Categories
ஆன்மீகம் கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஐயப்பனுக்கே தீட்டா? அபாய மூடநம்பிக்கையின் அடுத்த அடி.

ஐயப்ப பக்தர்கள் வாவர் சமாதிக்குச் சென்றுவிட்டு, தரிசனத்திற்கு வருவது தீட்டு என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இணையத்தில் கண்ட செய்தி

இது மாதிரியான விஷயங்களைத்தான் நம் நினைவுகள் பக்கத்தில் தொடர்ந்து விமர்சித்து வருகிறோம்.

நாம் என்றுமே சாமி கும்பிடுவதையோ, மாலை அணிந்து விரதம் இருக்கும் சாதாரண மற்ற பிற விஷயங்களையோ எதிர்த்தோ, கேலியாகவோ பேசியது இல்லை.

திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு இருந்ததா இல்லையா என்பதே உறுதி ஆகாத முன்பு தீட்டுக் கழிக்கிறேன் என்று ஹோமம் நடத்தியதைத்தான் கேள்விக்குள்ளாக்குகிறோம்.

கடவுள் என்பதன் பொருள், அனைத்தையும் கடந்தது என்று கூட வருகிறது. அதாவது ஆச பாசங்களைக் கடந்த ஒரு முன்னாள் மனிதனே இன்று கடவுளாக வணங்கப்படுகிறார்.

சிவன், ஐயப்பன், முருகன், புத்தர், இயேசு, என்று இதில் மதரீதியாக விதிவிலக்கல்ல.

அனைத்தையும் கடந்தவர் இந்த தீட்டு சமாச்சாரத்தை மட்டும் மனதில் பசை போலப் பிடித்துக் கொண்டிருக்கிறாரா என்ன?

கட்டாயம் இல்லை.
கடவுளை இப்படி வணங்கு, அப்படி வணங்கு , இந்தப் பூஜை செய், இந்தப்பரிகாரம் செய், இதை செய்தால் தீட்டு, அதை சரிசெய்ய என்னிடம் மந்திரம் உள்ளது என்பதெல்லாம் சுத்த முட்டாள்தனம்.

மனிதன் ஒழுக்கம் தவறிவிடக்கூடாது என்று மனிதனால் எழுதப்பட்ட சில விதிமுறைகள், எல்லை மீறி குறிப்பிட்ட சாராருக்கு சாதகமாக, சம்பாதித்து தரும்படியாக மாற்றி எழுதப்பட்டு விட்டது.
அதைத்தான் வேதம் என்கிறோம்.

வேதம் என்பது கடவுள் இறங்கி வந்து எழுதி வைத்தது கிடையாது.

கடவுள் என்பவருக்கு, ஆசை பாசம் அருவருப்பு, தீட்டு இதெல்லாம் இல்லை.

அப்படித் தீட்டு இருந்தால் அவர் கடந்த நிலையை அடைந்த கடவுளும் அல்ல.

இத்தனை ஆண்டுகளாக வாவர் சாமியிடமிருந்து வராத தீட்டு இன்று திடீரென வந்துவிட்டதோ?

எத்தனை குருசாமி, எத்தனை கன்னி சாமி, எத்தனை எத்தனை மணிகண்ட சாமிகள் இந்த வாவர் சமாதியைத் தொழுதுவிட்டு, ஐயப்பனை தரிசித்து வந்திருப்பார்கள்.

அப்படியென்றால் எவ்வளவு தீட்டு சேர்ந்திருக்கும் சபரிமலைக்கு. பேசாமல் ஒட்டுமொத்தமாக ஒரு 100 கோடி ரூபாயை அவாளிடம் கொடுத்து புகை போடச் சொன்னால் தீட்டு தீர்ந்து விடுமா?

அல்லது கங்கை நீரை லாரி லாரியாகக் கொண்டு வந்து ஒட்டுமொத்த சபரிமலையையும் ஐயப்பனையும் கழுவி சுத்தம் செய்து தீட்டைப் போக்கி விடலாமா?

என்னங்க இது சுத்த பைத்தியக்கார, அயோக்கியத்தனமாக இருக்கிறதே?

வாவரும், ஐயப்பனும் பாராட்டிய நட்புக்குப் பரிசாக வாவருக்கு ஐயப்பனுக்கு நிகராக சன்னதியும், சமாதியும் உள்ளது. அதை ஒவ்வொரு ஐயப்ப சாமிமார்களும், மத வேறுபாடு இல்லாமல் நல்லிணக்கத்தோடு வணங்கி வருகிறார்கள்.

அந்த நல்லிணக்கத்தில் தீயை வைத்து அதில் குளிர்காயத் துடிக்கும் கும்பல், தீட்டு என்று சொல்லி, அதில் ஒரு பெரிய தொகையையும் அடித்து விடலாம் என்று கணக்கிட்டு இப்படிக் கிளப்பி விடுகிறார்கள்.

சொல்ல முடியாது. பாபர் மசூதி போல, வாவர் சமாதியும் காணாமல் போகலாம்.

கடவுளின் பெயரைச் சொல்லி இப்படி மதக்கலவரங்களுக்குக் காரணமாகும் ஆட்களை கடவுள் தான் தண்டிக்க வேண்டும்.

நாம் அனைவரும் இதுபோன்ற விஷயங்களில் சுயமாக சந்தித்து நல்ல அறிவோடு, ஒரு நல்ல முடிவை எட்ட வேண்டும்.

அன்புடன் நினைவுகள்