இந்தக் கட்டுரை ஒரு மனிதனின் கோபத்தை, ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரை.
கோர்வையாக இல்லாமல் போகலாம்.
ஆனால் உணர்வுகள் நிச்சயம் இருக்கும்.
இத்தனை நம்பிக்கையோடு சொல்லக் காரணம் இருக்கிறது. அந்தக் கோபம் என்னுடையது தான். அந்த மனிதன் நான்தான்.
சமீபத்திய பிரபல பாடல் “யார்டா அந்தப் பையன், நான்தான் அந்தப் பையன்“ என்பதைப் போல, இன்று எனக்காக ஒரு கட்டுரை. என் கோபத்தின் வெளிப்பாடாக.
ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவன் நன்கு படித்து, இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை முடித்து, சரியான வேலை இல்லாமலோ, தவறுதலான பாதையினாலோ இன்றும் சொற்ப சம்பளத்தில் தன்னை விட குறைவாகப் படித்தவர்களை விட குறைந்த சம்பளத்தில், தன்னை விட குறைந்த மதிப்பெண்கள் பெற்ற தனது நண்பர்களை விடக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம்.
ஒரு ஆள் வாழ்வில் நிச்சயம் பெரிய அளவில் சம்பாதிக்க வேண்டும், தன்னுடைய நண்பர்களுக்கு இணையாக சம்பாதிக்க வேண்டும் என்று கட்டாயம் எண்ணத்தானே செய்வார்?
அப்படியான ஒரு சாதாரண பாதிக்கப்பட்ட ஆள் தான் நானும்.
என்னுடைய இந்த எண்ணத்தை மூலதனமாக்கும் அயோக்கியத்தனத்தின் மீதான கோபத்தை தான் வெளிப்படுத்த நினைக்கிறேன்.
இதில் முதல் விஷயம் அரசாங்க வேலை. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து சொற்பமாக சம்பாதிக்கும் பட்டதாரிகள் மட்டுமல்லாமல், தனியார் கம்பெனி என்றால் நிரந்தரமல்ல, அரசு வேலையே வாழ்க்கையின் அஸ்திவாரம் என்று சொல்லி மண்டையைக் குழப்பி, முதலில் நமது நிம்மதி போகும்.
நம்மால் தொடர்ந்து படித்து அரசு வேலையைப் பெற முடியுமா என்பதை யோசிக்கக் கூட நமக்கு நேரம் அமையாது.
இந்த வருஷம் 5000 போஸ்டிங் வருது, 50000த்த பாக்காதீங்க. அம்மல்லோவுல சேந்துருங்க, ஜெயிச்சுடலாம்னு சொல்லி. அதோட நிறுத்தாம, நீங்க பிறவியிலேயே அறிவாளி, நீங்கலாம் முதல் பரீட்சையிலேயே பாஸ் ஆகிடுவிங்க, “உங்களால முடியும் பாஸ்லர்” னு சொல்லி நம்மில் அரசு வேலைக்கான மோகத்தை விதைத்து விடுவார்கள்.
நாமும் கழுத்துல, தங்கச்சங்கிலி சும்மா தானே தொங்குதுனு அடமானம் வச்சி அம்மலோல சேந்துருவோம்.
அங்க சேர்ந்து 10 – 20 நாளைக்குப் பின்னாடி தான் நம்மளால இது முடியுமா, அல்லது முடியாதானு உணருவோம்.
சரி பத்து நாள்லயே முடிவு பண்ண வேணாம்னு ஒரு வருஷம் போராடி பாப்போம். அதுக்கு மேல நம்ம வாழ்க்கை சூழ்நிலை நம்மள அந்த அரசுத்தேர்வு பயிற்சி சூழல்ல இருக்க அனுமதிக்காட்டி, சரி பரவால, ஒரு முயற்சி தானேனு விட்ருவோம்.
அரசாங்க வேலை எப்படியோ அதே போல வங்கித் தேர்வு கூட்டமும் உள்ளது.
