Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

கோவில் யானையின் கோவம் – யார் தவறு?

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி, பாகன்கள் இருவர் பலியான சம்பவம் பரவலாகப் பேசப்படுகிறது.

இது சம்பந்தமாக வலைதளத்தில் சில கருத்துகள் பரவி வருகிறது. அதாவது மிருக குணம் கொண்ட காட்டு மிருகமான யானை வளர்க்கத் தகுந்ததல்ல.
அதை அதன் போக்கில் விடுவதே சரி. இப்படி கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு வந்து வேடிக்கை காட்டி, சம்பாதிப்பது தவறு என்ற ரீதியில் பலரும் பேசி வருகின்றனர்.

இந்த விஷயத்தில் நாமும் அதே பக்கத்தில் தான் நிற்கிறோம். பல நேரங்களில் பக்தி என்பது மூட நம்பிக்கையாக உருமாறுவதைக் கண்டித்து நாம் சில கட்டுரைகளை எழுதியிருக்கிறோம். இதுவும் கிட்டதட்ட அதே ரகம் தான்.

யானை என்றால் தெய்வம், யானை முகத்தான், கணேசன் என்று யானையை ஏதோ காரணத்துக்காக, தெய்வமாக்கி அதனிடம் ஆசிர்வாதம் வாங்குகிறோம், அதன் வாயில் தண்ணீரை ஊற்றி குழந்தைகளின் மீது பொழிச்சென்று துப்ப வைக்கிறோம்.

அதன் வாயில் என்ன கிருமி இருக்கிறதோ, அது அப்படியே குழந்தைகளை வந்து சேரும் என்பதை அறியாமல் ரொம்ப மகிழ்ச்சியாகப் பணம் கொடுத்து அதனைச் செய்கிறோம். இதில் நானும் விதிவிலக்கல்ல.

யானை மீது சவாரி, யானை காறித்துப்புவது, ஆசிர்வாதம் வாங்குவது, யானைக்கு தோசை சுட்டுக் கொடுத்தது வரை நானும் செய்திருக்கிறேன்.

ஆனால் அறிவைப் பயன்படுத்தாமல், நாம் இந்த யானைகளின் விஷயத்தில் உணர்வுப்பூர்வமாக அதுகளோடு யதார்த்தமாகிப் போனோம்.

திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை

எலி, பிள்ளையார் வாகனம் என்று எலியை யாரும் வளர்ப்பதில்லை. ஏனென்றால் அவைகளுடைய நேரடிக் கெடுதல் நமக்குத் தெரியும்.

நாய்கள் பைரவர் என்று சொல்லி, யாரும் கோவிலில் நாய்களை வளர்ப்பதில்லை. ஏனென்றால் நாய்களை வைத்து ஆசிர்வாதம் செய்து கல்லா கட்ட முடியாது.

தவிர யானை என்றால் ஒரு பெருமை.
நாய் என்னத்த? அப்படியான எண்ணமும் இருந்திருக்கலாம்.

எப்படியோ, இந்த யானைகள் மத ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், தெய்வமாக, நட்புணர்வோடு பழகும் விளையாட்டு மிருகமாகப் பரவலாக கோவில்களில் வளர்க்கபடும் கலாச்சாரம் நம்மிடைய உள்ளது.

ஆனால் இது போன்ற சில விபரீதங்கள் நிகழும் போது நாம் பாடம் படிக்க வேண்டியிருக்கிறது.

என்னதான் இருந்தாலும் மிருகம் மிருகம் தான்.

நீங்க பட்டையைப் போட்டாலும் சரி, நாமத்தைப் போட்டாலும் சரி அது விட்டையை நினைத்த இடத்தில் போடத்தான் செய்யும்.

இது மிருகம். இது வாழ வேண்டிய இடம் காடு என்பதை வரையறுத்து, அவைகளை அவகைளின் போக்கில் விடுவதே சரி.

வன விலங்குகளுக்கு உணவளிப்பதே குற்றம் என்ற ரீதியில் சட்டங்கள் கடுமையாக இருக்கும் போது யானைகள் மட்டும் கோமாளியா?

மாற வேண்டியது நாம்தான்.
யானைகள் அல்ல.