மழை.
நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
ஔவையார், 10 மூதுரை
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)
எல்லார்க்கும் பெய்யும் மழை.
இதைப்படித்த பருவ வயதில் எங்கள் ஊரில் ஜோராக மழை பெய்த நினைவுகள் இருக்கின்றது.
மழை நாட்கள், என்பதே ஒரு தனி சுகம் தான். எப்போதும் இல்லாத ஒரு அரவணைப்பு, குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து மாலை காபி முதல் இரவு உணவு வரை பல கதைகளைப் பேசிக் கொண்டு பொழுதைக் கழிப்பது என்று இன்றளவும் கூட கண்களில் கண்ணீர் வரவழைக்கும் இனிமையான நினைவுகளைத் தந்த பல மழை நாட்களைக் கடந்து வந்த வசந்த கால வாழ்க்கை அது.
எல்லாக் குழந்தைகளையும் போல, நானும் எனது அப்பாவிடம் சில கேள்விகளைக் கேட்டிருக்கத்தான் செய்கிறேன்.
- அப்பா, மழை ஏம்ப்பா வருது?
பதில்: அதுவாடா, மழை வந்தாதான் , மரம் செடிக்கு எல்லாம் தண்ணீர் கிடைச்சு நல்லா வளரும், விவசாயம் செழிப்பா நடக்கும், அம்போதானே நாமெல்லாம் சாப்புட தானியம் கிடைக்கும்? - எப்போய், நாமதான் மரத்துக்குலாம் தண்ணி ஊத்துரோம்ல, அப்புறம் எதுக்கு மழை பெய்யனும்?
பதில்: நம்ம வீட்டு மரத்துக்கு மட்டும் இல்லடா, விவசாயம் லாம் நடக்கனும், காட்டுல இருக்கிற மரம் லாம் வளரனும் ல, அதுக்குலாம் மழை பேஞ்சாதான் தண்ணி கிடைக்கும். - சரிப்பா, மழை எப்படி வருது?
பதில்: அதுவாடா, பூமில இருக்க தண்ணிலாம், ஆவியாகி மேல போய் மேகமாகி, மேகம் குளிர்ந்த பிறகு மழையா கீழ வருது. - பூமில இருக்க தண்ணி எதுக்குப்பா மேல போயி கீழ வருது. அது பூமில மரத்துக்கு போவாதா?
பதில்: போய், அந்த டேப் ரெக்கார்டர் ஆன் பண்ணி பாட்டுப் போடு.
பாட்டு போட்ட பிறகு அடுத்த கேள்வி
- எப்பா, மேகம் குளிராட்டி மழை வராதா?
பதில்: வராது. போய் அம்மா காபி போட்டாளா பாரு.
ஆமா, அன்று அந்தக் கேள்வி யாருக்கும் அவ்வளவு முக்கியமான கேள்வியானதாக இல்லை.
ஏன் அர்த்தமில்லாத, குழந்தைத்தனமான கேள்வியாகக் கூட இருந்திருக்கலாம்.
மேகம் எப்படி குளிராமப் போகும்? குளிர்ந்து தானே ஆகும்?
ஆனால் அதற்கும் சாத்தியக்கூறுகள் உண்டு. என்னவென்று பார்க்கலாம்.
அதற்கு முன், இந்த ஆண்டு மழை பெய்த காரணத்தால் எங்கள் ஊரின் பல பகுதிகளும், தண்ணீரால் நிரம்பியிருக்கிறது. ஊரின் இரு நீர்த்தேக்கக் குளமும் நிரம்பியிருக்கிறது..சில புகைப்படங்கள் இணைப்பில் கீழே.
சரி மீண்டும் பழைய கேள்விக்கு வரலாம்.
மழையைத் தரும் அளவிற்கு மேகங்கள் குளிராமல் போக சாத்தியம் உண்டா?
ஆம் உண்டு.
சாதாரணமாக கூகுள் செய்து பார்த்தாலே அதற்கான பதில் கிடைத்தது. ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை மேகம் குளிர்வதைத் தடுத்து, மழை வருவதைத் தடுக்க வல்லது என்று படித்தேன்.
அப்போது எங்கள் ஊரில் ஏதோ ஒரு பெரியவர், அதுவும் அந்த தொழிற்சாலையோடு நெருங்கிய தொடர்பிலிருந்த பெரியவர் சொன்ன வார்த்தைகள் என் மூளையில் வந்து போனது.
“லேசா, மேகம் கருத்தா, பொகக் கொழாய, தொறந்து உட்ருவானுங்கப்பா, கரு கருனு பொகை போய் அடிச்சதும், வந்த மேகமும் கலஞ்சி ஓடுரும் பாத்துக்கிடு”
அவர்கள் வேண்டுமென்றே செய்திருப்பார்களா தெரியவில்லை. ஆனால் ஒரு வேலை நடக்கும் போது ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் முக்கியமான ஒன்று.
