரசியல்.
ஆனால் இன்று கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நாளில் மீண்டும் பெரும்பாலான பொதுமக்கள் துக்கம் அனுசரிப்பதைப் பரவலாகப் பார்க்க முடிகிறது.
பெரும்பாலானோரின் இன்றைய தகவல் பிரிவு கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதையே காட்டுகிறது.
மேலும் இவர் உயிரோடு இருந்த போது இவர் உடல் பாதிப்பால் அடைந்த நலிவை, குடித்ததால் ஏற்பட்ட கோளாறு என்று கூறிப் பொய்ப் பிரச்சாரம் செய்து இவரைக் கோமாளி ஆக்கிய ஊடகங்கள் இன்று, என்றென்றும் கேப்டன், நீங்கா நினைவுகளுடன் கேப்டன், கேப்டனுக்கு சல்யூட் என்று இவரின் புகைப்படத்தையும், பாடல்களையும் வைத்து பொதுமக்களிடம் அபிப்ராயத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன.
அந்த மனுஷன் இப்ப உயிரோட இருந்தாலும் இதத்தான் சொல்லியிருப்பாரு, “அட, அவங்களும் நல்லா இருக்கட்டும் விடுங்க!”
இவரைப்பற்றிய குறிப்பில் சில வசனங்கள் மிக அருமையானவை.
அதில் குறிப்பாக “கர்ணனிடம், எமன் கையேந்திய நாள் இன்று” என்ற வசனம் எனது மனதைக் கவர்ந்த ஒன்று.

சமீபத்தில் இறந்து போன எந்த ஒரு அரசியல்கட்சித் தலைவருக்காகவும், பாட்டுப்போட்டி நிகழ்ச்சிகள், அல்லது சிறப்பு நிகழ்ச்சிகள் என்று எதையும் செய்யாத ஊடகம், இந்த ஒப்பற்ற தலைவனுக்காக செய்ய வேண்டியதாயிற்று.
காரணம், நல்லவர்களின், ஆற்றலை ஒழித்து வைக்க முடியாது. வழக்கமான பழமொழி, ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது.
இவர் செய்த சாதனைகளை நிறைய ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், இணையப்பக்கங்கள் மாறி மாறி பேசிக் கொண்டே இருந்தாலும், மீண்டும் மீண்டும் இவரைப்பற்றி நாம் பேசிக் கொண்டே இருப்பதற்கான காரணம், இவர் மீதான ஒப்பற்ற அன்பு.
நம்மை இவர் அரசியல் ரீதியாக ஆளாவிட்டால் கூட, தன் தாயுள்ளத்தால், அன்பால் ஒரு நல்ல தலைவனாக நம் இதயங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
ஒரு ஆண்டு மட்டுமல்ல, எத்தனை ஆண்டானாலும் மறக்க மாட்டோம்.
என்றென்றும் எம் மனதில் நீங்கா நினைவுகளுடன் ..
கேப்டனுக்கு அஞ்சலி.