Categories
விளையாட்டு

பார்டர் – கவாஸ்கர் கோப்பைத் தொடர் நினைவுகள் 

கிரிக்கெட் விளையாட்டின் தலைசிறந்த போட்டிகளில் ஒன்றாக பார்டர் கவாஸ்கர் தொடரை சொல்லலாம். குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் உலக கோப்பைக்கு நிகரான மதிப்பு இதற்கு உண்டு. இது ஏன் என்று பெரிய விளக்கம் தேவை இல்லை. கடந்த 30 ஆண்டு காலத்தில் உலக கிரிக்கெட்டின் தலை சிறந்த அணி ஆஸ்திரேலியா. அவர்களை அவர்கள் நாட்டில் வீழ்த்துவது இந்தியாவை இந்தியாவில் வீழ்த்தத்துவது போல பிரம்மப் பிரயத்தனம். 

கிட்டத்தட்ட 70 ஆண்டு காலம், பல இந்திய அணிகளின் முயற்சிக்குப் பிறகு 2018இல் விராட் கோலியின் தலைமையில் இந்தியா ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்றது. இந்த தொடரின் பொழுது ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் பந்தை சேதப்படுதிய குற்றத்திற்காக விளையாட்டில் இருந்து தடை செய்யப்பட்டிருந்தனர். இதனால் பலவீனம் அடைந்திருந்த ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த சரியான சந்தர்ப்பத்தை பயன் படுத்தி புஜாராவின் அசைக்க முடியாத மட்டையாட்டம் மற்றும் பும்ராவின் அபார பந்து வீச்சால் இந்தியா அடிலைடு மற்றும் மெல்பர்ன் நகரங்களில் நடைபெற்ற போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றியது. விராட் கோலி, அஸ்வின், பந்த், ஷமி போன்றவர்களும் பெரிய பங்காற்றினார்கள். 

இதற்கு அடுத்த 2021 (ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற) தொடர் பலருக்கும் நினைவிருக்கலாம். 2018 தொடரின் வெற்றியால் நம்பிக்கை கொண்டிருந்த இந்திய அணி முதல் போட்டியில், பகல் இரவு ஆட்டத்தில், வெறும் 36 ரன்களுக்கு ஆட்டம் இழந்து தோல்வியைத் தழுவியது. அது மட்டுமில்லாமல் முதல் ஆட்டத்திற்குப் பிறகு கேப்டன் கோஹ்லி தன் மகளின் பிறப்புக்காக விடுமுறையில் வீடு திரும்பி விட்டார். 

அஜின்க்யா ரஹானே வின் தலைமையிலான அணிக்கு பின்னடைவுக்கு மேல் பின்னடைவு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. கோஹ்லி இல்லை, ஷமிக்கு காயம், என்று சிக்கல்கள் இருந்தாலும் ரஹானேவின் சதம் மற்றும் அஸ்வினின் பந்து வீச்சு இந்தியக்கு இரண்டாம் போட்டியில் வெற்றி பெற்று தந்தது. 

சிட்னியில் நடந்த மூன்றாவது போட்டியில் கடைசி இன்னிங்ஸ்ஸில் 400 ரன் எடுத்தால் வெற்றி. நான்காவது இன்னிங்ஸ் இல் 400 ரன் கனவில் கூட எட்ட முடியாது. இருந்தாலும் புஜாராவின் அசைக்க முடியாத தடுப்பாட்டம் மற்றும் ரிஷப் பந்த்தின் அபார ஆட்டத்தால் நடந்து விடும் என்றே தோன்றியது. இவர்கள் இருவரும் ஆட்டம் இழந்தாலும், பிறகு வந்த விஹாரி உள் காயம் காரணமாக ஓட முடியாமல் ஆனாலும், அஸ்வின் இன் உதவியுடன், இருவரும் தீராமல் மட்டை போட்டு தோல்வியில் இருந்து அணியை காப்பாற்றினார். 

