ஔவையே! சுட்டபழம் வேண்டுமா , சுடாத பழம் வேண்டுமா என்பது பழைய முருகன் கதை!
ஐயா, 30 ரூ தேங்காய் வேணுமா அல்லது 3 லட்ச ரூபாய் தேங்காய் வேணுமா என்பது ட்ரென்டிங் கதை.
ஆமாம் ஒரு தேங்காய், 3 லட்சம்.
அப்படி என்ன விஷேசம் அதில் எத்தனை பேருக்கு சட்னி வைக்கலாம் என்பதைத்தான் பார்க்கப்போகிறோம்.
ஆன்மீகம், கடவுள் பக்தி என்பது மனிதனை நல்வழிப்படுத்தினால் சிறப்பு என்று சமீபத்திய கட்டுரை ஒன்றில் பார்த்தோம். (நடப்பு அதிசயம்).
அதே ஆன்மீகத்தின் பெயரில், கடவுள் பக்தி நம்பிக்கையின் பெயரில் சில விஷயங்கள் எல்லை மீறிப்போக மனிதன் முட்டாளாக்கப்படும் போது நம்மால் அதனை ஏற்றுக்கொண்டு அமைதியாகச் செல்ல இயலவில்லை.
இன்றைய செய்தி ஒன்றில், முருகன் திருக்கல்யாணத்தில் திருமாங்கல்யம் வைக்கப்பட்ட தேங்காய் ஒன்று ரூ.3 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனதாகத் தகவல்.
இந்த செய்தியை அவ்வளவு எளிதாக என்னால் கடந்து செல்ல இயலவில்லை.
இன்றைய சூழலில் பல பட்டதாரி நடுத்தர வயது ஆட்கள் ஒரு வருடத்தில் சம்பாதிக்கும் பணம் தான் இந்த 3 லட்சம் ரூபாய்.
அப்படி இருக்கும் போது, ஒரு தேங்காயை 3 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கும் அந்த பக்தியை, வெறுமன பக்தி என்ற பெயரில் பார்க்க முடியவில்லை.
இதை பகுத்தறிந்து பார்த்தால் மூடத்தனம் என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்ல முடியும்?

முருகன் சூரபத்மனை வதம் செய்த கதையை ஏற்றுக் கொண்டு , அந்த நாளை சஷ்டியாகக் கொண்டாடி , சிலர் விரதம் இருந்து, வீடுகளில் முருகனை வழிபடுவது சரி.
கோவிலுக்கு சென்று, கோடான கோடி மக்களின் முகங்களைப் பார்த்து, பழகி, பொறுமையாக கால் கடுக்க காத்திருந்து கடவுளை தரிசிப்பது கூட சரி. ஒரு மனிதனுக்கு பொறுமையைத் தருகிறது, பிற மனிதர்களோடு பழகும் வாய்ப்பு உருவாகிறது என்று அதை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் தேங்காயை 3 லட்சம் கொடுத்து வாங்கி என்ன செய்து விட முடியும்?
ஒரு 4 பேருக்கு சட்னி செய்யலாம்.
அதற்கு 3 லட்சம் ரூபாயா?
அப்படி அந்தத் தேங்காயில் அபார சக்தி இருந்தால் யாராவது அதை ஏலத்தில் தள்ளி விடுவார்களா?
அவர்களே வைத்துக் கொள்ளத்தானே செய்வார்கள்?
இந்த சின்ன லாஜிக் கூட புரியாமல் இப்படி பக்தி என்ற பெயரில் மனிதன் மீண்டும் மீண்டும் மூடனாக்கப்படுவதைத் தான் நாம் எதிர்த்துப் பேச வேண்டியுள்ளது.
இதற்கும் ஒரு கூட்டம் வரும். நீங்கள் நாத்திகவாதி கடவுள் மறுப்புக் கொள்கை உடைய ஆள். அதனால் தான் இப்படி நாத்திகம் பேசுகிறீர்கள் என்று.
இது நாத்திகம் அல்ல.
மூடர்கூடத்திற்கு எதிரான குரல்.
மனிதனின் நம்பிக்கை வியாபாரமாகி விடக்கூடாது, பக்தி ஒரு போதும் கொச்சைப்படக் கூடாது என்பதற்கான குரல்.
எத்தனை காரணங்கள் சொன்னாலும், குற்றம் சொன்னாலும் இந்தத் தேங்காய் விஷயத்தில் சமரசம் அடைய விருப்பமில்லை.
பக்தி- மூடநம்பிக்கையாகி விடக்கூடாது என்ற ஆதங்கத்தில்