Categories
குட்டி கதை தமிழ்

விருந்தோம்பல் – குறளுடன் குட்டிக்கதைகள்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்

குறள் 84

மேற்கண்ட திருக்குறளின் பொருளானது, வீட்டிற்கு வந்தவர்களுக்கு மலர்ந்த முகத்துடன் நல்ல விருந்தோம்பல் செய்பவர்களின் இல்லத்திலே திருமகள் குடியிருப்பாள்.

இந்தக் குறளை விளக்கும் விதமாக ஒரு குட்டிக் கதை உள்ளது.

இந்தக் கதையின் காலம் தமிழ் கடைச்சங்க காலம் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஒரு ஊரில் ஒரு நல்ல மனிதர் வசித்து வந்தார். அவர் ஒரு வியாபாரி, அவ்வப்போது வெளியூர் பயணங்கள் செல்ல நேர்ந்த காரணத்தால் அவருக்கு சரியான வரன் அமையவில்லை.

அப்படி இப்படி பேசி ஒரு பெண் அவருக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். அவளோ கடுமையான ஆணவம் கொண்டவள், குடும்ப உறவுகளை மதிக்கத் தெரியாதவளாக இருந்தாள். ஊரில் பலரும் வேண்டாமென்று ஒதுக்கிய பெண்ணை, வேறு பெண் கிடைக்காமல், திருமணத்திற்குப் பின் மாறி விடுவாள் என்று நம்பி அந்த வியாபாரி மணம் முடித்தார்.

அவளோ மாறவில்லை. வியாபாரிக்கு கவலை.
ஒருநாள் ஒரு சாமியாரைக் கண்டு தன் கவலையை சொல்கிறார்.

சாமியாரும், “சரி வா, வீட்டுக்குப் போய் பார்க்கலாம்” என்று கூட்டிச் செல்கிறார்.

வீட்டிற்குச் சென்றதும் சாமியாரைக் காட்டி, “இவர் மிக சக்தி வாய்ந்த சாமியார், இன்று நம் வீட்டில் உணவருந்த வந்திருக்கிறார்.” என்று வியாபாரி கூற, அவளோ கடும் கோபத்துடன் சமையல் வேலைகளை செய்து விட்டு அரை மனதோடு தடால் புடால் என பாத்திரங்களை உருட்டி சாமியாருக்கும் தனது கணவருக்கும் விருந்தோம்பல் பண்பை மறந்து மரியாதை இல்லாமல் பரிமாறுகிறாள்.

தன் மனைவியைப் பற்றித் தெரிந்த வியாபாரி வழக்கம்போல சாப்பிடுகிறார்.

ஆனால் சாமியாரோ, தனது ஐந்து விரல்களையும் மடக்கிக் கொண்டு சோற்றின் மீது கை வைக்கிறார். அந்தக் கையில் ஒட்டிய பருக்கைகளை சாப்பிடுகிறார்.

சிறிது நேரம் கவனித்த அந்தப்பெண், “ஏன் சாமி முறையா கையில் அள்ளி சாப்பிட்டால் சீக்கிரம் சாப்பிடலாமே? இப்படி விரல்களை மடக்கி விட்டு சோற்றுப் பருக்கைகளை ஒத்தி ஒத்தி எடுத்து எப்போது சாப்பிட்டு முடிப்பீர்களோ?” என்று கேட்டாள்.

அதற்கு அந்த சாமியார்.
“நீ முறையா எல்லாம் செய்தியா தாயே?
ஒரு தாய்க்கு உரியதான, பெண்மைக்கு பெருமை தரக்கூடிய விருந்தோம்பலைக் கூட உன்னால் முறையாக செய்ய இயலவில்லையா?”
என்று கேட்டு இந்தத் திருக்குறளையும் சொன்னார்.

தன் தவறை உணர்ந்த அந்தப்பெண், இனி தான் நல்லவிதமாக குடும்பத்தை அரவணைத்து விருந்தோம்பல் பண்புடன் வாழ்வதாக ஒப்புக்கொண்டார்.

அதே கதை 2024 ல்.

வியாபாரி , கவலையோடு ஒரு சாமியாரிடம் செல்ல, சாமியாரோ, “இதற்கெல்லாம் நான் என்னப்பா செய்வது.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று சொல்கிறார்.

வியாபாரி விடவில்லை.
“சாமியாரின் காலைப்பிடித்து கதறி அழுது, நீங்கள் எங்க வீட்டுக்கு வந்து ஒரு வாய் சாப்பிட்டா எல்லாம் சரி ஆகும்”னு அழுது அழைக்கிறார்.

வேறு வழியில்லாமல் சாமியாரும் செல்கிறார்.

