கடவுள் நம்பிக்கை.
தெய்வத்தால் ஆகாத காரியமும் கடுமையான முயற்சியால் கைகூடும் என்பது வள்ளுவன் வாக்கு.
பகுத்தறிவு என்பது என்ன சொல்கிறது?
சாமியும் இல்ல பூதமும் இல்ல. கடினமாக உழைத்தால் எதிலும் வெற்றி பெறலாம், மதியால் விதியை வெல்லலாம்.
இதெல்லாம் சரிதான்.
ஆனால் ஒரு சந்தேகம் எழுகிறது. சில ஆயிரம் ரூபாய் கொடுத்து பாட்டுக்கச்சேரியை பார்க்க வருபவனுக்கு உட்கார கூட இடம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு திரும்பி செல்லும் சூழல் வரும்போது, அவன் அந்தக் கச்சேரியின் ஏற்பாட்டாளர்களைத் திட்டுகிறான்.
அந்த ஏற்பாட்டாளர்கள் தான் இதுக்கு பொறுப்பு எடுக்க வேண்டும். பணத்தைத் திரும்பத் தர வேண்டும் என்று கத்திக்கூச்சலிட்டு புலம்புகிறான்.
அதுபோலத் தன் வாழ்வில் இன்று இந்த விஷயம் நடந்து விடும், இனி நம் வாழ்க்கை உயர்ந்து விடும், வறுமை தீர்ந்து விடும், கடன் அடைந்து விடும், நீண்ட நாள் கனவு நிறைவேறிவிடும், லட்சியத்தை அடைந்து விடலாம் என்று நம்பி; உழைத்து, சலித்து, தோல்வி, தோல்வி, தோல்வி என்று வெற்றியின் வாசனையைக்கூட அறியாமல் தன்னுடைய அடுத்தடுத்த முயற்சியை செய்யும் மனிதனுக்கு, பழிபோடுவதற்கோ, திட்டுவதற்கோ ஒரு ஆள் வேண்டாமா?
எல்லாம் சரியாதான் செஞ்சேன்.
ஆனா என் நேரக் கொடுமை என்று பழியை நேரத்தின் மீது போடுகிறோமே?
நமக்கு எதுதான் சரியா அமைஞ்சிருக்கு ?
சரி விடு பாப்போம். இனிமேலாச்சும் ஏதாவது நல்லது நடக்குமா என்று மனம் நொந்து அடுத்த அடி எடுத்து வைக்கத் தடுமாறும் போது அவனுக்கு தடியாக ஒரு நம்பிக்கை வேண்டுமே!
அந்தத் தடி கடவுளோ, பூதமோ ஏதோ ஒன்று.
அவன் அதை மனதில் உற்சாகமாக ஏற்றுக்கொண்டு சரி வென்று விடலாம் என்று முன்னேற எதையாவது நம்பித்தானே ஆக வேண்டும்.
காய்ச்சலில் விழுந்த மகனுக்கு ஆறுதலாக அம்மா சொல்லும் வார்த்தைகள். எல்லாம் கண் திருஷ்டி தான், சூடன் சுத்தி வைக்கிறேன், இனி எல்லாம் சரி ஆயிடும்.
மாத்திரை, மருந்து தான் காய்ச்சலை சரிசெய்யும் என்ற அறிவியல் அந்த அம்மாவுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் தம் மகனுக்கு கண்திருஷ்டி கழிக்கிறேன் என்று ரசாயனத்தைக் கொளுத்துவதால் பயனில்லை என்று அந்தம்மாவிடம் சொல்லி பயனில்லை.
அது அவர்கள் மகனின் மீதான பாசத்தின் வெளிப்பாடு.
தன்னால் முடிந்ததை மகனுக்கு செய்யும் மனதிருப்தி.
அதுபோலத்தான். சில நேரங்களில் சில விஷயங்கள்.
ரொம்ப குடும்ப சூழ்நிலை மோசமாக உள்ளதெனில் குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வாங்க, திருப்பதி போயிட்டு வாங்க திருப்பம் நடக்கும், திருத்தனி முருகனைப்பாத்துட்டு வாங்க என்று சிலர் கூறுவது கேலிக்குரியதல்ல.
திருப்பதி போய் வந்தவர்களுக்குத் தெரியும். அந்த கற்சிலையைக்காண எவ்வளவு மெனக்கெடல் என்று!!
உண்மையிலேயே எப்பேர்ப்பட்ட மனக்குழப்பத்தில் இருப்பவனுக்கும் கூட, திருப்பதியில் நுழைந்த பிறகு மனதில் ஓடும் விஷயம் ஒன்றுதான்.
எப்ப சாமிய பாத்துட்டு கீழ்திருப்பதி போவோம்?
திருப்பதி பெருமாள் கேட்டதைக்கொடுப்பார் என்று நான் கண்டிப்பாகக்கூறமாட்டேன். ஏனென்றால் எனக்கு அப்படி ஏதும் கிடைத்தது இல்லை. ஆனால் அந்த அனுபவம் கிடைத்திருக்கிறது.
பழைய பிரச்சினையை சிறிது மறக்க அந்தப்பயணம் ஒரு வாய்ப்பு.
சினிமாக்களில் மிகப்பெரிய பிரச்சினையில் இருக்கும் கதாநாயகர்கள், சாராயக்கடைக்கும், உடற்பயிற்சி நிலையத்திற்கும் செல்கிறார்கள.
