Categories
தமிழ் நினைவுகள்

தொலைக்காட்சி – அதிசய பெட்டியின் நினைவுகள் (பாகம் 2)

அரிதாகக் கிடைத்த ஒன்று அருகிலேயே இருக்க, இருக்க அதன் மதிப்பு குறைந்து கொண்டே வரும் என்பது தொலைக்காட்சிக்கும் பொருந்தும்.

தொலைக்காட்சி சம்பந்தமான நினைவுகளை முதல் பகுதியில் அளவளாவினோம்.

தொலைக்காட்சியின் மீது நான் கொண்ட அன்பை, எனது தனிப்பட்ட காதலை, என் குடும்பத்தின் மதிப்புமிக்க சொத்தைப் பற்றிய தனிப்பட்ட நினைவுகளை இந்தப்பகுதியில் பதிகிறேன்.

எங்கள் வீட்டில் இருந்தது ஒனிடா வகை வண்ணத் தொலைக்காட்சி, அதுவும் 20 இன்ச் அளவில்.

பெரும்பாலான வீடுகளில் கதவு வைத்த சாலிடர், பிபிஎல் போன்ற ரகங்கள் இருந்த போது எங்கள் வீட்டில் ஒனிடா இருந்ததே எனக்குப் பெருமை தான்.

அந்த ஒனிடா தொலைக்காட்சியின் விளம்பரமே வித்தியாசமானது தான் கொம்புகளுடன், கோரப்பல்லுடன் ஒரு வித்தியாசமான ஆளின் உருவம், அந்த டிவியின் அட்டைப்பெட்டியிலும் இருக்கும். எங்கள் வீட்டு மாடிப் பரணில் அந்தப் பெட்டி இருந்த காரணத்தால், நான் மாடிக்கு தனியாக செல்வதே கிடையாது.

ஒனிடா விளம்பர மாதிரி ஆள்

ஆனால் எனது நட்பு வட்டாரத்தில் அந்த கொம்பு வைத்த ஆள் என்னோடு பேசுவார், பழகுவார் என கதைகள் சொல்வதில் எனக்குப் பெருமிதம்.

எங்கள் தெருவிலுள்ள மொத்த பொடுசுகளுக்கும் எங்கள் வீட்டில் தான், ஒளியும் ஒலியும், சக்திமான், கேப்டன் வியூம் எல்லாம்.

அதனால் யாராவது என்னுடன் சண்டையிட்டால் அவர்களை சக்திமான் பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்று ப்ளாக் மெயில் லாம் செய்திருக்கிறேன்.

வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்படும் படத்தைப் பார்த்து விட்டு, தொலைக்காட்சி இல்லாத மற்ற நண்பர்களிடம், நான் நேத்து அந்தப்படம் பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு, என்று அதன் கதையையும், சண்டைக் காட்சிகளையும் விளக்கிக் கூறும் கதாசிரியர் நான்.

தொலைக்காட்சி என் வீட்டில் இருந்த காரணத்தாலேயே எனக்கு ஒரு தனி மரியாதை எனது நண்பர் பட்டாளத்திடம் உண்டு.

மேலும் தொலைக்காட்சி என்ற ஒன்று எங்கள் வீட்டின் பெருமையான சொத்தாகவும் கருதப்பட்டது. தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வரும் முன்பு, வயலும் வாழ்வும், செய்திகள் என எல்லா நிகழ்ச்சிக்காகவும் தொலைக்காட்சியை கண்கொட்டாமல் பார்த்தோம்.

அதிலும் ஒரு பெரிய விசேஷம் என்னவென்றால் எங்கள் வீட்டிலிருந்ததோ இரண்டு அடுக்கு ஆண்டனா. என்றாவது மாலை நேரத்தில் எனது அப்பா வீட்டில் ஓய்வில் இருந்தால் எங்களோடு குழந்தை போல இணைந்து கொண்டு அந்த ஆண்டனாவை திருப்பி, சிலோன் டிவி வருதா பாரு என்று எங்களிடம் கேட்பார்.