இந்த இரண்டிலுமே பாதிக்கப்பட்டவன் நான்.
இரண்டையுமே தேர்ந்தெடுத்தது சத்தியமாக நானில்லை.
அதே வசனம் “உன்னால முடியும் பாஸ்கர், நீ பிறவியிலேயே அறிவாளி! பர்ஸ்ட் அட்டம்ட்லயே புரொபேஷன் ஆபிசர்“னு.
இதையெல்லாம் நமக்கு அறிவுறுத்தும் நண்பர்களை நான் குறை சொல்லவில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் சொல்புத்தியை விட சுயபுத்தி அவசியம். மேற்கண்ட தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு தவமிருப்பது போல, தோல்விகளைக் கடந்து பயிற்சியில் இருக்க வேண்டும். அப்படியான ஆட்களுக்குத் தான் அது பொருத்தம்.
நானெல்லாம், சாமி கும்புட கண்ணை மூடும் போதே ஒரு பத்து நொடியில ஓட்டக்கண் விடுற ஆளு.
நான் எங்க போயி தவமிருப்பேன்? அது எனக்கு அந்தப் பணத்தை கட்டும் போது தலையில ஏறவில்லை.
இப்படி அரசு வேலை நிச்சயம் என்று ஏமாந்து கோச்சிங் சென்டர்களில் பணம்கொடுத்து ஏமாந்த பலர்.
அரசாங்க வேலைக்கு கோச்சிங் சென்டர்லாம் தேவையில்லை, கடின உழைப்பே முக்கியம் என்பதை மறந்து பலரும் கோச்சிங் சென்டர்களில் பணம் கட்டி ஏமாறுவது வாடிக்கையாகி விட்டது.
இதில் சிறிய பொறாமையும் அடக்கம்.
ஒருவேளை நாம கோச்சிங் சென்டர்ல சேராம விட்டு, நமக்கு வேலை கிடைக்காம, அவனுக்கு மட்டும் கிடைச்சுட்டா?
இது தான் அவர்களின் மூலதனம்.
உண்மையிலேயே கோச்சிங் சென்டர்களில் படித்துத் தேர்ந்தவர்கள் கோச்சிங் சென்டர்களால் ஜெயிக்கவில்லை. தமது உழைப்பால் முன்னேறியவர்கள் தான்.
அடுத்து இப்போது ரகரகமாக வித விதமாக பல வியாபாரங்கள் நமது அஸ்திவார நம்பிக்கையில் விளைகின்றன.
அதில் சிலவற்றைப் பேசலாம்.
முதலில் சினிமா கதாசிரியராக அல்லது இயக்குனராவது எப்படி?
ஒரு சிறந்த டைரக்டர் விளக்குகிறார். 5000 மதிப்புள்ள ஒரு மணி நேர வகுப்பு 2500 ரூ மட்டுமே!
அதாவது நமக்கு 2500 ரூ மிச்சமாம்.
அதில்லாம இந்த 2500 ரூ கட்டிட்டா நாம இயக்குனர் ஆகிடலாமாம்.
நாளடைவில் ஜேம்ஸ் காமரூன் எங்கள் வகுப்பின் முன்னாள் மாணவர்னு சொன்னாலும் சொல்லுவாங்க.
அதே கார்ப்பரேட் நிறுவனம் சுவாரஸ்யமாக கதை சொல்வது எப்படினு வகுப்பு எடுக்குறாங்க.
அதாவது Storytelling என்று இப்போது ஒரு வேலைவாய்ப்பு உருவாகி வருகிறது. அதில் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் எப்படி கதை சொல்ல வேண்டும் என்பதை எங்களிடம் 99 ரூபாய் கொடுத்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று.
அகில இந்திய வானொளியில் தென்கச்சி கோ சுவாமிநாதன் என்ற ஒருவர் கதை சொல்லுவார்.
அவர் எந்த வகுப்பில் பயின்றார் கதை சொல்வதற்கு?
