தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடே இன்று இல்லை என்ற நிலை வந்து விட்டது.
முன்பெல்லாம் ஒரு தெருவில் ஓரிரு வீடுகளிலோ அல்லது ஊரில் பஞ்சாயத்து அலுவலகத்தில் தொலைக்காட்சி அறையிலோ காணப்பட்ட அரிய வகை பொருள் இன்று மிகச்சாதாரண பொருளாகிப் போனது.
அதிலும் அதில் ஒளிபரப்பபடும் விஷயங்களும், நேரமும் சிறிது காலத்திற்கு முந்தைய நிலையை ஒப்பிடும் போது இப்போது மிக அபிரிமிதமாகிப் போனதால் அதற்கான மரியாதை குறைந்து விட்டது போன்ற தோற்றம் உருவாகி வருகிறது.
முன்பெல்லாம் வாரம் ஒன்றோ அல்லது இரண்டோ படங்கள் தான் தொலைக்காட்சியில் பார்க்க இயலும். ஆனால் இப்போது பல தொலைக்காட்சி அலைவரிசையிலும் 24 மணி்நேரமும் சினிமா ஓடுவது வாடிக்கையாகி விட்டது.
எதுவுமே அளவோடு இருந்தால் சலிக்காது. அளவுக்கு மீறி திணிக்கப்பட்டால் அமிர்தமும் நஞ்சாகும் என்ற பழமொழியின்படி வாரம் ஒன்று அல்லது இரண்டு என்று இருந்தபோது சினிமா மீது தொலைக்காட்சி பெட்டிகளின் மீது இருந்த மோகம், இப்போது வெகுவாக குறைந்து விட்டது.
போதாக்குறைக்கு தொலைக்காட்சியைத்தாண்டி நம்மிடம் இருக்கும் கைபேசிகள் நமக்குத் தேவையான அனைத்தையும் தருவதால் தற்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிகள் பெயரளவுக்கு உபயோகிக்கப்படும் பொருளாக சிறிது சிறிதாக மாறி வருகிறது.
ஆமாம் செய்திகள், பாடல்கள், சினிமா, விளையாட்டு நேரலை ஒளிபரப்பு என அனைத்தும் நம் கைபேசியிலேயே கிடைத்து விடுவதால் பலரும் இப்போது தொலைக்காட்சி பெட்டிகளை மதிப்பதே இல்லை.
இப்படி மதிப்பிழந்து போன தொலைக்காட்சிப் பெட்டியோடு எமது வயதொத்த ஆட்கள் கொண்டிருக்கும் நினைவுகளைப் பேசலாமா?
ஆம். தொலைக்காட்சிப் பெட்டியுடன் நினைவுகள்.
இன்று அனாவசியமாக இருக்கும் இந்தப் பொருள் எங்களுக்கு அதிசயப் பொருள். ஒரு வாரத்தில் 30 நிமிடம் மட்டுமே ஒளிபரப்பப்பட்ட புதுப்பாடல்களைக் காண ஊர்மக்கள் ஓடோடி தங்களது வேலைகளை நிறுத்தி விட்டு ஓடிய கனாக்காலம். “ஏ அக்கா ஒளியும் ஒலியும் போட்டுருவான், நீ்வரலியா?” என்று கூட்டமாக மகிழ்ச்சி பகிர்ந்த நினைவுகளைத் தரும் தொலைக்காட்சிப் பெட்டி.
வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பப்படும் படம். அதை ஊரே அமர்ந்து பஞ்சாயத்து தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்த நியாபகங்கள்.
ஒரு சில வசதியான வீடுகளில் மட்டும் அவரவர் வீட்டுக்குள்ளேயே பார்த்துக் கொள்வார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் ஒரு படம்.
அது மட்டுமல்லாது சனிக்கிழமை இரவு இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் சுழற்சி முறையில் ஒளிபரப்பப்படும் படத்தில் சுழற்சி வரிசையில் தமிழ் படம் வந்தால் கொண்டாட்டம் தான். அந்த வாரம் 3 படம் என்று கொண்டாடிய நினைவுகள் உண்டு.
பஞ்சாயத்து டிவி பகலில் ஓடாத காரணத்தால் சக்திமான், கேப்டன் வியூம் போன்ற தொடர்களை சிறுவர்கள் கும்பல் கும்பலாக தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் பெரிய வீடுகளில் சென்று பார்த்து அங்கேயே விளையாடிவிட்டு வருவது வழக்கம். இப்படி ஊருக்கும், உறவுகளுக்கும் , குடும்பத்திற்கும் ஒற்றுமைக்கு வழிவகுத்தது இந்த தொலைக்காட்சிப் பெட்டி.
வாரத்தில் சில மணி நேரங்களே அதன் உபயோகம் இருந்த போது இருந்த அதன் மதிப்பு இப்போது நிச்சயம் இல்லை.
இப்போது உள்ள தலைமுறைக்கு வேண்டுமானால் இது யதார்த்தமான பொருளாக இருக்கலாம். ஆனால் என் வயதை ஒத்தவர்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டி என்றுமே பொக்கிஷம் தான்.
தொலைக்காட்சிப் பெட்டி பற்றிய நினைவுகள் இதோடு நிற்காது, தொடரும்.
இது போன்ற கட்டுரைகள் தொடர்ந்து வாசிக்க,
கிராமத்து கசாப்புக் கடையின் நினைவுகள்
புதிய பதிவுகள் பற்றிய அறிவிப்புகள் பெற நினைவுகள் whatsapp சேனல்