Categories
சினிமா தமிழ்

கங்குவா – விமர்சனம்

கங்குவா!

காரசாரமாக இணையதளத்தில் கழுவி ஊற்றிக் கொண்டிருப்பது, ஒரு புறம். சினிமா நல்லாதான் இருக்கு, இது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியில் ஏற்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட வதந்தி என்று முட்டுகள் ஒரு புறம் என கங்குவா பரபரப்பாகப் பேசப்படுகிறது.

கதாநாயகனும் வில்லனும்

இது பிஜேபியின் சதி என்றும் சிலர் பேசுகிறார்கள்.

இத்தனைக்கும் நடுவில் எனது எதிர்பார்ப்புகளைத் தரை மட்டத்தில் வைத்துக் கொண்டு படத்தைப் பார்த்தேன்.

அப்படியிருந்தும் படம் சுமாராகத்தான் இருந்தது.

படம் ஆரம்பித்து ஒரு 25 நிமிடம் செம கடுப்பு என்ற ரீதியில் இருந்தது. சூர்யாவும், யோகிபாபவும், K.S.ரவிக்குமாரும், கிங்ஸ்லியும் வரும் ஒட்டுமொத்த காட்சிகளும் உப்புக்கல்லுக்குப் பெறாதவை. ஆனால் பழைய பாகத்தில் கதை நுழைந்த போது சிறிய ஆறுதல்.

மனதில் ஒட்டாத காட்சிகள்

பெரிய வரலாறு போல ஆரம்பித்தது. ஆனால் ஐந்திணை போல, ஐந்தீவு என்பது ஜிகினா வேலை. போர்த்துகீஸ் வந்து ஐந்தீவைக் கைப்பற்ற நினைத்த கதை எல்லாம் பத்தாம் வகுப்பு பாடத்தில் வந்த கதையைப் பெயர் மாற்றியது போல இருந்தது.

நம்பிக்கைத் துரோகம், சண்டை, கதாநாயகன் அறிமுகம், பாடல், கதாநாயகன் நல்லவன்.
தன்னைக் கொல்ல நினைப்பவனையும் காப்பாற்றுவான் போன்ற அருத பழைய கதையோடு நல்ல பின்னனியில் படம் மெதுவாக நகர்ந்தது.
எப்போது இடைவேளை வரும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. ஏதோ முதல் அரைமணி நேர காட்டு மொக்கைக்கு, இந்தக்காட்டுக் காட்சிகள் பரவாயில்லை.

ஒரு மாதிரியாக ஒரு கதைக்குள் நுழைவது போல ஒரு தோற்றம் இருந்தது. ஆனால் இடைவேளை வந்த போது இவ்வளவு தானா என்ற எண்ணமும் வந்தது.

இடைவேளை முடிந்து படம் ஓடுகிறது, ஓடுகிறது ஓடிக்கொண்டே இருக்கிறது போல தோன்றியது.
எனக்கு அருகே அமர்ந்திருந்த ஒரு குடும்பம் க்ளைமாக்ஸ் ஆரம்பிக்கும் முன்பே கிளம்பிவிட்டார்கள். ஏனென்றால் படத்திற்குள் ரசிகர்களைக் கட்டிவைக்க சரக்கில்லை.

ஒருபுறம் போர் போர் என்று ஊர்மக்களைக் கிளப்பி விட்டு, கதாநாயகன் வாக்கைக் காப்பாற்றிகிறேன் என்று காட்டுக்குள் சென்று காடை முட்டை அவித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படியென்றால் ஊரைக் காப்பாற்றுவேன் என்ற வாக்கு என்ன ஆனதோ?

யானை, சிங்கம், புலிகளோடு கட்டி உருண்டுமுடித்த காரணத்தால், இந்தப்படத்தில் ஒரு முதலை சண்டை வருகிறது. அந்தச்சண்டையிலும் பதட்டமில்லை, அந்த முதலை கடிக்க வந்த கதாபாத்திரத்தின் மீதும் யாருக்கும் இரக்கமில்லை. ஏனென்றால் கதை அப்படியான கதை.

இந்த ஒரு இடத்தில் அனைவரும் கதையோடு ஒன்றியிருக்கக் கூடும்.

