பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர்.
1952 ஆம் ஆண்டே பராசக்தி படத்தில் திரு.சிவாஜி கணேசன் இந்த வசனத்தைப் பேசி நடித்திருப்பார். அப்படியிருக்கும் போது 2024 ல் சொல்லவா வேண்டும்.
நாம் பிழைக்கச் செல்லும் ஊரில் எத்தனை சொகுசுகளும் வசதிகளும் இருந்தாலும் கூட, பிறந்த ஊர் ஒரு குட்கிராமமாயினும், அந்த பிறந்த ஊரில் இருந்த ஏதோ ஒன்றை பிழைக்கச் சென்ற ஊரில் நாம் தொலைத்தது போன்ற அனுபவம் இல்லாமல் இங்கு யாருமில்லை.
அப்படி என்னுடைய மனதிற்கு நெருக்கமான ஒன்று என் தெருவில் தசரா நாட்களின் போது கொண்டாடப்படும் பண்டிகை.
இதை கோவில் கொடை என்று எங்கள் வழக்கில் அழைப்போம்.
இது எங்கள் தெரு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் பலருக்கும் மனதோடு ஒட்டாத நிகழ்வாக இருக்கலாம். ஆனால் எனது உணர்வுகளின் வழியே நீங்கள் உங்கள் ஊரின் நினைவுகளை கடந்து வரலாம்.
நிகழ்ச்சிகள் வேறுபட்டாலும் உணர்வு என்பது ஒன்றுதானே!
புரட்டாசி மாதம் அமாவாசை தினத்தன்று கோவிலில் பூஜை செய்து காப்பு கட்டப்படும். சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விஜய தசமி அன்று இரவு முழுக்க திருவிழாவும் மறுநாள் மாலை முளைப்பாரியைத் தெப்பத்தில் விடும் நிகழ்வும் நடைபெறும்.
ஆம் முளைப்பாரி என்பது நாம் இப்போது சில சினிமாக்களில் கண்டு ரசித்திருக்கலாம்.
காப்பு கட்டிய பிறகு தெருவில் ஏதோ ஒரு வீட்டில் ஒன்றோ அல்லது இரண்டு நபர்களின் பொறுப்பில் அந்த முளைப்பாரிகள் தொட்டியில் வளர்க்கப்படும். அந்த ஏழு நாட்களும் அந்த வீட்டிற்குள் அந்த இருவரைத் தவிர்த்து யாரும் செல்ல மாட்டார்கள்.
வீடும் பூட்டியே தான் இருக்கும்.
இந்த ஏழு நாட்களும் எங்கள் தெரு மக்கள் விரதம்.
அசைவ உணவு மட்டுமல்ல, மொச்சை, பாசிப்பயிறு , போன்ற தானியங்களும் உட்கொள்வதில்லை.
ஏனென்றால் முளைப்பாரி என்பது தானியத்தில் வளர்வது என்ற காரணத்தால் அந்த ஏழு நாட்களுக்கு தானிய வகைகளைத் தவிர்த்து விடுவோம்.
மேலும் விசேஷம் என்னவென்றால் அந்த ஏழு நாட்களும் இந்த முளைப்பாரி சரியாக வளர வேண்டி ஒரு சொம்பில் நீர் வைத்து கும்மிப் பாடகர் பாடல் ஒலிக்க அதை சுற்றி வட்டமாக பெண்கள், அவர்களைத் தொடர்ந்து ஆண்கள் என்று இருசாராரும் சில பாடல்களுக்கு கும்மியாட்டம் நிகழ்த்துவோம்.
இரவு 9.30 -10 மணிக்கு துவங்கி 1-2 மணி வரை ஏழு நாளும் இந்த கும்மியாட்ட நிகழ்வு நடைபெறும். சில காலம் முன்பு வரை ஆறு நாட்களாக இருந்தது, இப்போது மக்களின் விருப்பத்திற்காக ஏழாவது நாளும் விருப்பத்திற்காக மட்டும் கும்மியாட்டம் நிகழ்த்தப்படுகிறது.
இப்படி கும்மியாடி , பாட்டுப்பாடி விரதமிருந்து வளர்த்த முளைப்பாரி கோவில் கொடை இரவு, அதாவது விஜய தசமி அன்று இரவு கண் திறக்கப்படும். அதாவது வளர்க்கப்பட்ட அந்த வீட்டிலிருத்து கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும்.
அந்த நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் பல நிகழ்ச்சிகளும் உண்டு.
விடிய விடிய கண்விழித்துக் கொண்டாட்டம் தான்.
