சொர்க்கமே என்றாலும்…
இதுக்கப்புறம் யாருக்கும் விளக்கத் தேவையில்லை.
என்னைப் போலவே இதை வாசிப்பவர்களுடைய எண்ணமும் தங்களது சொந்த ஊருக்குச் சென்று இந்நேரம் வீட்டின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும்.
பாவம் அந்த வீடு தான் நம்மை விட்டுப் பிரிந்து ஏங்கிக் கிடப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும்.
ஆனால் அந்த வீட்டிற்குத் தெரியாது, அதை விட்டுப் பிரிந்த காரணத்தால் நாம் ஒவ்வொரு நாளும் எப்படியெல்லாம் வாடுகிறோம், தேடுகிறோம் என்று.
பிழைப்புக்காக வந்த ஊரில் கால் கடுக்கவோ, அல்லது மூளையைப் பிழியும் அளவிற்கோ வேலை செய்து விட்டு, அன்றாடம் ஒரு சுழற்சியில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்பம் நமக்கும் ஊர் ஞாபகத்தைத் தராமல் போகாது.
எனது சொந்த அனுபவத்தைச் சொல்கிறேன்.
நான் கோயம்புத்தூரில் தங்கிப் படித்தபோது, ஊருக்குப் போகாத நாள் தவிர்த்துப் பிற நாட்களில் காந்திபுரம் பேருந்து நிலையத்தையோ, அல்லது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தையோ கடக்கும் போது எங்கள் ஊர் செல்லும் பேருந்து இருக்கும் பகுதியைத் தவிர்த்து விடுவேன்.
ஏனென்றால் ஊர் பேருந்தைப் பார்த்தால் மனது குழந்தை போல படபடக்கும். அதில் ஏறிப்பயணித்தால் காலையில் ஊருக்குப் போயிரலாமே என்று.
நாள் போகப் போக அவையெல்லாம் பழகிப் போய் மனது மரத்துப் போய் விட்டது.
சென்னை குடியேறிய பிறகு சாதாரணமாகவே அடிக்கடி ஊர்ப்பேருந்துகளைக் கவனிக்க இயலும்.
குறிப்பாக திருவான்மியூர் டு திருநெல்வேலி, திருவான்மியூர் டு தூத்துக்குடி, ஆகிய பேருந்துகளை அடிக்கடி காலையிலோ, அல்லது மாலையிலோ கவனிப்பது இயல்பு.
ஆனால் மற்ற பிற பேருந்துகளைப் போல அல்லாமல் இந்தப் பேருந்துகளைப் பார்க்கும் போது ஏதோ சிறிய ஒரு மகிழ்ச்சியும் உள்ளுணர்வும் ஏற்படும்.
அந்தப் பேருந்தில் இருக்கும் முகங்களைப் பார்க்க கண்கள் முயற்சிக்கும். ஏனென்றால் அவை நம்ம ஊர் முகங்கள் என்று.
சில நேரங்களில் அந்தப்பேருந்தை சிறிது தூரம் துரத்திக் கொண்டே பின்தொடர்வதும் உண்டு.
இன்றும் அது போலவே மாலை நேரத்தில் அலுவல் முடிந்து திரும்பிய போது, இரண்டு திருநெல்வேலி பேருந்துகள். அதிலும் ஒரு பேருந்தில் வழி தரமணி, திருச்சி, மதுரை, கோவில்பட்டி என்று மின்சார விளக்குப் பலகை.
மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத நெருடல்.
இந்தப் பேருந்தில் செல்பவர்களுக்கு எல்லாம் இன்று ஊருக்குப் போகக் காரணம் இருந்தது போல நமக்கு இல்லையே என்று.
ஊருக்குப் போகும் அனைவருக்கும் மகிழ்ச்சி ததும்பிய காரணங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை.
பணி நிமித்தமாகவோ, வேறு ஏதோ மருத்துவ காரணங்களுக்காகவோ கூடப் போகலாம்.
இதெல்லாம் மூளைக்குத் தெரியும் ஆனால் மனது ஒரு குழந்தை தானே?
அதற்கென்ன, எதையாவது கிளப்பி விட்டு நம்மை காயப்படுத்துவதில் இந்த மனதிற்கு அவ்வளவு விருப்பம் போல.
இப்படி இந்தப் பேருந்துகளைக் கடக்கும் போது என்றாவது ஒரு நாள் மனது இப்படிக் குழந்தையாக மாறி அடம்பிடிப்பது இயல்பு தான்.
ஆனால் என்ன செய்வது ? பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர் என்ற தலையெழுத்திற்கு நானும் விதிவிலக்கல்ல.
சொர்க்கமே என்றாலும்………….
ஏக்கத்துடன் நினைவுகள்.