அதிர்ஷ்டமிருந்தால் சில நேரங்களில் ஏதோ பறவை படம் போட்ட சிலோன் சேனல் வந்து போகும்.

தொலைக்காட்சி என்பது ஆனந்தம், தொலைக்காட்சி என்பது கௌரவம். அது எங்களது பெருமிதம். எங்கள் மணிமகுடம்.

மாதிரி தொலைக்காட்சிப் பெட்டி

மெல்ல நாட்கள் நகர்ந்து தனியார் சேனல்களின் ஆக்கிரமிப்புத் துவங்கிய காலத்தில், கேடிவியில் படம் என்று நானும், சன் மியூசிக்கில் பாட்டு என்று எனது அக்காவும் சண்டையிட்டுக் கொண்டோம்.

எங்களது குழந்தைப் பருவத்தை இனிமையாக்கிய, மனதிலிருந்து நீங்கா நினைவுகளைத் தந்த தொலைக்காட்சி எங்களைப் பொறுத்த வரைக்கும் என்றுமே ஒரு பொக்கிஷம் தான்.

நாட்கள் கடந்து, ரிமோட் டிவிகள் வந்தது. ஒனிடாவை விட மனமில்லை. ரிமோட் மட்டும் தனியாகப் பொருத்திக் கொள்ளலாம் என்று அறிந்து, ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த டிவி பெட்டியை திறந்தோம்.

ரிமோட் வந்தது. ஆனால் ஒனிடாவின் ஒரிஜினாலிட்டி தொலைந்து போனது.

20 வருடம் ஓடிய டிவி, ரிமோட் பொருத்திய உடன் சிறிது காலத்தில் பழுதாகிப் போனது.

பிறகு 29 இன்ச் LG தொலைக்காட்சி வந்தது. இன்னும் கூட என் வீட்டில் அது ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.

வேலைநிமித்தமாக வெளியூர் வந்தோம்
ஊரையே மாற்றிவிட்டோம்
டிவி எம்மாத்திரம்

இப்போது எல்லோரையும் போல LED TV 42 இன்ச்சில் ஓடினாலும், ஒனிடா கொடுத்த மகிழ்ச்சியை இது தருவதில்லை.

வாரத்தில் வெறும் 8-10 மணி நேரம் டிவி பார்த்த போது டிவியின் மீது இருந்த காதலும், ஏக்கமும், இப்போது 24 மணிநேரமும் படமும் பாடலும் ஒளிபரப்பாவதால் சலித்துப் போனது.

டிவி ஓடினாலும், அதனை சிறு வயதில் பார்த்த போது, சோறு தண்ணீர் இல்லாமல் வாயில் கொசு போவது கூடத் தெரியாமல் பார்க்கும் விருப்பமோ பழக்கமோ இல்லை.

டிவி ஒரு பக்கம் ஓட, நாம் வேறு பக்கம் ஏதோ ஒரு வேலையை செய்கிறோம்.

அது சரி. நான் முதலில் சொன்னது போல. ஒரு பொருள் நமக்கு அரிதாக இருக்கும் வரை அதன் மதிப்பு அதிகம்.

அருகிலேயே கேட்ட நேரமெல்லாம் கிடைத்து விட்டால் சலிப்பு தானே வரும். ஆனால், எம் போன்ற ’90 களின் குழந்தைகளுக்கு தொலைக்காட்சி என்பது என்றுமே மறக்க முடியாத நினைவுகளைத் தரும் ஒரு பொக்கிஷம் தான்

இது போன்ற கட்டுரைகள் தொடர்ந்து வாசிக்க,

மனதை கவர்ந்த மாருதி 800

பாம்பன் பாலத்தின் நினைவுகள்

கிராமத்து கசாப்புக் கடையின் நினைவுகள்

புதிய பதிவுகள் பற்றிய அறிவிப்புகள் பெற நினைவுகள் whatsapp சேனல்