நல்லதைப் பாராட்டுவோம், பகிர்வோம் என்ற வார்த்தைகளைப் பின்பற்றி இதைப் பகிர்கிறோம்.
நமக்கெல்லாம் இயற்கையாகவே ஒரு குணம் உள்ளது.
மிகப்பெரிய உயரத்தை அடைந்த ஒருவரின் சாதனையை மனம் விட்டுப் பாராட்டுவோம்.
ஆனால் நம்மோடு இயல்பாகப் பழகி உறவாடும் எளியவர்கள் செய்யும் காரியங்களைப் பாராட்ட மனமிருக்காது. ஏனென்றால் அந்தப் பாராட்டு அவரை நம்மை விட ஒரு படி உயர்த்திவிட்டால் அவர் நம்மை விட உயர்ந்தவராகிப் போவார் என்ற காரணத்தால் தான்.
எப்போதும், எத்தகைய உயரத்தை அடைந்தவரும், கீழிருந்து மேல் வந்தவர் தான் என்பதை மறந்து விடக்கூடாது. சக மனிதர் செய்யும் சாதனைகளைத் தட்டிக் கொடுக்க மறக்கவோ, மறுக்கவோ கூடாது.
அப்படி ஒரு எளிய நண்பரின் சாதனைகளைப் பாராட்டிப் பகிர்வதில் நினைவுகள் பெருமை கொள்கிறது.
இவர் செய்த காரியம் மிகப்பெரிய காரியமல்ல. ஆனால் அதன் பலன் அளப்பரியது. நம்மால் எளிதாக செய்ய இயலும் தான். ஆனால் நாம் செய்யாத ஒன்று .
மரம் நடுதல் தான் அது.
அதுவும் நமது பாரம்பரிய பனை மரம்.

நண்பரின் பெயர் தியாகராஜன், திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்.
Eco friendly, பசுமை பூமி போன்ற இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர்.
தனது சேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர்.
இவரது மிக முக்கியமான சாதனைகளில், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும், தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து முன்னெடுத்து 1.10.2023 அன்று ஒரு கோடி பனை விதைகளை விதைத்து உலக சாதனை படைத்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரது அயராத சேவைகளைப் பாராட்டும் விதமாக, தமிழ்நாடு தன்னார்வலர்கள் சங்கத்தின் சார்பாக, 2023 ஆம் ஆண்டு , டிசம்பர் 5 ஆம் நாள், தன்னார்வலர்கள் தினத்தன்று இவருக்கு நம்பிக்கை நாயகன் பட்டம் அளிக்கப்பட்டது.
கடந்த ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று சென்னையில் நடைபெற்ற 1000 செடிகள் நடும் விழாவில், உறுப்பினராக ஆர்வத்தோடு பங்குபெற்று சிறப்பாற்றியுள்ளார்.
மேலும் தற்போது தனது சமூக சிந்தனையின் அடுத்தகட்ட பயணமாக அரசியலில் பங்குபெற வரும்பி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராகி, அந்தக்கட்சியின் முக்கிய அணியில் ஒரு குறிப்பிட்ட பதவியில் சேவயாற்றி வருகிறார்.
நம்மைப்போன்ற எளிய மனிதரின் தொடர்ந்த சமுதாயப்பணியையும், சமூக சிந்தனையையும் பாராட்டி மகிழ்வதில் பெருமிதம் அடைகிறோம்.
இவரிடம் நாம் முன்வைத்த கேள்விகளும் அதற்கான அவரது பதில்களும் பின்வருமாறு..

உங்களைப் பற்றி கொஞ்சம் சுருக்கமாக சொல்லுங்களேன்.
பதில்: வணக்கம். எனது பெயர் Dr.O.M.தியாகராஜன்,M.B.A, D.Sw. நான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டையில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் ஊரில் நெசவு முக்கியத் தொழில் என்றாலும், விவசாயமும் தழைத்தோங்குகிறது. நல்ல பச்சை பசேலென காட்சியளிக்கும் ஊர் எங்கள் ஊர்.