அம்மனுக்கு பட்டு சாத்துவதற்காக தலைவர் வீட்டிலிருந்து பட்டுப் பரிவட்டம் என்ற நிகழ்வில் துவங்கி, விடிய விடிய பல நிகழ்ச்சிகள் உண்டு.
மேற்சொன்ன முளைப்பாரி அம்மன் கண் திறப்பு என்பதைப்போல, மாவிளக்கு ஊர்வலமும் நள்ளிரவு நேர கும்ப அழைப்பு நிகழ்ச்சியும் மிகச் சிறப்பானது.
நள்ளிரவு சரியாகக் கிளம்பி ஊர் கடைசியில் இருக்கும் பிள்ளையார் கோவில் அருகே பூஜைகள் செய்து, கோவில் பூசாரியையும், வைரவசாமியையும் குளிப்பாட்டி, இருவர் தீப்பந்தம் பிடிக்க, பூசாரி தலையில் கும்பத்தோடு நடந்து கோவிலுக்கு வரும் சிறப்பான நிகழ்ச்சி.
வரும் வழியில் முக்கியமான முச்சந்திகளில் வைரசாமி ஓடிச் சென்று முட்டைகளை எறிந்து காவு கொடுப்பார்.
சிறுவயதில் அந்த நிகழ்ச்சியின் போது மட்டும் எனது தந்தையின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு தான் ரசித்தேன்.
காவு கொடுக்க ஓடும் வைரசாமியின் குறுக்கே யாரும் போகக்கேடாது.
முட்டையை எறிந்தவுடன் முட்டை மேலேயே மறைந்து விடும்
பேய்கள் அதைத் தின்று விடும் என்பதையெல்லாம் நம்பித்தான் இந்த பீதி.
கும்பம் முடிந்து மாவிளக்கு கோவிலுக்கு வந்து சேர்ந்த பிறகு, பெரிய பூஜை நிகழும். அதில் பூசாரி அம்மனாக வந்து எனக்கு ரொம்ப சந்தோஷம் எனக் குறி சொல்வார்.
அது முடிந்த பிறகு படப்பு சோறு. அதாவது அம்மனுக்கும் படைக்கப்பட்ட பிரசாதம்.
சாப்பாட்டில் கறிக்கொழம்பு, கருவாடு, முட்டை, சிக்கன் என அனைத்தையும் பிரட்டி கலவையாக்கி பிரசாதமாகத் தருவார்கள். விடிய விடிய முழித்த பலன் கிடைத்தது போன்ற உணர்வு.
நாம் வீட்டில் எத்தனை கறி எடுத்து சமைத்தாலும் அந்த படப்பு சோறு ருசியை ஈடு செய்ய முடியாது.
விடிந்து சாப்பிட்டு ஒரு உறக்கம். வீட்டில் சொந்த பந்தங்கள் இருக்கும் காரணத்தால் சரியான இடம் கூட அமையாது.
ஆனால் விடிய விடிய விழித்த அலுப்பில் நீட்டி மடக்கி உறங்கினால் எழுந்திருக்க மணி 12 ஆவது தாண்டி விடும்.
அதன் பிறகு மதியம் சாப்பிட்டு முடித்து மீண்டும் ஒரு குட்டி உறக்கம் போட்டால் மணி 4 ஆகும். அப்போதிலிருந்தே முளைப்பாரி ஊர்வலத்திற்கான அழைப்பு ஆரம்பாகி விடும்.
நாட்கள் காத்து விரதம் பிடித்து கண்விழித்து காத்து வளர்ர்த முளைப்பாரியை ஊர் சுற்றி ஊர் எல்லையில் இருக்கும் தெப்ப நீரில் கரைத்து விட்டு,தலையில் இருந்த பாரம் நீங்கி மனதில் பெரிய பாரத்தோடு வீடு வந்து சேர்வோம்.
இந்த பாரத்தை எல்லாம் காணாமல் போகச் செய்வதற்காகவே அடுத்த நிகழ்வு மஞ்சள் நீராட்டு விழா.
கோவில் பூசாரியும் , வைரசாமியும் முன் நடக்க, தெரு இளைஞர்கள் அனைவரும் பின் நடக்க, வீடுதோறும் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை எடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் தலையில் ஊற்றி விளையாடி உச்சகட்ட கொண்டாட்டத்தை அடைந்து வீடு வந்த உறங்க 11 மணி ஆகிவிடும்.
மறுநாள் காலை பளலளிக்கூடமோ, வேலையோ. ஏதாவது ஒரு சில வருடங்களில் மறுநாள் விடுப்பாக இருந்தால் சிறப்பு.