அந்தப் புகை, மேகம் குளிர்விப்பதைத் தடுக்கிறது.
எனக்குக் கிடைத்த கூகுள் பதிலும் இதைத்தான் தெரிவித்தது.
ஆமாம், தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை சுற்றுச்சூழலை வெப்பமாக்கி, மழை வருவதைத் தடுக்கவல்லது.
இந்த சுற்றுச் சூழல் வெப்பமைடதல் என்பதை தற்போது சென்னையிலுள்ள மணலிப்பக்கம் பயணம் செய்தால் உணரலாம்.
புகைக் குழாய்களிலிருத்து நெருப்பு வெளியேறுவதையே கண்ணால் பார்க்கலாம்.
புகையிலுள்ள துகள்கள், பூமியிலிருந்து மற்றும் சூரியனிலிருந்து வரும் வெப்பக்கதிர்களை உறிஞ்சி, புவிக்கும் காற்றுக்கும் இடையிலான சீரான வெப்பநிலையை மாற்றவல்லது.
சரி இதற்கு சாட்சி இருக்கிறதா? அறிவியல் பூர்வதான ஆதாரங்கள் இருக்கிறதா?
சாட்சி நாங்களும் எங்கள் ஊரும் தான்.
1996 ஆம் ஆண்டு அந்த ஆலை திறக்கப்பட்டது.
அதற்கு முன்பும், அது திறக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குள்ளாகவும் எங்கள் ஊரில் மேலே புகைப்படங்களில் பார்த்தது போல, பெரும்பாலான இடங்களில் நீர் தேங்கும் அளவிற்கு நல்ல மழை வருடா வருடம் பெய்யத்தான் செய்தது.
குறிப்பாக கோவில்பட்டி டூ திருநெல்வேலி சாலையில் பொறியியல் கல்லூரி இருக்கும் பக்கத்தில் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி பெரிய குளம் போல உருவாகும். அதிலே பஸ், கார்கள், லாரிகளைக் கழுவுவைதப் பார்த்திருக்கிறோம்.
ஆனால், எனக்கு விவரம் நன்கு தெரிந்த பிறகு , தோராயமாக, 2004-2006 களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஒரு பத்து வருடத்திற்கு இது போன்ற கன மழை எங்கள் ஊர்ப்பகுதிகளில் பெய்யவே இல்லை.
ஆனால் பல போராட்டத்திற்குப் பிறகு 2018 ல் அந்த ஆலை மூடப்பட்ட பிறகு, மீண்டும் பழைய மாதிரியே மழை பெய்து வருகிறது.
சென்ற ஆண்டும் இதோபோல கன மழை தான்.
ஏன் ஒரு ரயில் பாதி வழியில் நிற்கும் அளவிற்கு மழை பெய்து வெள்ளம் ஆகியதே!
இத்தனை ஆண்டுகளில், இந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத்தான் மழை காலத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கே வர வேண்டாம் என்று ஆட்சியர் அறிக்கை விடும் அளவிற்கு மழை பெய்திருக்கிறது!
அதற்கு முன்பெல்லாம் ஏன் பெய்யவில்லை?
அப்படியென்றால் இது உண்மைதானா?
அந்தப்பெரியவர் சொன்னது போல, ஒரு உலோகத்தை உற்பத்தி செய்வதற்காக, இந்தப்பூலோகத்தின் சுழற்சியைத் தடுக்கத் தானே செய்திருக்கிறோம்?
இது 100 சதவீத உண்மையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதைப் பேசாமல் மறைத்தே வைக்கும் அளவிற்கு இதில் உண்மையே இல்லாமலும் இல்லை.
பெய்யும் மழையும், செய்திகளுமே சாட்சி.
எப்படியோ, அது மூடப்பட்டு விட்டது.
பிறகு எதுக்கு இந்தக்கட்டுரை?
அந்த்த் தொழிற்சாலை சாதாரணமாகவா மூடப்பட்டது? போராட்டம் நடந்து அந்தப்போராட்டத்தைத் தடுக்க கலெக்டர் இல்லாத காரணத்தால், VAO வின் உத்தரவின் பெயரில் போராடியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு, உயிர்பலி கொடுத்தல்லவா மூடப்பட்டது?
எங்கள் ஊரை எங்களுக்குப் பழைய படி மீட்டுக்கொடுத்த அந்தப்போராளிகளுக்கு நன்றி செலுத்தவே இந்தக் கட்டுரை.
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை. எங்கள் ஊருக்குப் பெய்யும் மழை, அந்தப் போராளிகள் எனும் நல்லாரின் பொருட்டுப் பெய்யும் மழை.
உயிரைக் கொடுத்த மாவீரர்களுக்குக் கண்ணீர் அஞ்சலியாகப் பெய்யும் மழை.
அந்த மழையை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் அவர்களுக்குக் கடன் பட்டிருக்கிறோம்.
நன்றியுடன்