Categories
கருத்து தமிழ் நினைவுகள்

வாழ்க்கை அனுபவம்: அன்பை விதைப்போம்

சமீபத்தில் வெளிவந்த மெய்யழகன் என்ற திரைப்படத்தை மக்கள் வெகுவாகப் பாராட்டியது நம் அனைவருக்கும் தெரியும்.

இது ஒரு நல்ல ஒற்றுமை எண்ணம் கொண்ட சமுதாயத்தை நமக்குக் காட்டுகிறது.

ஆம். ஒரு நல்ல இராணுவ வீரனைப்பற்றிய படத்தைப் பார்த்து நாம் அனைவரும் பாராட்டுவது ஒரு நல்ல தேசப்பற்று மிக்க சமுதாயத்தைக் காட்டுவது போல, குடும்ப உறவுகள் விட்டுப் போகக்கூடாது என்ற ரீதியில் எடுக்கப்பட்ட அந்தப்படம் இத்தனை வெகுவாகப் பாராட்டப்படுவது நல்ல ஆரோக்கியமான ஒற்றுமையை நோக்கும் சமுதாயத்தைக் காட்டுவதாகத் தானே அர்த்தம்.

பணிநிமித்தமாக நாமெல்லாம் இயந்திரங்களாகிப் போனாலும் கூட, தனித்தனியாக தாத்தா பாட்டியைக் கூடத் தவிர்த்து விட்டு வாழ்ந்தாலும், இன்னும் கூட உறவுகளை விட்டுக் கொடுக்காமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் வழக்கம் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறது.

அண்ணன் தம்பிக்குள், அக்கா தங்கைக்குள், சொத்துத் தகராறு, பணத் தகராறு என்று எத்தனை தகராறுகள் வந்தபோதிலும் எங்கோ இதயத்தின் ஒரு மூலையில் அவர்களின் அன்பு ஒழிந்திருக்கத்தான் செய்யும். மூளையின் ஒரு பகுதியில் அவர்களின் நல்ல நினைவுகள் இல்லாமல் இருக்காது.

வேண்டாதவற்றைத் தூக்கி எறிந்து விட்டு நல்லதை வீட்டுக்குள் வைத்துக் கொள்ளத் தெரிந்த நமக்கு வேண்டாத கோபத்தை, வெறுப்பை, கசப்பான அனுபவங்களை, சண்டைகளைத் தூக்கி எறிந்து விட்டு நல்ல எண்ணங்களை நமநு மூளையில் வைத்துக் கொண்டு நம்மோடு உறவாட நினைக்கும் நல்ல உறவுகள் ஏதாவது சிறு தவறுகளைச் செய்திருப்பினும் அதை மன்னித்து அவர்களிடம் அன்பு காட்டப் பழகிவிட்டால், திரையில் வரும் மெய்யழகனைப் பார்த்து அதிசயிக்கத் தேவையில்லை.

இந்த சமுதாயம் பணம் பணம் என்று சீரழிந்தி விட்டது. இதில் அன்பு இல்லை, பாசம் இல்லை என்று போகிற போக்கில் நாமும் சுயநலமாக வாழ்வதுதான் காலத்தின் கட்டாயம் என்று யாராவது பேசினால் சற்றே சிந்தித்துப் பாருங்கள். ஒரு வெள்ளமோ, புயலோ வந்தபோது எத்தனை உறவுகள் நமக்குக் கைகொடுத்து உதவியது என்று.

ஏமாற்றுபவர்கள் ஒருபுறம் அதிகரித்து விட்டது உண்மைதான். பணத்திற்காக கழுத்தை அறுப்பவர்களும் இங்கே உலவிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நாம் எதற்காக ஆறு அறிவு கொண்டு படைக்கப்பட்டிருக்கிறோம்?

உண்மையான அன்பை மனதில் வைத்துக்கொண்டு சூழ்நிலை காரணமாக நம்மிடம் சண்டையிட்டுப் பிரிந்து விட்ட உறவிகளைக் கூட அடையாளம் காணத்தெரியாமல் இருப்பதற்கா? அல்லது தாத்தா, அப்பா போட்ட சண்டைகளின் காரணத்தால் பிள்ளைகள் வரை உறவை துண்டிப்பதற்கா?

உறவுகளில் வரும் விரிசல்களை உள்ளிருக்கும் அன்பு சிலந்தி வலை பின்னுவது போல சரிசெய்யத்தான் முயலும். நம்முடைய கோபம் தான் அந்த சிலந்தி வலைக்குத் தீமூட்டி நம்மை மனிதர்களாகவே வாழ விடாமல் தடுக்கிறது.

“எனக்காக அவய்ங்கள மன்னிச்சு விட்டுருங்க அத்தான்” என்று அந்த கதாபாத்திரம் கேட்பது பாசத்தின் வெளிப்பாடு.

