பசுந்தோல் போத்திய புலி அல்ல நான். பசுவும் அல்ல.
நான் நல்லவனா? இல்லை கெட்டவவனா?
இரண்டுமே அல்ல. அதை முடிவு செய்யும் உரிமையும் என்னிடமே உள்ளது. அந்த வகையில் கொஞ்சம் சிறப்பானவன் தான்.
இதுதான் ஒழுக்கம், இதுதான் கலாச்சாரம் என்பதைப் பின்பற்றி எப்போதும் வாழ்ந்தவனில்லை நான். என்னவோ தெரியவில்லை, என்னை யாரும் கேள்வி கேட்கவில்லை.
ஒருபோதும் தனிமனித ஒழுக்கத்தை நான் மீறியதில்லை. என் போக்கில் என் வாழ்க்கை. யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததே இல்லை. யாரையும் கெடுத்ததும் இல்லை. பிறரின் பேச்சுக்கு பயந்து போலி வேடம் போட்டதில்லை. போட விருப்பமும் இல்லை. ஆனால் வேடம் போடுவதே என் அன்றாட பிழைப்பு.
பிழைப்புக்காக வேடம் போடுவதில் பிழை செய்ததில்லை. இனிப்புக்கு சர்க்கரை போதும் என்பதை ஒருபோதும் ஒப்புக்கொள்வதுமில்லை. கருப்பட்டியோ, பனைவெல்லமோ தான் என் தேர்வு.
சற்று கடினம் தான். ஆனால் விரும்பியதை செய்த திருப்தி கிடைக்க சங்கடங்களை சமாளிக்க நான் தயார்.
நக்கீரன் நான் அல்ல. சகுனியும் நான் அல்ல. ஆனால் உண்மையை நக்கீரன் போல உணர்த்த சகுனி போல பல உத்திகளைக் கையாள்வது என் சிறப்பு.
நான் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கு சில காலம் ஆகலாம், நான் தோற்றுப்போவது போல மாய வலைகள் தோன்றலாம், உண்மை ஒரு நாள் வென்று தானே தீரும்?
எதையும் என் விருப்பம் போல செய்கிறேன். சில நேரங்களில் பல பிரச்சினைகள். கைதட்டி சிரிக்கும் இந்த சமுதாயம், அந்த நேரத்தில் நான் கைகட்டி அழுவதில்லை. கைகூப்பி யாரையும் வணங்குவதில்லை. ஆமாம் கொஞ்சம் திமிர் தான்.
கைதட்டி சிரித்த இந்த சமுதாயம், சிறிது காலத்திற்கு பிறகு அதை கைதட்டி வரவேற்கும்.
சாக்ரடீஸையும் கேலி செய்த சமுதாயம் தானே!
நான் பெரிய மகான் அல்ல.
பெரிய படிப்பறிவு இல்லை,
பகுத்தறிவு சிறிதுண்டு!
பொது அறிவும் உண்டு!
நான் “உன்னைப்போல் ஒருவன்”
நல்லவனா? கெட்டவனா?
பதில் தெரியவில்லை.
ஆனால் நான் பதில் கூறிய பின்னர் அடுத்த கேள்வி எழாது
“IAM THE HERO AND IAM THE VILLAIN”
என் பெயர் கமல்ஹாசன்!!!
கமலஹாசன் ரசிகரின் வேண்டுகோளை ஏற்று அவருக்காக நான் கமலஹாசனை சிலாகித்து எழுதியது. சில வருடங்களுக்கு முன்பு எழுதியது.
மீள் பதிவாக நினைவுகள் வாசகர்களுக்காக
அன்புடன் நினைவுகள்.