Categories
கருத்து தமிழ்

சிசேரியன் எனும் அறுவை அரக்கன்

சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெறுவதில் தென் மாநிலங்களான, தெலுங்கானா, தமிழகம் மற்றும் ஆந்திரா முதலிடம்.

முன்பெல்லாம் பிரசவம் என்றால் ஒரு நாலு பெண்கள் வீடுகளில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை சுற்றி மறைத்து, சுடுதண்ணீர் எடுத்து, ஏதோ செய்வார்கள், குழந்தை பிறக்கும், தொப்புள் கொடி அறுக்கப்பட்டு , குழந்தையை சுத்தம் செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள்.

காலப்போக்கில் மருத்துவ வசதிகள் அதிகரித்த பிறகு, பிரசவம் என்பது வீடுகளில் செய்யப்படும் விஷயமல்ல.
அதில் சில நேரங்களில் உயிர் போகும் அளவிற்கு அபாயம் இருக்கும் காரணத்தால், பிரசவங்கள் மருத்துவமனைகளில் தான் நிகழ வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.

மக்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.
கர்ப்பவதிக்கு வலி வந்த உடனே வண்டிகட்டிக் கொண்டோ வாகனத்திலோ அவசரகதியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள்.
சிலருக்கு வண்டி குலுங்குவதிலேயே பரசவமாகிவிடும் என்ற விவேக் காமெடிகளை கடந்த காலம் அது.

வெறும் நகைச்சுவை அல்ல. சில சம்பவங்களின் அடிப்படையில் தான் அந்த நகைச்சுவை உருவானது.

அப்போதெல்லாம் கூட இந்தப்பிரசவம், சுகமான பிரசவமாகத்தான் இருந்தது.

அதாவது இயற்கை நம்மை எப்படி வழிநடத்துகிறதோ, அதே வழியில் பிரசவமும், கருத்தரிப்பும் நடந்தது.

மற்ற மிருகங்களைப்போல பிரசவமும் நமது அன்றாட நடைமுறையில் ஒன்றாகவே இருந்து வந்தது.

மருத்துவமும், நாகரீகமும், விஞ்ஞானமும் வளர்ந்தது.
பிரசவமும், கருத்தரிப்பும் கூட புதிய அவதாரம் எடுத்தது.

சிசேரியன், அதாவது அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுப்பது. இந்த நடைமுறை எப்படி உருவாகி இருக்கலாம் என்பதைக் கற்பனைக் காட்சியாக மெர்சல் என்ற விஜய் படத்தில் அழகாகக் காட்டியிருப்பார்கள்.

வேண்டுமென்றே சுகப்பிரசவம் நடக்க இருந்த ஒரு பெண்ணுக்கு, பலவந்தமாக சிசேரியன் செய்வது போன்ற காட்சி அது.

அறுவை சிகிச்சைப் படம்

அதற்காக இப்போது நடக்கும் சிசேரியன் எல்லாம் பலவந்தமானது என்பது நேர்மறை அர்த்தமாகாது.

அன்று அந்தக்காட்சியில் செய்யப்பட்ட அப்போதைய பலவந்தமானது, படிப்படியாக ஒரு தலைமுறைக்கு மறைமுகமாக செய்யப்பட்டு, இன்று சுகப்பிரசவம் என்றால் ஆச்சரியம் என்ற நிலைக்கு நமது வாழ்க்கை முறை நம்மைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

இது மருத்துவத்துறை மீது மட்டுமான குற்றச்சாட்டு அல்ல. நமது வாழ்க்கைமுறையும், அன்றாட உடலுழைப்பின் அளவும் கூட இதற்குக் காரணம் தான்.

பெண்கள் வீடுகளில் செய்த உடலுழைப்பு ஒட்டுமொத்தமாக வியாபாரமாகிப் போன பின்னே சுகப்பிரசவம் எங்கிருந்து நடக்கும்?

இடுப்பு வலுப்பெற, தண்ணீர் தூக்குவது, உடல் வலுப்பெற மாவு அரைப்பது போன்ற பல விஷயங்கள் வழக்கொழிந்து போனது. அதைப்பற்றி பேசுபவரே ஆணாதிக்கவாதியாகவும், சைக்கோவாகவும் கரித்துக் கொட்டப்படுவதால் யாரும் அதைப் பேசவும் மறுத்து மௌனம் சாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இயல்பாக பெண்கள் வீடுகளில் செய்து வந்த உடலுழைப்பை இப்போது யோகா, மெட்டர்னிட்டி யோகா, மெட்டர்னிட்டி கோச்சிங் என்று அதையும் வியாபாரமாக்கி விட்டார்கள்.

ஆனால் அதுவும் கூட பெரிய மாற்றத்தைத் தரவில்லை.

இன்று ஒரு கட்டுரையில் படித்தபோது இது நன்கு உணரப்பட்டது. சிசேரியன் அதிகமாக நிகழும் இந்த மூன்று மாநிலங்களும் நல்ல மருத்துவ வசதியும் வளர்ச்சியும் அடைந்தவை. அப்படியென்றால் நல்ல சுகப்பிரசவம் இங்கு தானே அதிகம் நிகழ்ந்திருக்க வேண்டும்? அதுதான் இல்லை. இந்த மருத்துவ வளர்ச்சி என்பதே அறுவை சிகிச்சைகளின் அதிக எண்ணிக்கையைக் குறிப்பது போல இருக்கிறது.

இந்த மூன்று மாநிலங்களும் பெரும்பாலும் தமது பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் உணவு வழக்கங்களிலிருந்து வெளிவந்தவை என்பதும் உண்மை.

இதில் கேரளா, !கர்நாடகா இல்லை. காரணம் இன்னும் கூட அங்கே பழைய பாரம்பரியம் சிறிது ஒட்டியிருக்கிறது.

அது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சுகப்பிரசவங்கள் அதிகமாக நடக்கும் மாநிலங்கள் நாகலாந்து, பீகார் போன்ற வளராத மாநிலங்கள்.

ஒப்பீட்டு புள்ளியியல் படம்

ஏன்? ஏனென்றால் அங்கே இன்னும் கூட உடலுழைப்பு எஞ்சியுள்ளது. அதைத்தவிர என்ன காரணம்?

இதில் இன்னொரு ஆத்திரமான விஷயம் என்னவென்றால், என் குழந்தை இந்தத் தேதியில் இந்த நிமிடத்தில் பிறக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை.

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்வதே தவறு என்றால், கருவில் ஓய்வெடுக்கும் குழந்தையை வெளியே நம் இஷ்டத்திற்கு எடுப்பது எவ்வளவு பெரிய தவறு?

இதையெல்லாம் அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும்.

பெண்கள் படிப்பது முன்னேறுவது எல்லாம் நன்மைக்கே! ஆனால் பாரம்பரியமாக பெண்கள் செய்து வந்த உடலுழைப்பு, அவர்களின் நலனுக்காக என்பதை உணர்ந்து சில விஷயங்களைப் பின்பற்றினால் அவர்களுக்குத் தான் நல்லது.
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் என் பாட்டி 102 வயதிலும் திடகாத்திரமாக இருந்தார் என்று பேசிக் கொண்டே, கடையில் ஒரு கிலோ மாவு வாங்கி தோசை சுட்டுக் கொண்டிருக்க போகிறது இந்த சமுதாயம்.

ஆணாதிக்கவாதம் அல்ல.

சற்றே அக்கறையுடன்
நினைவுகள்