1-1 என்ற நிலையில் கடைசி ஆட்டம் பிரிஸ்பனில். ஷமி, உமேஷ் யாதவ் போன்றவர்களுடன் பும்ரா, அஸ்வின், விஹாரி என்று காயப் பட்டியல் மிக நீளம். நெட் பௌலராக ( வலைப் பந்துவீச்சாளர்) அழைத்து செல்லப்பட்ட நடராஜன் மற்றும் வாஷிங்ட்டன் சுந்தர் போன்றவர்களுடன் களம் இறங்க வேண்டிய கட்டாயம். 

இது மட்டும் இல்லாமல் பிரிஸ்பன் ஆஸ்திரேலிய அணியின் கோட்டை. அங்கே அவர்களை டெஸ்ட் போட்டியில் 32 வருடங்களாக யாரும் வீழ்த்த முடியவில்லை. 

டாஸ் இழந்து முதலில் பந்து வீசிய இந்திய அணிக்கு ஏற்கனவே இருந்த பிரச்சனைகள்  போதாதென்று நவதீப் சைனியும் காயமடைந்தார். முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியாவின் 369 ரன் களை தொடர்ந்து களம் இறங்கிய இந்தியா 180-6 என்று தடுமாறி கொண்டிருந்தது. இந்த நிலையில் உள்ளே வந்த பொடியன்கள் ஷார்டுல் தகுர் மற்றும் சுந்தர், இளைஞர்களுக்கே உண்டான மிடுக்குடன், பாம்பின் பயம் அறியாத, அசட்டுதானமான நம்பிக்கை மற்றும் துணிச்சலுடன், வாங்கிய அடியெல்லாம் போதுமென்று திருப்பி அடித்து, 330 வரை கொண்டு சேர்த்து விட்டனர். ஆஸ்திரேலியாவின் லீட் வெறும் 30 ரன்கள். 

அடிபட்டாலும் சிங்கம் சிங்கம்தானே என்பதை போல ஆஸ்திரேலியாவும் விட்டுக்கொடுக்கவில்லை. 300 ரன் சேர்த்துவிட்டார்கள். 330 ரன் எடுக்க வேண்டும். 

இதற்கு முந்தய போட்டியில் 400 ரன் எடுக்க துணிந்த இந்தியா, 330 ரன் எடுக்க வாய்ப்பு உள்ளது என்றே கருதப்பட்டது. இருந்தாலும் இது கோட்டை இங்கே ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்து 30 ஆண்டுகளுக்கு மேல்

ஆகி விட்டது. கம்மின்ஸ், ஸ்டாக், ஹசுல்வுட் உடன் லியோன் என்ற தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். 

புஜாரா ஒரு புறம் கதவை சாத்தி பிடிக்க, இன்னொரு புறம் இளைஞர்கள் கில் மற்றும் பந்த், அடித்து நொறுக்கி ஆஸ்திரேலியாவை கடும் அழுத்ததுக்கு உள்ளாக்கினர். 

இதில் சதங்கள் அடிக்கவில்லை என்றாலும் புஜாராவின் மட்டைக்கு பெரிய பங்கு உண்டு. ஆஸ்திரேலிய வீரர் ஹசுல்வுட், அவர்கள் அணியின் அனாலிஸ்ட் இடம் புஜாரா வின் வீடியோக்களை காட்டியது போதும். அதையே பார்த்து பார்த்து எரிச்சல் ஊட்டுகிறது என்று சொல்லியதாக தகவல். 

நூறு ரன் எடுக்க வேண்டிய நிலையில் புஜாரா ஆட்டம் இழந்தாலும், ரிசப் பந்த் தொடர்த்து, மற்றவர்களின் உதவியுடன் வெற்றியடைந்து தொடரை கைப்பற்றியது மறக்க முடியாத நினைவுகள்

அடுத்த வாரம் துவங்கிவிருக்கும் பார்டர் கவாஸ்கர் தொடரின் பழைய இனிமையான நினைவுகளைப் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.