ஆனால் படம் ஓட வேண்டும் என்று கோவிலுக்கு செல்கிறார்கள், பூஜை போட்டு தான் படப்பிடிப்பையே துவங்குகிறார்கள்.
இது அது போன்ற விதண்டாவாதம் அல்ல.
இது எனது சுய உணர்வு. நான் எத்தனையோ கோவில்களுக்கு விருப்பமே இல்லாமல் கால்கடுக்க சென்று வந்தது உண்டு.
எந்த தெய்வமும் இதுவரை நான் கேட்டதைத் தந்ததில்லை.
(தாய் தந்தை குரு என்ற தெய்வங்களைத் தவிர்த்து.)
ஆனால் ஒரு விஷயம். கோவில்களைத்தேடிச் சென்ற
அந்தப்பயணங்கள் ஒரு மகிழ்ச்சியை, ஒரு அனுபவத்தை, ஒரு நிம்மதியைத் தந்திருக்கின்றன.
அதற்காக அந்தப் பயணங்களை இனிதாக ஏற்றுக்கொள்ளலாம்.
வாழ்வில் தோற்று தோற்று பழகி பயந்து கிடக்கும் சாமானிய மனிதனால் சாமியும் இல்ல, பூதமும் இல்ல என்று பேச முடியவில்லை.
உண்மையிலேயே ஒருவேள கடவுள் இருந்து, அவரு நமக்கு ஏதாவது தர வரும் போது, அவர நாம ஏதாவது அசிங்கமா திட்ட. வந்தவரு காண்டாகி நம்மள செஞ்சது போதாதுன்னு இன்னும் பயங்கரமா செஞ்சுட்டா என்ன பண்றதுன்னு பயம்!
வயசாக ஆக எல்லாம் வருமோ?
கைதி படத்துல கார்த்தி சொல்ற மாதிரி சில விஷயங்கள இழந்து நொந்து போகும் போது, இல்லாமல் தவிக்கும் போது கடவுள் நம்பிக்கையும் வந்துருமோ?
நடுக்கடலில், கப்பலுக்குள்ளே இருப்பவன் துடுப்பை ஏன் தேடப்போகிறான். கப்பல் கவிழ்ந்து மீட்புப்படகைத் தானே இயக்கினால்தான் வாழமுடியும் என்ற நிலை வரும்போது துடுப்பைத் தெய்வமாக மதித்துத் தேடித்தானே ஆக வேண்டும்!?
நீந்தத் தெரியும் என்ற தெனாவட்டில் படகையும் துடுப்பையும் உதறித்தள்ள முடியுமோ? உண்மையிலேயே கடவுள் இருந்தால் துடுப்பாக வரட்டும்.
ஒருவேளை அதை வைத்துத் தப்பித்துக்கரையேறினால் மொட்டை கூட அடித்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் வழக்கம்போல ஜாலி ட்ரிப்பாக போக வேண்டியது தான்.
கடவுள் என்ற துடுப்பு இல்லாத போது, முயற்சி எனும் நீச்சலை முடிந்தவரை செய்ய வேண்டியது தான்.
கடவுள் காப்பாத்துறாரோ, இல்ல நாமளே தான் நம்மள காப்பாத்திக்கனுமோ.
ஒரு விஷயம்.
எவன்கிட்டயும் போயி எந்தக் கருத்தையும் திணிக்க முடியாது.
அவனவன் அவன் சூழ்நிலைக்கு எதை ஏற்றுக்கொள்வானோ அதை தான் ஏற்றுக்கொள்வான்.
ஒரு மன ஆறுதலுக்கு வேணும்னா, நம்ம மனசுல இருப்பதை பார்த்து வெளியே சொல்லலாம் இந்தக்கட்டுரை மாதிரி.
கருத்துலாம் பேசி யாரையும் மாத்த முயற்சி பண்ணா நமக்கு இன்னும் மனபாரம் அதிகமாதான் ஆகும்.
கடவுள் இருக்காரா இல்லையானு எனக்குத் தெரியாது.
ஆனா இந்த விஷயம் எனக்கு 100 சதவீதம் தெரியும்.
நிறைய அனுபவமும் இருக்கு.
சாமி இதைக்கொடுக்கும்னு கோவிலுக்குப் போகாம, சர்ச் மசூதிக்குப் போகாம, ஒரு மன ஆறுதலுக்காக, ஒரு நிம்மதிக்காக, இல்ல ஒரு பயண அனுபவத்துக்காக போறதே நல்ல பகுத்தறிவு தான்.
கோவிலுக்கு போகவே கூடாதுங்கிறது இல்ல!
கோவிலில் கிடைக்கிற மாதிரி புளியோதரை பொங்கல் வெளில கிடைக்காதுங்க! சர்ச்ல அப்பம், ஒயின். மசூதில நோன்பு கஞ்சி.
திங்குற ஐட்டங்கள்ல எந்தப்பாகுபாடும் இல்லாத மாதிரி, என் சாமி இதுன்னு அடிச்சுக்கிட்டு சாவாம கடவுள்லயும் பாகுபாடு இல்லாத, மனிதன் மனிதனாக வாழுறதுக்காக இறைவன் இருக்குமிடத்தைத் தேடிச்செல்வான் எனில் அதுவே பெரிய சீர்திருத்தம் தான்.