Categories
கருத்து தமிழ்

சமுதாய சீரழிவும், நாமும், சினிமாவும்.

சினிமாவை வெறும் சினிமாவாக, பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கும் மனநிலை எப்போது வருமோ நமது மக்களுக்கு?

ரஜினி, விஜய் எனத்துவங்கி இப்போது சாதாரண கதாநாயகர்கள் வரை சினிமாவில் சிகரெட் பிடிப்பது தடை செய்யப்படது போலவே ஆகிப்போனது.

நடிகர் விஜய் திருமலை படத்தில் புகை பிடிக்கும் காட்சி

காரணம் என்னவென்றால், அவர்கள் சிகரெட் பிடிப்பதால் , அவர்களைப் பார்த்து இளைஞர்களும் சிகரெட் பிடிப்பார்கள் என்ற வாதம்.

முதலில் அது சினிமா, அது ஒரு கற்பனை கதை, கற்பனை உலகம். அந்தக்கதையில் அந்த கதாபாத்திரம் சிகரெட் பிடிப்பதையோ, கொலை செய்வதையோ, நாம் அந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகரின் பெயரில் பழியைப் போடுவது மூடத்தனம்.
அவர்களைப் பார்த்து அப்படியே சமுதாயம் சீரழிகிறது என்றால், அது கல்வியறிவில்லாத அல்லது அறிவில்லாத சமுதாயமாகத்தான் இருக்க வேண்டும்.

ஒரு சைக்கோ கொலைகாரன் படத்தைப் பார்த்தவுடன் சமுதாயத்தில் அனைவரும் சைக்கோவாக மாறி விடுவதில்லை. ஒரு நேர்மையான காவல் அதிகாரி படத்தையோ, அல்லது இராணுவ வீரனின் படத்தையோ பார்த்த உடனே அனைவரும் நாட்டைக்காக்க காவல் அதிகாரியாகவோ, இராணுவ வீரனாகவோ மாறிவிடுவதில்லை.

இராணுவ வீரன் கதை கொண்ட அமரன் படக்காட்சி

ஆனால் ஒரு கதாநாயகன் புகைபிடித்தால், மது அருத்தினால் மட்டும் அதையே பலர் பின் தொடர்கிறார்கள் என்றால் என்ன காரணம்?

மங்காத்தா படத்தில் நடிகர் அஜித் மது அருந்தும் மற்றும் புகை பிடிக்கும் காட்சி

மேற்கண்ட விஷயங்களைச் செய்வது கடினம், ஆனால் புகை பிடிப்பதும், மது அருந்துவதும் எளிது என்பது தான் முதல் காரணம்.

புகை பிடிப்பது கடினமாக இருந்திருந்தால் இன்று இத்தனை இளைஞர்கள் புகை பிடித்திருப்பார்களா?

எங்கள் பருவ வயது காலத்தில், ஊரில் பெரியவர்களைத் தவிர வேறு யாருக்கும், 24-28 வயது இளைஞர்களுக்குக் கூட எல்லா கடைகளிலும் சென்று சிகரெட் வாங்க தைரியம் இருக்காது.

ஏதோ ஒரு குறிப்பிட்ட கடையில் வாங்கி, காட்டுக்குள் சென்று ஒழிந்து அடிப்பார்கள். ஆனால் அந்த கட்டுக்கோப்பு இப்போது எங்கே போனது?

இப்போதெல்லாம் பள்ளிச்சீருடை அணிந்துகொண்டு பாரில் சென்று குத்தாட்டம் போடும் அளவுக்கு சமுதாயம் சீரழிந்து கிடக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் சினிமா கதாநாயகர்கள் மட்டும் என்று சொன்னால் நம்மை விட முட்டாளகள் யாரும் இருப்பார்களா?

முன்பெல்லாம் வயதில் பொடியன்கள் யாராவது ஏதாவது தப்பு செய்வதுபோலத் தோன்றினாலே, ஊரில் உள்ள பெரியவர்கள், “ஏலேய் முத்தையா மகன் தான நீ? இங்க என்னல இந்நேரம்” என்று அதட்டுவார்கள். இன்று அந்த அக்கறை சமுதாயத்திலிருத்து மறைந்தே விட்டது.

சொந்தக்காரப் பிள்ளைகளைக் கூட கண்டுகொள்வதில்லை. சில இடங்களில் அப்பா அம்மா கூட பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க மறந்து விடுகிறார்கள்.

யாருக்கும், எதுவும் எளிதாகக் கிடைக்கிறது.

