Categories
சினிமா தமிழ்

திரைவிமர்சனம்: பிரதர் – நேற்று போட்ட மசால் வடை

தீபாவளி போட்டியாக களமிறங்கிய 4 படங்களில் 2 படங்கள் தரமானதாகவும், இரண்டு படங்கள் சுமார் ரகமாகவும் வந்திருக்கின்றன.

அப்படியான ஒரு சுமார் ரகப் படம் தான் ஜெயம் ரவி நடிப்பில் வந்துள்ள பிரதர் திரைப்படம்.

இயக்குனர் திரு.ராஜேஷ் அவர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

இயக்குனர் ராஜேஷ் அவர்களின் படம் பற்றி மக்கள் கொண்டிருக்கும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே இந்தப்படமும் அமைந்துள்ளது.

க்ளைமாக்ஸ்ல் துவங்கி பின்னோக்கிப் பயணித்து இந்நாளில் வந்து நிற்கும் கதை.

கதாநாயகன் தப்பானவாகப் பார்க்கப்பட்டு பிறகு அவனை அவனே சரிசெய்து கொண்டு கதாநாயகனின் மாமனாரே கதாநாயகியைக் கதாநாயகனுக்குத் திருமணம் செய்து வைக்கும் அதே பழைய கதை புதிய பின்னோட்டத்தில்.

இந்தப்படத்தைப் பார்ப்பதற்கு எந்தக்காரணமும் இல்லை.

பாவம் ஜெயம் ரவியும் இந்தப்படக்குழுவும் என்ற காரணத்திற்காக மட்டுமே பார்க்கலாம்.

மற்றபடி கதை ரீதியாக பாஸ் என்ற பாஸ்கரனுக்கும் இந்தப்படத்துக்கும் எனக்குப் பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. ஆட்களை மாத்தி உறவுமுறைகள் மாற்றப்பட்டிருக்கிறதே ஒழிய வேற எதுவுமே மாறவில்லை. கதாநாயகன் டிகிரி முடிக்கவில்லை என்பது கூட மாறவில்லை.

அந்தப்படத்திலாவது நகைச்சுவை தரமானதாக இருந்தது.

ஆர்யா, சந்தானம் மட்டுமல்லாது, மொட்டை ராஜேந்திரன், அவரது மகன், நயன்தாரா, நயன்தாராவின் அப்பா, ஆர்யாவின் அண்ணன் என ஆளாளுக்கு நகைச்சுவையில் கலக்கியிருந்தார்கள்.

இந்தப்படத்தில் எல்லா கேரக்டரையும் நகைச்சுவை செய்ய வைக்கிறேன் என்று எரிச்சலைக் கிளிப்பியிருக்கிறார்கள்.

ஏதோ ஜெயம் ரவியின் செய்கைகளைக் கண்டு ஆங்காங்கே சிரக்கலாம்.

ராஜேஷ் படத்தில் மாமானார் கேரக்டர் வழக்கமாக தனது மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்ப்பதும், அந்த மாப்பிள்ளை இறுதிக் காட்சியில் மாமனார் முகத்தில் சிகரெட் அடித்து ஊதுவதும் என அந்தக்காட்சியைக் கூட அப்படியே வைத்திருக்கிறார்கள்.

ஏன்யா எங்களையெல்லாம் பாத்தா கூமுட்ட மாதிரி இருக்கா?

ஒரு உணவகம் சென்று நல்ல பிரியாணி சாப்பிடுகிறோம். அது மிகவும் பிடித்துப் போனதால் மறுநாளும் அந்த உணவகம் செல்கிறோம்.

அவன் நேற்று செஞ்ச மிச்ச பிரியாணியை சூடு செய்து, வெங்காயத்தை மட்டும் மாற்றி நம் இலையில் வைத்தால் எவ்வளவு கோபம் வரும் நமக்கு அதுதான் இங்கேயும் நிகழ்ந்திருக்கிறது.

தீபாவளி விடுமுறையில் எல்லாம் வெட்டியாக இருப்பார்கள், படம் என்று எதை எடுத்துக் கொடுத்தாலும் பார்த்து விடுவார்கள் என்று தமிழ் சினிமா ரசிகர்களைக் கூமுட்டையாக்கிய இந்தப் படக்குழுவை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

2 மணி நேரமும், டிக்கெட் பணமும் தண்டம்.

படத்தின் ஒரே ஆறுதல் மக்காமிஷி பாடல்.

மற்ற பாடல்களும் நாராசம். என்னங்க ஹாரிஸ் நீங்களுமா?

தயவுசெய்து பணத்தை வீண்டிக்க வேண்டாம்.

அக்கறையுடன் நினைவுகள்

மேலும் சினிமா விமர்சங்கள் இங்கே