வில்லன் பெரிய கொடூரக்காரன். காலை எழுந்தவுடன் கால் லிட்டர் ரத்தம் தான் குடிப்பான் என்று பில்டப் இருந்ததே ஒழிய, சின்ன சின்ன பச்சிலைப்புடுங்கி குழந்தைகள் எல்லாம் அந்தக் கொடூர வில்லன் குரூப்பை பந்தாடுவதால், நமக்கு அந்தக்கும்பலைக் கண்டால், பயம் வரவில்லை. பரிதாபம் தான் வருகிறது.

கதாநாயகனும் நேர்கோட்டில் இல்லாமல், வில்லனும் டம்மியாகி, எதிர்காலத்தில் வரும் சயின்ஸ் கதைக்கும் விளக்கம் இல்லாமல், அதை ஏன் செய்கிறார்கள் என்ற புரிதல் இல்லாமல் கடந்து செல்லலாம்.

காட்சியமைப்புகள், VFX அருமை.
3 D அற்புதம்.

ஒரு தடவை வேண்டுமானால் பார்க்கலாம்.

கார்த்தி கதாபாத்திரம் ஒப்பனை கன்றாவி.
கதாபாத்திரம் நன்றாக இருந்தது. அது கங்குவா பகுதி இரண்டாம். பேசாமல் அந்தப்பகுதியை ஒழுங்காக எடுத்து, நல்ல படமாகத் தந்திருக்கலாம்.

ஏதோ, ப்ரெயின் நெர்வ் சிமிலேஷன் என்ற ஜிகினா வேலை காட்டினார்கள், அதையும், இந்தப் பகைப்பிண்ணணனியும் வைத்து கார்த்தி சூர்யா காம்பினேஷனில் படம் எடுத்திருந்தால், (அந்தக் கதையோடு), ஓடியிருக்குமோ என்னவோ.

Gladiator போன்ற படங்களின் தமிழ் ரசிகர்கள் கம்மிதான். ஆனால் பாகுபலி, போன்ற படங்களின் அனுபவத்தை அனைத்துத் தமிழ் ரசிகர்களும் கொண்டிருக்கிறார்கள். கொண்டாடியும் இருக்கிறார்கள். அப்படியான அனுபவத்தைப் பெற்ற ரசிகர்கள் மத்தியில் இப்படி ஒரு படம் வெல்லும் என்று எப்படி எதிர்பார்த்தார்களோ?

ஒரு படத்தைத் திரையாக்குவதற்கு முன்பு காட்சிகள் எழுத்து வடிவில் கவர்கிறதா என்பதை உணராமலேயே, நேரடியாக 3D, VFX, வைத்துப் படத்தை ஓட்டிவிட முடியாது என்று ஒரு விமர்சகர் எழுதியிருந்ததை உணர்ந்தேன்.

காட்சியின் வடிவமைப்புகள் அவசியம்.

எதுவுமே புதிதாகத் தோன்றவில்லை.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பார்த்திபன் அறிமுகக்காட்சியும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் வேற தரத்தில் இருக்கும். அது புதியதும் கூட. அதையே மக்கள் உதாசீனப்படுத்திய போது, அதையே காப்பி அடித்து வில்லன் அறிமுகம் என்றால் கழுவி ஊத்த மாட்டார்களா? மேலும் அந்தப்படத்தில் இசை மாஸ்டர் பீஸ்.

இந்தப்படத்தில் தகரடப்பா இசை. காதுகளில் நாராசமாய் ஏதோ கத்திக் கொண்டே இருந்த உணர்வு.

ஜோதிகா அவர்கள் நடித்த ராட்சசி படத்தைத் தலையில் வைத்துக் கொண்டாடிய ரசிகர்களைத்தான் அவர், கேவலமான இந்தப்படத்திற்காக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் ரசிகர்களும் சில நேரங்களில் தவறு செய்வதுண்டு். ஆனால் இது அந்த ரகமல்ல.

இது கழுவி ஊற்றப்பட வேண்டிய ரகம் தான்.

ஆதங்கத்துடன் நினைவுகள்.

Lucky bhaskar விமர்சனம் கீழே

மெய்யழகன் விமர்சனம் கீழே