Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

சுங்கச்சாவடிகள்- மர்மச்சாவடிகளா? – கட்டண வசூலின் பின்னணி

பரனுர் சுங்கச்சாவடியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

தீபாவளியை தொடர்ந்து ஏற்பட்ட நெரிசல் (ஆதாரம்: தினகரன்)

இந்த சாவடியின் கட்டண வசூலை பற்றி சில மாதங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியிருந்தோம். இதே கேள்வியை இன்று MP ஒருவரும் எழுப்பியிருக்கிறார் என்ற செய்தியை தொடர்ந்து இந்த கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறோம்.

சுங்கச்சாவடிகளை இயக்குவது யார்?
பணம் எந்தமுறையில் வசூலிக்கப்படுகிறது?
இதை யார் நிர்ணயிக்கிறார்கள்?

எத்தனை ஆண்டுகளுக்கு இவர்களுக்குப் பணம் வசூலிக்க உரிமம் இருக்கிறது?

இது போன்ற கேள்விக்கான பதில்கள் பலருக்கும் தெரிவதில்லை.

நமது முந்தைய பதிவில் இதைப்பற்றிதான் கேள்வி எழுப்பியிருந்தோம். இதன் வெளிப்படைத்தன்மை பற்றி யார் நமக்குத்தெரியப்படுத்துவார்கள்?

பெரிய மெனக்கெடல்கள் ஏதுமின்றி ஒரு சுங்கச்சாவடியின் பெயரை வைத்து கூகுள் செய்தாலே நமக்குத் தேவையான பல விவரங்களும் அதில் கிடைக்கிறது.

நாம் உதாரணமாக பிரச்சினைக்கு உட்பட்ட பரனூர் (செங்கல்பட்டு) சுங்கச்சாவடியைப் பற்றி சிறிது படித்துத் தெரிந்து கொண்டோம்.
அதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

இந்த பரனூர் சுங்கச்சாவடி ஆனது சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, விழுப்புரம், பன்ருட்டி, மதுரை, சேலம், திருச்சி..கன்னியாகுமரி வரை செல்லும் பெரும்பாலான பயணிகள் கடந்து செல்லும் தவிர்க்க முடியாத சுங்கச்சாவடி.

சிறிது காலத்திற்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச்சார்ந்தவர்கள் இந்த சுங்கச்சாவடியை சேதப்படுத்தி, இதன் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தினர்.

அந்த சுங்கச்சாவடியின் கட்டமைப்பு , வசூல் முறைகள், எல்லை ஆகியன பற்றி ஆராய்ந்தோம்.

NH 45 எனப்படும் தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம் முதல் திண்டிவனம் வரையிலான பகுதியில் கிமீ 28 முதல் துவங்கி கிமீ 74.5 வரையிலான எல்லையின் சாலைக்கட்டமைப்புக்கான செலவு மற்றும் அதன் பராமரிப்புத் தொகை இந்த சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படுகிறது.

மொத்தம் 46.5 கிமீ நீளம் இதில் அடக்கம்.

இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி கட்டணம் திருத்தியமைக்கப்பட்டிருக்கிறது..இது இந்த நிதியாண்டின் முடிவில் மாற்றத்திற்குள்ளாகலாம் (31- மார்ச்- 2025).

இது ஏப்ரல் 1 ,2005 ல் இருந்து இயங்கி வருகிறது..

PCU என்று சொல்லப்படும் Passenger car unit , அதாவது பயணிகள் செல்லக கூடிய மகிழுந்தின் அளவுகோலை அடிக்கோலாக வைத்தே மற்ற வாகனங்களும் அறியப்படுகிறது.

மகிழுந்தின் அளவுகோலை வைத்தே சாலை கட்டமைப்பும், தினசரி போக்குவரத்து எண்ணிக்கையும், வசூல் முறைகளும் தீர்மானிக்கப்படுகிறது.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் எனில் ஒரு மோட்டார் சைக்கிள் 1/2 கார் அளவாகவும், ஒரு பேருந்து அல்லது லாரி 3 முதல் 3.5 கார்கள் அளவாகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஒரு பேருந்து அந்த சாலையைக் கடக்கும் போது அது 3.5 கார்கள் சாலையைக்கடந்ததாக அளவிடப்படுகிறது.

