Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

பக்தியா அல்லது பரவசப் போட்டியா?

சமீபத்திய செய்தி: திருச்செந்தூர் பகுதியில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் காரணத்தால் பௌர்ணமி அன்று இரவு கடற்கரையில் யாரும் தங்க வேண்டாம் என்று அறிவுறுத்தல்.

இந்தச் செய்தியின் பின்புலம் என்னவென்றால், மாதந்தோறும் திருச்செந்தூரில் பௌர்ணமி இரவில் தங்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த எண்ணிக்கை கிட்டதட்ட லட்சத்தைத் தொடுகிறது.

இப்படி கடற்கரையில் லட்சம் மக்கள் படுத்து உருளுவதால், காவல்துறைக்கு கடுமையான பணிச்சுமை ஏற்படுகிறது, சுகாதார சீர்கேடு உருவாக வழிபிறக்கிறது, சுற்றுச்சூழல் மாசடைய வழிவகுக்கிறது என்பதெல்லாம் மறுக்க முடியாத உண்மை.

வெட்டவெளியில் அனைவருக்கும் படுக்க இடம் இருக்கிறது, ஆனால் கழிப்பறை? குளிக்கும் வசதி?

இதெல்லாம் முறையாக, சரியாக இல்லை. ஏற்படுத்தித் தரவும் முடியாது. காரணம் இடப்பற்றாக்குறை.
ஆயிரத்தில் மக்கள் புழங்க வேண்டிய இடத்தில், பக்தி, சாஞ்ஞியம் என்று காரணம் சொல்லி லட்சத்தில் தங்கினால் அரசாங்கம் தான் என்ன செய்யும்? காவல்துறை தான் என்ன செய்யும்?

சரியாக 30 வருடங்களுக்கு முன்பு எனது தாத்தா பாட்டி திருச்செந்தூரில் தான் குடியிருந்தார்கள்.

கோவிலில் இருந்து நடக்கும் தொலைவில் தான் வீடு. அப்போதைய காலகட்டத்தில் இரவு வேளைகளில் பேருந்து வசதிகள் பெரிதாக இல்லாத காரணத்தால், மாலை 6 மணிக்கு மேலேயே திருச்செந்தூர் கோவிலில் கூட்டம் என்பதே இருக்காது. ஒரு 8 மணிக்கு மேலே பத்து, இருபதைத் தாண்டாது பக்தர்களின் எண்ணிக்கை. 9 மணிக்கு ஊரே அடங்கிவிடும். கடல் அலையின் சத்தம் 100 அடி தொலைவு வரை கேட்கும்.

30 வருடக் கதை அல்ல. எனக்கு விவரம் தெரித்து கடந்து 4-5 வருடங்களுக்கு முன்பு வரை கூட, திருச்செந்தூரில் இரவு தங்குவது என்பது புத்தாண்டு தினத்தைத் தவிர்த்து வேறு எந்த நாளிலும் நான் கேள்விப்பட்டதில்லை.

ஆனால் குறிப்பிட்ட இந்த சிறிய இடைவெளியில், திருச்செந்தூரில் பௌர்ணமி ராத்தங்குனா நினைச்சதெல்லாம் நடக்கும், ஐஸ்வர்யா ராய் உங்க பொண்டாட்டியா வருவா, கங்குவா படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும், சூரியன் மேற்குல உதிக்கும்னு சொல்லி, சொல்லி மக்கள் மனசுல ஒரு இல்லாத நம்பிக்கைய விதைச்சு; அவன் போயி தங்கிட்டான், இவன் போயி தங்கிட்டான், நாமளும் போயி தங்கிருவோம்.

ஒருவேள நாம தங்காம விட்டு, அவனுக்கு மட்டும் நல்லது நடந்துட்டா? அது எப்படி? என்ற பொறாமைப் போட்டியிலும், தேவையான போக்குவரத்து வசதிகளும், கையில் போதுமான பணமும் இருக்கின்ற காரணத்தால், மக்கள் ஒரு விஷயத்தை ஆராயாமல், சும்மா ஜாலியா செஞ்சு வைப்போம் என செய்யத் துவங்குகிறார்கள்.

ஆனால் யாரிடமாவது இதைக் கேட்டால், இல்லங்க, நான் ஆத்மார்த்தமா சொல்றேன், திருச்செந்தூர் கடற்கரைல பௌர்ணமி அன்னைக்கு தூங்கி எழுந்தா மனசுக்கு நிம்மதியா இருக்குனு சொல்லுவாங்க.

திருச்செந்தூர்னு இல்லை. உவரி கடற்கரையில பௌர்ணமி அன்னைக்கு படுத்தாலும் நல்லாத்தான் இருக்கும். அந்த உணர்வு கடவுள் தருவதல்ல, கடலும் இயற்கையும் தருவது.

ஆனால் நாம் அந்த உணர்வுக்காகத் திரும்பத் திரும்ப கூட்டம் கூட்டமாக திருச்செந்தூர் கடலை கலக்கி, சுகாதார சீர்கேட்டை உருவாக்கி, சூழ்நலையை கலங்கப்படுத்தினால், இன்னொரு சுனாமியைத்தான் சந்திக்க நேரிடும். அல்லது விபரீதங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

மத நம்பிக்கையின் காரணமாக என்னென்னவோ செய்யும் மனிதர்கள் ஏனோ, எல்லா மதங்களும் போதிக்கும், அன்பு, கருணை , நேர்மை ஆகியவற்றை மட்டும் பின்பற்ற மறுக்கிறார்கள்.

காரணம் பௌர்ணமிக்குப் போயி கடற்கரையில் படுப்பது போல இது எளிதானது அல்ல.

என்றைக்குத்தான் மாறுமோ, இந்த மூடநம்பிக்கை அவலம்?

இதை சொல்லவரும் முன்பே நமக்கு நாத்திகவாதி என்ற முத்திரையும் குத்தப்படும்

அடேய், கடவுளை நம்பாமல், ஜோதிடத்தையும், பரிகாரத்தையும், பிற மனிதர்கள் கூறும்
அர்த்தமற்ற காரியங்களையும் ஆட்கள் தான்
நாத்திகவாதிகள்.

நானல்ல.

மீண்டும் மீண்டும். நினைவுகள்.