இதே போல, யூடியூப் சேனலில் சம்பாதிப்பது எப்படி, இணையதளத்தில் சம்பாதிப்பது எப்படி, வீட்டிலிருந்த படியே சம்பாதிப்பது எப்படி.
எப்படி எப்படி எப்படி என்று சொல்லி சொல்லி விற்று விற்று வியாபாரம் செய்து அவர்கள் தான் சம்பாதித்துக்கொண்டே செல்கிறார்கள்
ஒரு கிராமத்தில் ஆரம்பித்த கோச்சிங் சென்டர் இன்று தமிழ்நாடு முழுக்கப் பரவியிருக்கிறது.
இது அவர்களின் வளர்ச்சி.
ஆனால் நம்மில் எத்தனை பேர், இது நமக்கு உகந்ததா இல்லையா என்று யோசிக்காமல் வாழ்க்கையில் முன்னேற ஒரு சிறுமுயற்சி என்று சொல்லி பணத்தை வீண்டித்திருக்கிறோம்?
இன்று எனது நண்பர் அந்த story telling ல் எனது பெயரில் 99 ரூ பணத்தைக் கட்டிவிட்னார் வம்படியாக. அதில் ஒரு 25-40 நிமிடம் கூட என்னால் முழுதாக கவனிக்க இயலவில்லை.
இரண்டு சம்பவங்களை மேற்கோள் காட்டி, இந்த சம்பவங்கள் நடந்தேறியதற்குக் காரணம், கதை சொல்லப்பட்ட விதம்.
அதே போல நீங்களும் நன்றாகக் கதை சொன்னால் வாழ்வில் முன்னேறலாம் என்ற ரீதியில் பேசுகிறான்.
அதில் 300 ஏமாளிகள், தலைக்கு 100 ரூ கட்டியிருக்கிறார்கள்.
30000 ரூ, அவன் சம்பாதித்து விழுங்கி விட்டான்.
கடைசியில் ஒன்னும் சொல்லவில்லை, வடிவேலு மாதிரி பணக்காரன் ஆவது எப்படி என்று சொல்லித் தருகிறேன் என்று கூறி நான் எப்படி உங்களிடம் தலைக்கு 1000 ரூபாய் வாங்கினேனோ, அதேமாதிரி நீங்களும் வசூல் செய்யுங்கள்.
என்ற ரீதியில் story telling வகுப்பில் 30000 அபேஸ்.
நான் என் நண்பனிடம் கூறியது ஒன்று தான்.
“இனிமேல் வாழ்க்கையில முன்னேறுவது எப்படினு சொல்லித்தரேனு யாராவது பணம் கேட்டு வந்தா, என்கிட்ட அதசொல்லாத. நான் வாழுறதுக்கே பணம் பற்றாக்குறையா இருக்கு, இதுல வாழ்க்கையில முன்னேறுவதற்கு யோசனைக்கு பணம் கொடுக்க எனக்கு எங்க வழி? “
அதேதான் மக்களே நம்மைப்போல வாழ்வில் சம்பாதிக்க, முன்னேற நினைக்கும் பல நடுத்தர மக்களுக்கும்.
100 ரூ க்கு சோப்பு வாங்குங்க, அப்படியே உங்க சொந்தக்காரங்க கிட்ட 100 ரூ சோப்ப வித்துக் கொடுத்தா உங்களுக்கு 25 ரூ கிடைக்கும்.
மளிகைக் கடையில 40 ரூக்கு சோப்பு வாங்கினா ,40 ரூ செலவு
ஆனா நம்மகிட்ட ஒரு 1000 ரூ சோப்பு வாங்கி 10 பேருகிட்ட வித்துட்டா, 250 ரூ வரவுனு பேசுவாங்க.
ஆனா உண்மையிலேயே அந்த நிறுவனத்தைத் தவிர இதில் யாருமே பிழைத்ததாகச் சரித்திரம் இல்லை.
இதில் பேசுவதற்கு இன்னும் நிறைய உள்ளது.
அவ்வப்போது பேசலாம்.
அன்புடன் நினைவுகள்