சொத்து ஆசை பிடித்த அந்தப் பேய்களால் அந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு ஏதும் நல்லது நிகழப்போவதில்லை. அவர்களை மனதில் வைத்துக்கொண்டு தனக்குப்பிடித்தமான உறவுகள் தன்னையும், தன்னைப் போன்ற மற்ற நல்ல உறவுகளையும் வந்து பார்த்து உறவாடாமல் விலகிப் போவதால் தனக்கு எவ்வளவு வலி ஏற்படுகிறது என்பதையே அந்த வார்த்தைகள் உணர்த்துகிறது.

நாமெல்லாம் கூட அதுபோல சிறு சிறு விஷயங்களைப் பெரிதாக்கி, ஒரு சில நல்ல உறவுகளை, சூழலை, இழந்திருப்போம்.

உதாரணமாக, அந்த ஆளு வந்தா நான் வரமாட்டேன். அந்த ஆளு மூஞ்சியில என்னால முழிச்சிக்கிட்டு இருக்க முடியாது என்ற வார்த்தைகளை நம்மில் பலர் எங்காவது பேசியிருப்போம்.

அந்த ஆளு மூஞ்சியைப் பார்க்கக் கூடாது என்று இந்த ஆளை ஏன் நாம் காயப்படுத்துகிறோம் என்பதை யோசிப்பதில்லை.

நமக்கு என்ன தேவை என்றால், அந்த ஆள் கெட்டவன், நான் அவனோடு பழகுவதில்லை.
அதனால் நீயும் அவனை விலக்கி விடு.
அல்லது அவனோடு நீர் பழகினால் என்னோடு உறவாடாதே என்ற ரீதியில் நமக்குப் பகைவரை, நம் உறவுக்கும் பகைவராக்க நினைக்கிறோம்.

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்று இணையத்தில் முகமறியா ஆட்களோடு அளவளாவும் இந்தக்காலத்தில் இப்படி வன்மத்தை வைத்துக் கொண்டு வாழ்வது சரியா?

அப்படி என்ன பெரிய பகை?

சொத்துத் தகராறு, பணப்பிரச்சினை தான் பிரதானம்.
இறந்த பிறகு அரைஞான் கயிறும் கூட அறுக்கப்பட்டு விடும் என்பதை நன்கு அறிந்த நாம் தான் பணத்துக்காக பல உறவுகளிடமும் சண்டையும் பகையுமாகத் திரிகிறோம்.

ஏதாவது ஒரு சூழலில் உங்களைத் தகாத முறையில் பேசிவிட்டார்களா? சற்றே சிந்தித்துப் பாருங்கள். அவர்களின் ஆழ்மனதிலிருந்து அந்த வார்த்தைகள் வந்திருக்குமா அல்லது கோபத்தில் வந்திருக்குமா என்று. இதைப் பகுத்தறியத்தானே நமக்கு ஆறறிவு?

அதையும் தாண்டி உங்களை ஒருவர் ஆழமாக மன்னிக்கவே முடியாதபடி காயப்படுத்தியிருந்தால், அவர் ஒருவரைத் தவிர்த்து அவரோடு சம்பந்தப்பட்ட அனைவரிடமும் யதார்த்தமாக சிரித்துப் பழகி அன்பு காட்டிப் பாருங்கள். மிருகமும் கூட மனிதனாகும்.
அந்த கேடு கெட்ட மனிதரே கூட திருந்தி உங்களிடம் உங்கள் அன்புக்காக சரண்டைவார்.

அன்புக்கு அன்னை தெரசா என்று எத்தனை காலம் தான் பேசிக்கொண்டிருப்போம்?

அன்பு காட்டுவதற்கு எதுவுமே தடையில்லை.
பணமோ, பொருளோ, பதவியோ தேவையில்லை.

சாதாரண பிச்சைக்காரன் கூட தனக்குக் கிடைத்த சாதத்தில் சிறு பங்கை அளித்து ஒரு தெரு நாய்க்கு அன்பு காட்டலாம்.

நாமெல்லாம் மேலோட்டமாக ஒரு பரபரப்பான பாசமில்லா சமுதாயமாகத் தெரிந்தாலும். அடிப்படையில் நாம் யார் என்பதை அவ்வப்போது உணர்கிறோம்.

எப்போதும் அப்படியே இருக்கலாமே!

நல்லார் ஒருவரின் பொருட்டு மழை பெய்யுமெனில் இங்கே வெள்ளம் வந்து சுழற்றி அடிக்குமளவிற்கு நல்லவர்கள் ஒழிந்துகொண்டு தானே இருக்கிறார்கள்?

தைரியமாக வெளியே வரட்டும் அந்த நல்லவர்கள்.
சமுதாயத்திற்கு சாமர்த்தியசாலி தான் தேவை, வல்லவன் தேவை, நல்லவன் தேவையில்லை என்று சொல்லி தயவு செய்து அவர்களை ஒழித்து விடாதீர்கள்.

அன்புடன் நினைவுகள்.