Categories
தமிழ் நினைவுகள்

ஊர் சுற்றலாம் வாங்க – நாசிக் நகரம்

நாசிக் நகரம், இந்திய நாட்டின் மேற்கு பகுதியில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் ஒரு நகரம்.

கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள
அழகான, சிறப்பான, தெய்வீகமான, பூர்விக வரலாறு கொண்ட நகரம்.

கோதாவரி ஆறு

மேலும் இந்தியாவின் திராட்சை நகரம், மற்றும் ஒயின் எனப்படும் திராட்சை ரசத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படும் சிறப்பு உடையது.

கிட்டதட்ட 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரமானது கடல் மட்டத்திலிருந்து 1916 அடி உயரத்தில் இருப்பதால் பகுதி மலைப்பிரதேசம் போல இனிய காலநிலை கொண்டது.

இது மும்பையிலிருந்து 165 கிமீ தொலைவிலும், புனேவிலிருந்து 210 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மும்பை, புனே , நாசிக் இந்த மூன்றையும் இணைத்து மகாராஷ்டிராவின் தங்க முக்கோணம் என்று அழைக்கின்றனர்.

ஏனென்றால் மும்பை மற்றும் புனேவில் தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இருப்பது போல, இந்த ஊரிலும் பெரும்பாலான தொழிற்சாலைகள் உள்ளன.

மேலும் வளர்ந்து வரும் நகரங்களின் மிக முக்கியமான பட்டியலிலும் இது உள்ளது.

இந்த நகரம் தொழிற்சாலைகளின் காணும் மிகப்பெரிய வளர்ச்சியின் காரணமாக, விவசாயத்தைக் கைவிட்டுவிடவில்லை என்பது இதன் இன்னொரு சிறப்பு. இங்கு தான் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 90 சதவீத திராட்சை விளைகிறது.

இந்த காரணத்தால் தான் இது ஒயின் தலைநகரம் என்று போற்றப்படுகிறது. இப்படி தற்காலத்தைத் தாண்டி, இந்த ஊருக்கு வரலாற்றுச் சிறப்பும் உள்ளது.

கோவில்கள் மற்றும் வரலாற்று சிறப்பு

இது தெய்வீகமான இடமும் கூட. பல கோயில்கள் உள்ளன என்பதைத்தாண்டி, ராமாயணக் கதையில் ராமன் சீதை மற்றும் லட்சுமணன் வனவாசம் செய்த இடம், இந்த நகரமே ஆகும். ராமனும் சீதையும் வாழ்ந்ததாக சொல்லப்படும் குகை இங்கே உள்ளது. மேலும் அனுமன் தவமிருந்த இடம் இந்த ஊருக்கு அருகே உள்ளது.

இந்த ஊரில் கபாலீஸ்வரர் கோவில், இந்த ஊருக்கு அருகே த்ரிம்பக்ராஜ் என்ற சிவன் கோவில், ஆகியவை உள்ளன.

அனுமன் தவமிருந்த இடம்

இதெயெல்லாம் தாண்டி இந்த ஊருக்கான பெயர் காரணம் மிகச் சிறப்பான ஒன்று.

லட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த இடம் இந்த ஊர்தான்.

சரியாக அந்த மூக்கு அறுபட்ட இடம் இங்கே தனியாக ஒரு கோவில் போல பராமரிக்கப்பட்டு வருகிறது.

லட்சுமணன் சூர்ப்பனகையை மூக்கறுத்த இடம்

சமஸ்கிருதத்தில் மூக்கு என்பதை நாசி என்று குறிப்பிடுவதால், நாசி அறுபட்ட இந்த இடம் நாசிக் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஊரிலுள்ள ஒவ்வொரு கோவிலும் ஒரு தனிச்சிறப்புடன் உள்ளது. அவற்றை நாம் இன்னொரு பகுதியில் காணலாம்.

உணவகங்கள்

இங்கே சூலா ஒயின் யார்டு என்று 150 ஏக்கர் பரப்பளவில் ஒயின் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உள்ளது. அங்கே ஒயின் மற்றும் உணவு ஆகியவற்றை மக்கள் குடும்பமாக வந்து அருந்தி மனமகிழ்வது சிறப்பு.

அதையும் தாண்டி இங்கே மூன்று சிறப்பான தனித்துவமான உணவகங்கள் உள்ளன. ஒன்று கொய்யா உணவகம். அங்கே ஐஸ்க்ரீம், லஸ்ஸி, டீ உட்பட அனைத்தும் கொய்யா சுவையில் கிடைக்கும். அதேபோல் திராட்சை மற்றும் மாம்பழ உணவகங்கள் உள்ளன.

பெரூட்சி வாடி ( கொய்யா உணவகம்)

நல்லதொரு நகரத்தைப்பற்றி மனநிறைவுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

தொடர்ந்து வாசிக்க, நினைவுகள் முன்பக்கம்.