Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

நடப்பு அதிசயம்- கதவில்லா கிராமம்.

நம்மில் பலர் இதை எங்காவது கேள்விப்பட்டிருக்கலாம் சிலர் அறிந்திருக்கலாம்.
ஆனால் தெரியாதவர்களுக்கு இது அதிசயம் தான்.

தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

சமீபத்தில் தமிழில் வெளியான நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் என்ற படத்தில் கூட ஒரு ஒழுக்கமான கிராமத்தைப்பற்றி காட்டியிருப்பார்கள்.
ஆனால் அதைவிட ஒழுக்கமான கிராமம் நிஜத்தில் இன்றளவும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

நாங்க இருக்கோம் என்கிறார்கள், இந்த சனி சிங்னாப்பூரார்கள்.

ஆமாம். மகாராஷ்டர மாநிலம், அஹமத் நகர் மாவட்டத்திலுள்ள சனி சிங்னாப்பூர் என்ற கிராமம் தான் அது.

அதென்னப்பா பேருல சனி. அட பெயரில் மட்டுமல்ல, இந்த ஊரின் ஒட்டுமொத்த ஒழுக்கமே சனி பகவானால் தான்.

கதவில்லா கிராமம்- கோப்புப் படம்

அப்படி என்ன ஒழுக்கமாக வாழ்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?

இந்த ஊரில், வீடு, கடை, வங்கி என எதற்கும் கதவுகளே கிடையாது. வீட்டிற்குள் இருக்கும் பணப்பெட்டிகள் பூட்டப்படாது.

அப்படியிருந்தும் இங்கே யாரும் திருடுவதோ, ஒழுக்கம் தவறுவதோ இல்லை.

சில பல வருடங்களாக இந்த ஊரின் க்ரைம் ரேட், அதாவது குற்ற நிலவரம் பூஜ்ஜியம்.

சிறிது அல்ல, இது மிகப்பெரிய ஆச்சரியம் தருகிறது அல்லவா?

வடக்கன் வடக்கன், குற்றவாளி வடக்கன், திருடன் வடக்கன் என்று பேசிப் பழகிய நமக்கு இது இன்னும் மிகப்பெரிய அதிர்ச்சி தானே?

கதவில்லா வீடு படம் -1

சரி இந்த ஊருக்கு அப்படி என்னதான் ஆச்சு?
ஏன் இப்படி ஏதோ வேற்று கிரகத்தில் வாழ்வதைப்போல வாழ்கிறார்கள் என்பதைப் பார்ப்போமா?

ஒரு மனிதனை நல்வழிப்படுத்தவது எது?
ஆன்மீகம் தானே?

அப்படி ஆன்மீகத்திலிருந்து தவறுபவனை திருத்தி மீண்டும் நல்வழிக்குக் கொண்டு வருவது?
தண்டனை.

இது இரண்டும் இந்த ஊர் மக்களிடையே பரம்பரை பரம்பரையாக வழிப்படுகிறது, நம்பப்படுகிறது.

சனி பகவான், இந்த ஊர் மக்களின் கனவில் வந்து நான் இந்த ஊருக்குக் காவலன், என்னை மீறி யாரும் இங்கே எந்தக்குற்றமும் செய்ய இயலாது.
அப்படிச் செய்தால் தக்க தண்டனை கிடைக்கும் என்று சொல்லியருப்பதாக சொல்லப்பட்ட கதை, பல தலைமுறைகள் கடத்தப்பட்டு இன்றும் நம்பப்படுகிறது.

மேலும் அந்த ஊரில் திருட்டு செய்த ஒருவரின் பரம்பரையில் இதுவரையிலும் பிறப்பவர்கள் அனைவரும் கண் குருடாகவே பிறப்பதாக இன்றளவிலும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் அறிவியல் ரீதியாக ஏதாவது சொல்லப்பட்டாலும் அந்த ஊர் மக்கள் என்னவோ, அது சனி பகவானின் செயலாகத்தான் கருதுகிறார்கள்.

இந்த ஊர் மக்களுக்கு பணத்தின் மீது பெரிய பற்று கிடையாது. பெரும்பாலானவர்களின் தொழில் கரும்பு விவசாயம் தான். மேலும் இந்த ஊரில் சமீபத்தில் திறக்கப்பட்ட வங்கிக்கும் (UCO-2021) கூட கதவு கிடையாது.

நாமெல்லாம் சனி பகவானை எதிரில் நின்று கும்பிடக்கூடாது என்று சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் சனி பகவானை பூஜிப்பார்களாம்.

கதவில்லா வீடு படம்-2

ஆன்மீகமோ, அல்லது அதையும் தாண்டிய மூடநம்பிக்கையோ. ஆனால் ஒரு நல்ல அதிசயிக்கத்தக்க ஒழுக்கமான சமுதாயத்தை உண்டுபண்ணிய விதத்தில் சிறப்பு.

இப்படி நல்லதைச் செய்தால் மூடநம்பிக்கையைக் கூடப் போற்றலாம்.

அன்புடன் நினைவுகள்