Categories
தமிழ் நினைவுகள்

புளிய மர நிழற்சாலை

இருபுறமும் புளிய மரம் நிழல் தந்த மதுரை ரோடு. ஆம். மதுரை வரை மட்டுமே எங்கள் உலகம். அந்த ரோடும், மதுரையோடு முடிந்து விடும் என்று எண்ணிய சிறு வயது.

மாதிரி புகைப்படம்

மெட்ராஸ் என்ற ஊர் தெரிந்தாலும். அந்த ஊருக்கு, நம்ம ஊரில் இருந்து ரோடு கிடையாது என்ற எண்ணம்.

மதுரை ரோடு என்றாலே பயம்.
வண்டியெல்லாம் வேகமா வரும்.
நிறைய பேரு ஆக்ஸிடன்ட்ல இறந்திருக்காங்க.
புளிய மரத்துல பேயா இருப்பாங்கனு.

ஆனா, மதுரை ரோடு தரும் பரவசம், வேற எங்கும் கிடைப்பதில்லை.

புளிய மர நிழலில் நீளமாகப் படர்ந்திருக்கும் சாலையில், ஒவ்வொரு முறை நடந்த போதும்
“டேய் மதுரைக்கு இப்படியே போனா எப்படி இருக்கும்?” என்று சிறுபிள்ளைத்தனமாக பேசாத நாளில்லை.

“டேய் போடா, நான் பஸ்ல மதுரைக்கு போயிருக்கேன், பஸ் அவள ஸ்பீடா போகுது, அதுலயே காலைல ஏறினா மத்தியானம் தான் போவோம், நடந்தா அவளதான்.
பத்து நாள் ஆயிரும்”

“டேய் பத்து நாள்லாம் நடக்க முடியாது டா, தண்ணி குடிக்காம செத்துப்போயிருவோம்.”

“அதெல்லாம் இல்லடா, இங்க இருக்க தண்ணிமடம் மாதிரி, மதுரை போற வரைக்கும் நிறைய தண்ணி மடம் இருக்கும். அங்க தண்ணிலாம் குடுப்பாங்க.”

“போடா புழுவனி. நான் பஸ்ல போறப்ப பாத்தேன். அதெல்லாம் இல்ல.”

“போடா, நீ பஸ்ல மதுரை போற வரைக்கும் பாத்தியாக்கும்? தூங்கியிருப்ப…”

“சும்மா சொல்லாத டா, தண்ணி மடம் இருக்கும்.”

“டேய் போடா புழுவனி”

“நீதான் டா புழுவனி”

“நீ பஸ்ல தூங்கிட்டே போன.
இப்ப சும்மா சொல்ற.”

“போ, நீயே புளியங்கா அடிச்சுக்கோ, என்கிட்ட கேட்காத.”

“போடா, வெண்ணெ.
நானே அடிச்சுக்கிறேன்.”

“டேய், அந்த புளியங்காய எடுக்காத..
அது நான் எறிஞ்ச கல்லுல விழுந்தது.”

“நீ மேல ஏறி பாத்தியாக்கும்.
அது நான் எறிஞ்ச கல்லுல தான் விழுந்தது”

“போடா”

“சரிபோ அது வெறும் காய்.
இங்க பாத்தியா என்கிட்ட பழமா இருக்கு.”

“போ, போ.”

“டேய் எனக்கு ஒன்னு குடுறா”

“போடா, நான் புழுவனியாச்சே, என்கிட்ட ஏன் கேட்குற.”

“சரிடா, சரிடா நீ புழுவல.
நான்தான் தூங்கிட்டேன்.
ஒரே ஒரு பழம் குடுறா?”

“வேணா என் பின்னாடி ஓடி வந்து வாங்கிக்கோ“

புளியம்பழத்திற்காக, பேருந்தை விட வேகமாக கூட ஓடியிருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது.

யாருக்குத் தெரியும். அன்று மதுரை ரோடு என்பது சிறுவர்களின் குறும்பாலும், அட்டகாசத்தாலும், புளியமரங்களாலும், தலைகீழாய்த்தொங்கும் பேய்களாலும் நிரம்பியது. இன்று வெறும் கானல் நீரால் நிரம்பியிருக்கிறது.

சாலை அகலமானது.
நினைவுகள் அதனுள்ளே ஒடுங்கியது.

தூத்துக்குடி – மதுரை சாலை.
எட்டயபுரம் – சிந்தலக்கரை (பகுதி)

எனது சிறுவயது மலரும் நினைவுகள் உறங்கிக் கொண்டிருக்கும் இடம்.

ஏதோ ஒரு புளிய மரத்தைக் கண்டபோது கிளறப்பட்டது.


பதிவாளர் பின் குறிப்பு

இந்த கதை மகிழ்ச்தி ததும்பியதாக  நகர்கிறது, ஆனால் வாசிக்கும் பொழுது ஒரு இனம் புரியாத சோகம். வளர்ச்சியின் பெயரில் நாம் என்ன இழந்திருக்கிறோம் என்று இது போன்ற கதைகள் நமக்கு விளக்குகின்றன.

அசோகர் மரம் நாட்டார், நிழற்சாலைகள் அமைத்தார் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் எந்த காலத்தில் வாழ்ந்தார், வேறு என்ன செய்தார் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் பெயர் நிலைத்திருகிறது. காரணம் அவர் செய்த காரியம். மக்களுக்கும் நாட்டுக்கும் செய்த நல்ல விஷயம்.

இன்று சாலை ஓரங்களில் மிஞ்சியிருக்கும் நிழல் தரும் மரங்களைப் பார்க்கும் பொழுது, யாரோ ஒருவர் இவற்றை அமைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா?

அவற்றை வெட்டியவர்களின் பெயர்களும் வரலாற்றில் நிலைத்திருக்குமா?அது எப்படியான கண்ணோட்டத்தில் இருக்கும்?

மனிதன் பின்னோக்கி நகர்வதில்லை. முன்னோக்கிப் போகும் போது நமது குறிக்கோளை அவ்வப்போது சரி செய்து கொள்வதும், நன்மையை தேடிகொள்வதும், குற்றங்களை திருத்திக்கொல்வதும் கூட மனித குணமே. அந்த முன்னேற்றத்தை அடைய இது போன்ற கதைகள் உதவுகின்றன.

நினைவுகளுக்காக பதிப்பிடுவதில் பெருமையுடன், சிவப்ரேம்.