21 வயது நிரம்பிய நபர்களுக்குத்தான் சிகரெட், மது விற்பனை என்ற சட்டம் உண்மையிலேயே செயல்படுவதாகத் தோன்றவில்லை.

இப்படி இதையெல்லாம் ஒழுங்குபடுத்தாமல், படத்தில் அஜித், விஜய் சிகரெட் பிடித்தால் அதைப்பார்த்து இளைஞர்களும் சிகரெட் பிடிப்பார்கள் என்று சொல்வது எவ்வளவு மூடத்தனம்?

அப்படி படத்தைப் பின்தொடர்பவர்கள் என்றால், இந்தியன் படம் வந்தபோது லஞ்சம் ஒழிந்திருக்க வேண்டும்.

தாமதமாகியிருந்தாலும் ரமணா வந்தபோதாவது லஞ்சம் ஒழிந்திருக்க வேண்டும்.

இப்படி நம்மிலிருந்த கட்டுப்பாடுகளை ஒட்டுமொத்தமாக இழந்து விட்டு, சினிமாக்காரர்கள் மீது பழி போடுவது என்ன நியாயம்?

உண்மையிலேயே படித்த இளைஞர்கள் கூட இன்றைய தினத்தில் பல கதாநாயகர்களுக்குப் பைத்தியக்காரத்தனமான ரசிகர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள். பாலாபிஷேகமும் செய்கிறார்கள்.

பாலாபிஷேக புகைப்படம்

உண்மையிலேயே ஒரு ஒட்டுமொத்த பைத்தியக்கார பாலாபிஷேக கூட்டம் உருவாகக் காரணம் என்ன?
ஏன் அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை?

அவர்களை அவர்களது பெற்றோர் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்லியிருப்பார்கள்?

நீ எம்.ஜி.ஆருக்கு சூடன் காட்டுன மாதிரி நான் என் தலைவனுக்கு பாலாபிஷேகம் பண்றேனு சொல்வாங்க.

நடிகரை நடிகர்னு கூட சொல்லாமல் தலைவன் என்றே சொல்லிப் பெருமிதம் கொள்கிறார்கள்.
இவர்களை என்ன சொல்லி யார்தான் திருத்துவது?

ஆனால் மீண்டும் நாம் பழைய விஷயத்தைப் பேச வேண்டியுள்ளது.

அதே நடிகர் ஒரு படத்தில் ஒரு ஜமீன்தாரராக ஊருக்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக நடிப்பதைப்பார்த்து நம்ம பயலுக போகும் வழியில் பத்து பேருக்கு சாப்பாடு வாங்கித் தருவதெல்லாம் இல்லை. ஆனால் தலைவன் ஸ்டைலா சிகரெட் பிடிச்சா அத மட்டும் செஞ்சுரனும்னு அவனுக்குள்ள வரும் எண்ணத்திற்கு முழுக்க, சினிமாக்காரர்கள் மீது பழி போடுவது தவறு தான். அதில் நமது சமுதாயத்தின் பங்கும் மிகப்பெரிய அளவில் உள்ளது.

ஒருவர் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ளும் எளிதான வழியைத் தேர்வு செய்யாமல், எங்கே தவறு என்பதை உணர்ந்து ஒட்டுமொத்த சமுதாயமும் முன்வந்தால் தான் ஒழுக்கமான சந்ததி வளரும்.
பேருந்தில் படிக்கட்டில் சாகசம் செய்பவர்களை ஓட்டுநர், நடத்துனர் கண்டிக்க வேண்டும்.

21 வயது வராமல் புகை வஸ்துகளைக் கேட்டால் கடைக்காரர் தரக்கூடாது.

வகுப்பறையிலிருந்து ரீல்ஸ் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி அந்த மாணவர்களைக் கண்டிக்க வேண்டும்.

மீண்டும் பழைய முறையில் தலைமுடி முதல், டவுசர் வரை ஒழுக்கம் கடைபிடிக்க மாணவர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

பாக்கெட்ல சீப்பு வச்சிருக்க? நீ என்ன சல்லிப்பயலா? என்ற அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்குக் கெடுபிடிகள் அதிகமானால், ஒழுக்கம் தானாக வரும்.

அதைவிடுத்து, இப்ப உள்ள பிள்ளைகலாம், சினிமாவையும், மொபைலையும் பாத்து கெட்டுப்போச்சு, என் கடமை இதில் எதுவும் இல்லை என்று கடந்து சென்று விட்டால்,ஒரு சமுதாய சீரழிவுக்கு நாம் காரணமாகிறோம்.

தயவு செய்து இதை சரிசெய்யலாம்.

நினைவுகள் சார்பாக அன்பு வேண்டுகோள்.