பரனுர் சுங்கச்சாவடி

அதே விகிதத்தில் தான் கட்டண வசூலிப்பும் நடைபெறுகிறது. உதாரணத்திற்கு காருக்கு 70 ரூ எனில் பேருந்துக்கு தோராயமாக 240 ரூ வசூலிக்கப்படும்.

இந்த சுங்கச்சாவடியின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு எல்லைகள் பற்றிய சிறிய அறிக்கையும் கிடைத்தது.

இதன் ஒரு நாள் போக்குவரத்து அளவீடு என்பது 95230 கார்கள். அதாவது நாள் ஒன்றுக்கு தோராயமாக 95230 கார்கள் பயணிக்கும் எனில் ஒரு நாள் வசூல் என்ன என்பதை பார்த்தோமானால் (95230*70) – ரூ.66,66100.

மார்ச் 5, 2024 முதல், பழைய கட்டணமான 45 ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 42,85,350ரூ வசூல்.

ஒரு வருடத்திற்கு- 156,41,52,750 ரூ.

இந்த திட்டத்தின் மதிப்பீடு 564 கோடி.

அப்படியிருக்க ஒரு வருடத்தில் 150 கோடி ரூபாய் தோராயமாக வசூலிக்கப்பட்டால் கிட்டதட்ட 4 வருடங்களில் இந்த திட்டத்திற்கான மொத்த செலவையும் எடுத்து விடலாமே?

அப்படி வசூல் மூலமாக இந்த தொகை பெறப்பட்ட பிறகு, 40 சதவீத பணம் மட்டுமே பராமரிப்புக்காக கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என்று அரசாணை கூறுகிறது?

ஆனால் இவர்கள் அந்த ஆணையை மட்டும் கண்டுகொள்ளவில்லையா என்பது புரியாத புதிராக உள்ளது.

மற்றபடி ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் விதிகளுக்கு உட்பட்டு திருத்தியமைக்கப்படலாம் என்று கூறப்பட்ட அரசாணைகள் பின்பற்றப்படுகின்றன.

சுங்கச்சாவடி கட்டணமானது ஒரு மகிழுந்துக்கு ஒரு கிமீக்கு 0.65 ரூ.அதாவது 65 பைசா என்பது 2007-08 அரசாணையில் கூறப்பட்ட விதி.

ஆண்டுக்கு ஒருமுறை 3 சதவீதம் உயர்த்தலாம் என்பதும் விதி.

தற்போதைய 70 ரூ கட்டணம் என்பது
கிமீக்கு 65 பைசா அதனோடு 16 ஆண்டு கணக்குக்கு ஆண்டிற்கு 3 சதவீதம் என 48 சதவீத உயர்வு, தவிர 2010 ஆம் ஆண்டின் பணவீக்க சதவீதத்தின் வாயிலாக ஒரு 40 சதவீத உயர்வு என்பதை தீர்மானித்து.

ஒரு கிமீக்கு 1.43 ரூ வீதம் 48 கிமீ க்கு 68.75 ரூ என நிர்ணயிக்கப்பட்டு 70 ரூபாயாக முழுமைப்படுத்துலுக்காக தீர்மானிக்கப்படுகிறது.

இதற்கான அரசாணையும் தெளிவாக இருக்கிறது.

கட்டணம் 70 ரூ என்பது விதிகளின் படி சரிதான்.
ஆனால் இந்த கட்டமைப்பிற்கான கட்டுமான தொகை வசூல் செய்து முடிக்கப்பட்ட பிறகு பராமரிப்புக்காக 40 சதவீத சுங்கக்கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற விதி?

யார் இதை வெளிச்சமிட்டுக்காட்டுவது?

ஒருவேளை கிடைத்த தகவல்களின் படி நாம் கணக்கிட்டது தவறு எனில்?
சரியான கணக்கு எங்கே கிடைக்கும்?

அது ஏன் பொதுவெளிக்கு வருவதில்லை?

மீண்டும் ஆராயலாம்.

நினைவுகள் வலைப்பக்கம்

(பதிவேற்றம் ஜூன் 8, மறு பதிப்பு நவம்பர் 4)

2 replies on “சுங்கச்சாவடிகள்- மர்மச்சாவடிகளா? – கட்டண வசூலின் பின்னணி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *