Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

அலட்சியத்தின் விளைவு

அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

பயப்பட வேண்டிய சில விஷயங்களுக்கு பயப்படாமல் அலட்சியம் காட்டுவது, மூடத்தனம். அந்த அலட்சியத்தின் விளைவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இத்தனை அறிவியல் முன்னேற்றம் அடைந்த காலத்திலும், ரயில்வே க்ராஸிங் அதாவது தண்டாவளத்தைக் கடக்கும் போது ரயிலில் அடிபட்டு மனிதர்கள் இறந்து போகிறார்கள் என்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று.

அத்தனை துல்லியமான தகவல் வந்து, நேரத்திற்கு கதவுகள் முடப்பட்ட பிறகும், ரயில் வர தாமதமாகும் சிறிது நேரத்தில் சிலர் தண்டவாளத்தைக் கடந்து குறுக்கும் நெடுக்குமாக சிலர் நடந்தும், சிலர் தமது இருசக்கர வாகனங்களை ரயில்வே கேட்டின் கீழே நுழைத்து உள்புறமாக எடுத்தும் தண்டவாளம் வழியே கடப்பதை அன்றாடம் கவனிக்க முடிகிறது.

கேட் கீப்பர் என்றழைக்கப்படும், ரயில்வே ஊழியர்கள், இவர்களையும் கவனித்துக் கொண்டு விசிலடித்துக் கொண்டும் இவர்களை ரயில் வரும் நேரம் வரை ஒழுங்கப்படுத்தவும் செய்கிறார்கள்.

அதையும் பொருட்படுத்தாமல் சிலர் ரயில் அருகே வரும்போதும் அவசர அவசரமாக பாதையைக் கடப்பதையும் நாம் கவனிக்கத் தான் செய்கிறோம்

சில இளைஞர்கள் காதுகளில் பாடல் கருவிகளை பொருத்திக் கொண்டு சத்தமாக இயக்கிக் கொண்டு எதையும் பொருட்படுத்தாமல் ஆபத்தான சூழலில் தண்டாவளங்களைக் கடப்பதையும் நாம் கண்டுகொண்டு தான் இருக்கிறோம்.

நேற்றும் கூட ஒரு இளம்பெண் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைகிறோம்.

இத்தனை விஞ்ஞான வளர்ச்சியும், பாதுகாப்புப் பரிந்துரைகளும், ஊழியர்களும் , வழிமுறைகளும் இருந்தும் இப்படி அலட்சியத்தின் காரணமாக உயிர்கள் போவதை ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை.

உயிரை விடப் பெரியது அந்த 2 நிமிடம்?

தயவுசெய்து கவனமாக இருக்கலாமே?
அக்கறையுடன் நினைவுகள்