சில குடும்பங்கள் அந்த அடுத்த நாளிலும் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவதும் உண்டு.
இப்படி ஒரு பண்டிகையை இன்றளவும் வழக்கமாகக் கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால் சில ஆண்டுகள் தெரு மக்களின் தொழில் நசிவு காரணமாக பண்டிகை சிறப்பாக அல்லாமல் ஒரு நாள் கூத்தாக முடிந்த கதையும் இருந்தது.
அதன்பிறகு எங்களது நீங்கா நினைவுகளையும் இன்பத்தையும் மீட்டெடுக்க இளைஞர்கள் ஒன்றுகூடி, பண்டிகையின் ஒரு பகுதி செலவை ஏற்றுக்கொண்டு நடத்தத் துவங்கி இன்று மீண்டும் அதே போல பழைய முறையில் கொண்டாடி வருகிறோம்.
மேலும் சிறப்பாக, கொடை அன்று மதியம் ஊர் மக்களுக்கு அன்னதானம் என்ற சிறப்பு நிகழ்வையும் முன்னெடுத்து நடத்தி வருகிறோம்.
சிறு வயதில் எல்லாமே எங்களுக்கு தூரம் தான். படப்பு சோறு வாங்கும் வரசையில் கூட நாங்கள் ஒரு ஆளாகத் தெரிய மாட்டோம்.
அதேபோல கும்மியாட்டத்தில் பெரியவர்கள் ஆடும் போது, எங்களுக்கு கும்மியாட்டம் வராது என்பதால் நாங்கள் அதை தூரம் நின்றே வேடிக்கை பார்ப்போம். சொல்லப்போனால் மாலை 6 மணிக்கெல்லாம் கும்மியடிக்கும் மைதானம் மின்விளக்குகளால் ஒளிர ஆரம்பித்த உடனேயே அங்கே சென்று வட்டமாக கும்மியடித்துப் பழகுவோம்.
இப்படியே பழகி சில நாட்கள் வெட்கமில்லாமல் பெண்களின் கும்மியாட்டத்திலும் பங்கெடுத்து ஆடியிருக்கிறோம். வட்டத்தில் நடந்து பழக வேண்டும் என்பதற்காக. சிறுவர்கள் என்பதால் யாரும் எதுவும் சொல்லுவுமில்லை.
பிறகு படிப்படியாக ஆண்கள் கும்மியில் உள்வட்டத்தில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டு ஆடி, பிறகு பெரியவர்களோடு இணைந்து ஆடி, பெரிய கும்மியாட்டக்காரர்கள் என்று நாங்களே பீத்திக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்ததெல்லாம் காலத்திற்கும் மனதிலிருந்து அழியா நினைவுகள்.
இப்படி நினைவுகளைத் தரும் எங்கள் தெரு கொடை விழா இந்த வருடமும் எந்தக் குறையுமில்லாமல் நிகழ்ந்தது.
ஊர்த்தலைவராக நம்மோடு இயல்பாகப் பழகும் ஆட்கள், கமிட்டியில் இருக்கும் ஆட்களோடு நட்பு, என்று எல்லாமே மாறிவிட்டது.
சிறுவயதில் அந்த ஒரு கரண்டி படப்பு சோறுக்காக எங்கும் ஏக்கம் இப்போது இல்லை.
எல்லாருமே நம்முடன் தோழமை கொண்ட நண்பர்கள் தான்.
சொல்லப்போனால் அன்னதானமும், படையலும் நாங்கள் முன்னின்று பரிமாறி நடத்தும் அளவுக்கு முன்னேறி விட்டது.
சிறுவயதில் ஏக்கம் தீர்ந்து மகிழ்ச்சி கிடைத்த நாட்கள் இப்போது இல்லை. ஆனாலும் இப்போதும் கோவில் கொடை என்னால் மனம் குழந்தையாகித்தான் போகிறது.
எத்தனை காலம் ஆனாலும், எங்கே நான் சென்றாலும் இந்த ஒரு இன்பத்தை எங்கும் அனுபவிக்கலாவேனோ?
கண்டிப்பாக இல்லை. சொந்த ஊரில் நமக்குக் கிடைக்கும் ஏதோ ஒன்று வெளியூரில் இல்லை.
பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர் இந்த ஒரு பகுதியோடு நின்றுவிடாது.
தொடர்ந்து ஏக்கங்கள் கொட்டப்படும்.
விதவிதமாக, மனது சொல்லும் விதங்களில்.
அன்புடன் நினைவுகள்.