மரம் நடுதல் பற்றிய விழிப்புணர்வு எப்போது உங்களுக்கு ஏற்பட்டது?
நான் கல்லூரியில் படிக்கும் போது ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலமாக எனக்கு மரம் நடுதலில் சிறிய ஆர்வம் ஏற்பட்டது. சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன். ஆனால் முழுமையாக 2019 ஆம் ஆண்டில் தான் என்னை இதில் ஈடுபடுத்திக்கொண்டேன். தொடர்ச்சியான புவிவெப்பமயமாதல் நகழ்வுகளை நான் படித்து அறிந்து கொண்டு என்னாலான கடமையை இந்த பூமிக்கு செய்ய வேண்டும் என்ற ஆவலில் இதைச் செய்யத் துவங்கினேன்.
கேள்வி: குறிப்பாக பனைமரத்தின் மீதான உங்களது அதீத ஆர்வத்திற்கு என்ன காரணம்?
பதில்: பொதுவாக பூமியைக் குளிர்விப்பது எனது குறிக்கோளாக இருந்தாலும் , அதில் பனை மரங்களைக் குறிப்பாகத் தேர்வு செய்ததற்கும் ஓரிரு காரணங்கள் உண்டு. பனை மரங்கள் மண் அரிப்பைத் தடுக்க வல்லது, இடி மின்னலைத் தாங்கக் கூடியது என்றெல்லாம் அறிய நேர்தது. மேலும் தமிழகத்தின் பாரம்பரிய பனைத் தொழில் நசிந்து வருவதையும் மனதில் கொண்டு சென்ற ஆண்டு, சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடற்கரை ஓரங்களில் ஒரு கோடி பனை விதைகளை நட்டோம்.
இந்தத் திட்டமானது கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழக பனை தொழிலாளர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்டம் ஆகிய அமைப்புகளின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு 1.10.2023 அன்று இது வெற்றிகரமாக முடித்தது.மேலும் இந்த ஆண்டு உள்மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடுவதற்கு திட்டம் தீட்டப்பட்டு, 50 சதவீத பணி முடிவடைந்திருக்கிறது.
கேள்வி: நீங்கள் இந்தப்பாதையில் பயணிக்க காரணமான முன்னோடிகள் என்று யாரேனும் உண்டா?
பதில்: நான் முன்பே கூறியது போல, புவி வெப்பமயமாதலைத் தடுக்க என்னாலான காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற தூண்டுதலின் பெயரில் இந்தப்பாதையில் பயணிக்கிறேன். முன்னோடி என்று குறிப்பிடும் அளவுக்கு யாருமில்லை. ஆனால் இப்போது என்னைப்போல பலரும் இதில் பங்குகொள்வதைக் கண்டு மகிழ்கிறேன்.
கேள்வி: தங்களுடைய அரசியல் பயணத்திற்கான காரணம் என்ன?
பதில் : எங்கள் ஊர் சிறியது. நிறைய வசதிகளையும், வாய்ப்புகளையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. எங்கள் ஊரின் குரலை மேலே உள்ள அதிகாரிகள் வரை கொண்டு செல்ல எனக்கு ஒரு ஆயுதம் தேவைப்பட்டது. அதுதான் இந்த அரசியல்.
இதை தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி வாசித்த வாசகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. உலகவெப்பமயமாதலை மனதில் கொண்டு , தங்களாலான சிறு சிறு முயற்சிகளைச் செய்து வருங்கால சந்த்திக்கு ஒரு ஆரோக்கியமான சூழலை அதைத்துத் தர கைகொடுக்கும்படி அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
என் சாதனைகளை வெளி உலகுக்கக் காட்டி, இதே பாதையில் பலரை வழிநடத்த தூண்டுதலாக அமையும் நினைவுகள் வலைத்தளப்பக்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.