Categories
சினிமா தமிழ்

திரை விமர்சனம்: அமரன் – சொல்லி அடித்த கில்லி

தீபாவளி

மெதுவாக குளித்து முடித்து பலகாரங்கள் சாப்பிட்டு, பட்டாசு வெடித்தாலும், படம் பார்த்து முடித்தால் தானே திருப்தி.

தீபாவளிக்கு மறக்க முடியாத பல பெரிய படங்கள் வெளிவந்து வெற்றி அடைந்திருக்கிறது.

அப்படி இந்த வருடம் சொல்லி அடிக்க வந்த படம் அமரன். வெகுவான சினிமா ரசிகர்கள் மற்றும் குடும்பங்களின் தேர்வு இந்தப் படம் தான்.

காரணம் இது நம்மிடையே வாழ்ந்து மறைந்த முன்னாள் இராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு என்பதாலும், சிவகார்த்திகேயன் பல குடும்ப ரசிகர்களைத் தக்க வைத்திருக்கிறார் என்பதாலும், போட்டி படங்கள் பலம் வாய்ந்ததாக இல்லை என்பதாலும், என காரணங்கள் அதிகம்.

எப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ, அப்படியே எதிர்பார்ப்பைப் பூர்த்தியும் செய்து மக்கள் கூட்டம் அலைமோத திரையரங்குகள் நிரம்பி வழியும் நல்ல படமாகத்தான் வந்திருக்கிறது.

இந்தப்படத்தில் கதையை விமர்சிக்க எதுவுமே இல்லை. நாம் அனைவருக்குமே தெரிந்த கதைதான்.

ஆனால் நடிப்பை விமர்சிக்க வாய்ப்புகள் இருந்தது. ஆனாலும் படத்தில் நடித்த ஒட்டுமொத்த நடிகர்களும் அந்த வாயப்பையும் நம்மிடமிருந்து தட்டிப்பறித்து விட்டார்கள்.

சிவகார்த்திகேயன், கல்லூரி மாணவராக ஜாலி பண்ணுவதில் துவங்கி, மேஜர் முகுந்தாக மிடுக்கான அதிகாரியாக முகுந்தனின் வாழ்க்கையை நம் கண்முன்னே நிறுத்தி விட்டார்.

முகுந்தனின் மனைவியாக நடித்த சாய் பல்லவி, பல காட்சிகளில் நம்மை கண்கலங்கச் செய்கிறார். இராணுவ அதிகாரியின் மனைவியின் பதட்டத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறார்.

முகுந்தனின் அம்மா, அப்பா, மாமனார், மாமியார், மைத்துனர்கள் என நடித்த நடிகர்கள் அனைவரும் யதார்த்தமான, அட்டகாசமான நடிப்பைத் தந்து படத்தை உயிரோட்டமாக வைத்திருந்தார்கள்.

உண்மை சம்பவம் என்பதால் இதில் பெரிய அளவிலான மசாலாக்களையோ, விறுவிறுப்பையோ திணிக்க இயலவில்லை. யதார்த்தமாக காஷ்மீரில் ஒரு இராணுவ முகாமில் நிகழும் நிகழ்வுகள் பெரிய ஆர்ப்பாட்டமிலாமல் நகர்கிறது.

விடுதலை படத்தில் விஜய் சேதுபதி நமக்கு கதாநாயகனாகத் தெரிகிறார். அவருக்காக நாம் கைதட்டி மகிழ்கிறோம் என்றால், இந்தப்படத்தில் வில்லன்களாக, கொடூர தாவிரவாதிகளாக காட்டப்படும் காஷ்மீர் சுதந்திரப் போராளிகளை நாம் அத்தகைய கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும்.

சிவகார்த்திகேயன் வழியிலே, மறைந்த இந்திய இராணுவ அதிகாரியை நாம் கதையின் நாயகனாகப் பார்க்கும் காரணத்தால், அவர்களை வில்லன்களாக ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

இது எதார்த்தம், அதாவது நிகழும் உண்மை. அரசியல் மற்றும் மனித இயல்பின் வெளிப்பாடு. இதை நாம் சரிசெய்ய இயலாது.

படத்திலேயே கூட மேஜர் முகுந்தனின் அப்பா கதாபாத்தரம் இந்தக் கேள்வியை முன் வைக்கத்தான் செய்யும்.

காஷ்மீர்ல ஏம்ப்பா பிரச்சினையா இருக்குனு.

அதுக்கு சிவகார்த்திகேயன், “பேச வேண்டியவங்க பேசினாதான் இது சரியாகும்”னு சொல்லுவாரு.

உண்மைதான்.

ஒரு தீராப் போராட்டத்தில் இந்தப்பக்கம் இருப்பவனுக்கு, இது நியாயம், அந்தப்புறம் இருப்பவனுக்கு அது நியாயம். படத்தில் அதை மிகைப்படுத்தாமல் ஓரளவுக்கு யதார்த்தமாகவே காட்ட முயற்சி செய்திருப்பது நல்ல விஷயம்.

சிவகார்த்திகேயன் – சாய்பல்லவி காதல் காட்சிகள், குடும்ப காட்சிகள் சிவகார்த்திகேயன் பட பாணியிலேயே நகைச்சுவை கலந்ததாகத் துவங்கி, போகப் போக அழுத்தமானதாக மாறி, இறுதிக் காட்சியில் தியாகமாக மாறி நிற்கும் அந்தப் பரிணாம மாற்றம் அழகாகப் படமாக்கப்பட்டு நம்மிடையே யதார்த்தமாக வந்து சேர்ந்தது மனதிற்கு இதம்.

நாமெல்லாம் உண்மையான முகுந்தனின் இறப்பிலேயே மிகப்பெரிய துக்கம் அனுசரித்து விட்ட காரணத்தால் படத்தின் அந்தக் குறிப்பிட்ட காட்சிகளில் பெரிய தாக்கம் ஏற்படவில்லை.

ஆனால் படம் முடிந்த பிறகு கிடைத்த பலத்த கைதட்டல் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

ஒரு இந்திய இராணுவ வீரனின் மீது மக்கள் கொண்டிருக்கும் மதிப்பும் மரியாதையும் பல மடங்காகக் கூடிப் போகிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவிக்கு இது ஒரு மறக்க முடியாத நல்ல படம் என்பது மறுக்கவே முடியாது.

இராணுவ வகைப் படங்கள், காஷ்மீர் தீவிரவாதம் என பல படங்களைத் தாண்டி வந்தாலும் கூட, இது நம்மோடு மனதில் நெருக்கமான ஆளுடைய சொந்தக் கதை என்பதால் மனதோடு அழுத்தமாகப் பதிந்து விடிகிறது.

பெரும்பாலான மக்களின் மதிப்பெண்10/10 ஆகத்தான் இருக்கிறது.

இந்த தீபாவளியின் வெற்றிப்படமாக இது அமையும் என்பதில் கடுகளவும் மாற்றமில்லை.

அன்புடன் நினைவுகள்.

மேலும் சினிமா விமர்சங்கள் இங்கே