வீட்டிற்குச் சென்றதும் காலிங் பெல் அழுத்துகிறார் வியாபாரி, 5 நிமிடமாகியும் கதவு திறக்காததால் மேலும் இருமுறை அழுத்துகிறார்.
கதவு டமால் என்று திறந்தவுடன், உள்ளேயிருந்து ஒரு குரல்,
“இப்ப இன்னாத்துக்கு இம்மாந்தடவ பெல் அடிக்குற, ஒரு 2 நிமிஷம் நிக்க முடியாதா?”

சாமியார், “யாருப்பா இதானே உன் மனைவி?” என்று வியாபாரியிடம் கேட்க.

“ஆமா, இது யாரு பரதேசி?” என்று அவரது மனைவியின் குரல் குறுக்கிடுகிறது.

சாமியார், “புரியுதுப்பா, இதான் உன் மனைவி.”

வியாபாரி, “சக்திவாய்ந்த சாமியார் மா இப்படிலாம் பேசாத.
நம்ம வீட்டுக்கு சாப்புட வந்துருக்காரு. சாப்பாடு ரெடி பண்ணு.”

மனைவி, “தோடா, ஒரு பரதேசிக்கு ஆக்கிப் போடுறது பத்தாதுன்னு அது இன்னொன்ன கூட்டியாந்துருக்கு.”
“வேற வேலை இல்லையா எங்களுக்கு?”
“சாமியார்னா எதுனா கோவில்ல போயி உண்டகட்டி வாங்கித்திங்காம நீ கூப்டதும் இங்க வந்துருவானா?”

வியாபாரி, “கோபப்படாதமா, நம்ம வீட்ல சாமியார் ஒரு நேரம் சாப்பிட்டா, நமக்கு நல்ல நேரம் வரும். ஏதாவது சிம்பிளா செஞ்சு கொடும்மா போதும்.”

மனைவி, “சரி,சரி அப்படி ஓரமா உட்காரு. சிங்கப்பெண்ணே முடிஞ்சதும் சோறு போட்டுத் தொலைக்கிறேன்.”

சீரியல் முடிந்ததும் இருவரும் சாப்பிட அமர்கிறார்கள்.

அந்தப்பெண்ணின் தவறை உணர்த்துவதற்காக சாமியார் தன் விரல்களை மடக்கி, கையில் சோற்றுப் பருக்கையை ஒத்தி ஒத்தி சாப்பிடுகிறார்.

அந்தப்பெண் கேள்வி கேட்டதும், திருக்குறளை சொல்லலாம் என்று எண்ணியிருந்தார். சிறிது நேரத்தில் சாமியார் கையில் கரண்டியால் ஒரு வலுத்த அடி விழுந்தது.

அந்தப்பெண் தான்:

“அடே கஞ்சாக்குடிக்கிப் பயலே, நீ வீட்டுக்குள்ள வரப்பயே ஒரு வித்தியாசமான வாசம் வந்துச்சு, இப்ப நீ சோறு தின்னுற லட்சணத்துல தெரியுது நீ எவ்வளவு போதைல இருக்கேனு. மரியாதையா எந்திச்சு ஓடிறு” என்று சொல்லிக்கொண்டே மேலும் இரண்டு வலுத்த அடி விழுகிறது.

சாமியார், “நான் ஒரு கருத்து சொல்லலாம்னு அப்படி சாப்பிட்டேன்மா”,

அந்தப்பெண், “பேசாம ஓடிட்டா உன் உடம்புக்கு நல்லது.”

அருகில் அப்பாவியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவனுக்கும் இரண்டு அடி, “ஏன்டா லூசுப்பயலே இவன் ஒரு சாமியாரா, இவன கூட்டியாந்து என்னிய சமைச்சு போடவா சொல்லுற, உனக்கும் இன்னும் பத்து நாளைக்கு சோறு கிடையாது. நான் சொல்றதுக்கு முன்னாடி என்கிட்ட வந்து சோறு கேட்டா விஷத்த வச்சிருவேன் பாத்துக்க.”

வீட்டின் வாசலருகே ஓடிக்கொண்டே சாமியார் கூச்சலிட்டார்.

“படுபாவிப்பயலே! நானே என் பொண்டாட்டி அடி தாங்காமத்தான் சாமியாரா ஆனேன். அப்பவே வரமாட்டேன், வேணாம்னு சொன்னேன், கேட்டானா?”

“சண்டாளி என்னா அடி அடிக்கிறா?
இதுக்கு என் பொண்டாட்டியே பரவால போலயே!”

“இவகிட்ட அடிவாங்கி இன்னமும் நீ குடும்பஸ்தான இருக்கிறேனா நீ பெரிய ஆளு தான்டா.”

“நல்லா இருடா. ஆனா தயவு செஞ்சு எந்த சாமியார்ட்டயும் போயிராத டா, பாவம்.”