Categories
குட்டி கதை தமிழ்

நம்ம வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்குனு தோணுதா?இதப்படிங்க முதல்ல.

கடவுள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் மனிதர்களைப் படைக்கிறார்.

ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை படைக்கப்பட்டவுடன் எல்லாரையும் பூலோகம் அனுப்ப திட்டம் தயார் ஆகிறது.

பூலோகம் போகும் முன் கடவுளின் ஏற்பாட்டோடு, ஒரு விருந்தும் தயார் ஆகிறது.

மனிதர்களிடம் சொல்லப்படுகிறது.
“மனிதர்களே, நீங்கள் பூலோகம் செல்லவிருப்பதால் இங்கே வழி அனுப்பும் விருந்து ஒன்று வைக்கப்படும், சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த அறையில் கடவுள் உங்களை ஆசி கூறி வழி அனுப்புவார். அனைவரும் விரைவாக சாப்பிட்டு வாருங்கள்” என…

உடல் படைக்கப்பட்டவுடன், உச்சகட்ட பசியில் இருக்கும் மனிதர்கள், முதல் விருந்துக்காக ஆவலோடு செல்கின்றனர். விருந்தை முடித்த பலர், கடவுளிடம் ஆசி பெற ஓடோடி செல்கின்றனர்.

அங்கே கடவுள் அவர்களை “நீங்கள் என் ஆசிக்காக ஓடி வந்தீர்கள், பூலோகம் போனாலும் நான் உங்களை வழிநடத்துவேன்”, என்றும் “உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன், நன்றாக வாழ்ந்து திரும்புங்கள்” என்றும் ஆசிர்வதிக்கிறார்.

அந்த மனிதர்களுக்கு மகிழ்ச்சி.

விருந்து முடித்த கையோடு சிலர், பீடா சாப்பிடவும், வேறு சிலர் ஐஸ் க்ரீம் சாப்பிடவும் சென்று தாமதமாக வந்தனர். அப்படி பீடா அல்லது ஐஸ்க்ரீமை சாப்பிட்டுத் தாமதமாக கடவுளை நோக்கி வந்தவர்களின் காதுகளில் கடவுள் கூறிய கடைசி இரண்டு வார்த்தைகள் மட்டும் காதில் விழுந்தது  “வாழ்ந்து திரும்புங்கள்” என்று.

அந்த வசனத்தை மட்டும் கேட்ட அந்த சிலரின் வாழ்க்கை ஏனோதானோ என்று நிறைவில்லாமல் இருக்கிற வாழ்வாக அமைந்தது.

இன்னொரு கும்பல் இருந்தது.

அந்த கும்பல் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு அதன்பிறகு பீடாவுக்கு வரிசையில் நின்ற கும்பல்.

முதலில் ஐஸ்க்ரீம்.
அடுத்து பீடா

கடவுள் ஆசி கூறிவிட்டு, திரும்பி செல்லும் வழியில், அந்த கும்பலைப் பார்த்து “இதுங்கல்லாம், பூமில போயி, வாழ்ந்து….”

“அய்யோ, நம்ம படைப்புல இப்படியும் சிலது இருக்கு” என்று கழுவி ஊத்திவிட்டு செல்கிறார்.

இப்போது அந்த கடைசி கும்பலைச் சார்ந்த நான் உணர்கிறேன். அன்றைக்கு குறைந்தபட்சம் பீடாவையாவது விட்டுக்கொடுத்திருந்தால் என் வாழ்க்கை ஏதோ ஒரு விதத்திலாவது சொல்லிக்கொள்ளும்படி இருந்திருக்குமோ என்று!!!

நீங்களும் இதே கும்பலா?

சரி விடுங்க நமக்கு சோறு தான் முக்கியம்.

சிரிப்பதற்காக மட்டும் நினைவுகள் சார்பாக.