இன்று ஒரு தலையங்கம் பார்த்தேன். அறிவை வளர்க்கும் ஆசிரியர் பணி என்ற தலைப்பில்.
அது சரிதான்.
ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி என்றும் சொல்வடை உண்டு.
ஏத்திவிடும் ஏணி, நகர்த்திவிடும் தோனி என்று செப்டம்பர் 5 ஆம் தேதி பெரிய பாராட்டுப் பத்திரமே நடக்கும். இதெல்லாம் சரிதான். ஆனால்,
உண்மையிலேயே ஆசிரியர்களின் நிலை என்ன?
அதை யாரும் அறிந்து கொள்வதுமில்லை, கேள்வி கேட்பதும் இல்லை. நான் சொல்லவருவது தனியார் பள்ளி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலை பற்றி.
எனது தனிப்பட்ட கசப்பான அனுபவங்களையும், சக ஊழியர்கள் பட்ட அவஸ்தைகளையும் இங்கு பதிவு செய்கிறோம்.
எந்தவொரு தொழிலாக இருந்தாலும் உழைப்புக்கேற்ற, தகுதிக்கு ஏற்ற ஊதியம் இருக்க வேண்டும்.
தனியார் பள்ளி கல்லூரிகளில், குறிப்பாக எனக்குத் தெரிந்த பல கல்லூரிகளில், முதுகலைப்பட்டம் முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ரூ 12,000 முதல் ரூ 30,000 வரை சம்பளம் தரப்படுகிறது.
அதுவும் அந்தந்த துறைகளைப் பொறுத்து சம்பளம் நிர்ணயமாகிறது.
எனது துறையில் முதுகலைப்பட்டம் படித்து முடித்த ஒரு நபர், தொழில் நிறுவனங்களில், அதாவது கட்டுமான நிறுவனங்களில் சராசரியாக வாங்கும் சம்பளம் ரூ 60,000.
வடிவமைப்புத் துறையில் 2 லட்சம் வரை சம்பளம் வாங்கும் ஆட்களெல்லாம் இருக்கிறார்கள்.
அப்படியருக்க, எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களை இப்படி குறைந்த சம்பளம் கொடுத்து அவமதிப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி கேட்க ஆட்களில்லை!
முறையான சம்பள உயர்வு
வடிவேலு போலத்தான் சலித்துக் கொள்ள வேண்டும். சம்பளமே முறையா வரல, இதுல முறையான சம்பள உயர்வா? போவியா? என்ற ரீதியில் தான் இருந்தது எனது சொந்த அனுபவம்.
நான் கிட்டதட்ட 9 வருடங்கள் அறப்பணிக்கு என்னை அர்ப்பணித்து என் வாழ்வை சீரழித்துக்கொண்டேன் என்பதே மறுக்க முடியாத உண்மை. அதாவது 24-25 வயதில் பட்ட மேற்படிப்பை முடித்து பிறர் சொல்லைக் கேளாமல், ஆசிரியர் பணியின் மீது எனக்கு இருந்த நல்ல அபிப்ராயம் காரணமாக ஆசிரியராக ஒரு கல்லூரியில் இணைந்தேன். நான் எவ்வளவு கேட்டும், ரூ 25,000 தான் அனுபவமில்லாத ஆசிரியர்களுக்கு சம்பளம் என்றார்கள்.
எனக்கு கட்டுமானத்துறையில் இரண்டு வருட அனுபவம் இருக்கிறது என்று சொன்ன போதும், அது இங்கு ஏற்றுக்கொள்ளப்படாது என்றார்கள்.
சரி என்று நானும் இணைந்தேன்.
பத்து நாட்களுக்குப் பிறகு ஆள் பற்றாக்குறை காரணமாக ஒரு 6 பேரை பணியில் அமர்த்தினார்கள்.
அவர்களுக்கு ரூ 28,000 சம்பளம். இதிலேயே துவங்கியது எனது ஏமாற்றம்.
அடுத்த 8 வருடங்களில் எனக்குத் தரப்பட்ட சம்பள உயர்வு வெறும் ரூ 4,500 மட்டுமே. அதாவது ரூ 29,500 சம்பளம்.
எனது அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் நியாயமாக உயர்த்தப்படவில்லை. அரசாங்கம் நிர்ணயித்த ஏழாவது சம்பள தரப்பட்டியலின் படி என் போன்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சம்பளம் ரூ 70,000 சொச்சம் இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை.
சரி போகிறது. ஆனால் விலைவாசி உயரும் அளவிற்காவது சம்பளம் உயர்த்தப்பட வேண்டாமா?
நான் வேலையில் சேர்ந்த்போது பெட்ரோல் விலை 60, நான் ரூ 29,500 சம்பளம் வாங்கியபோது பெட்ரோல் விலை ரூ 100.
அதாவது 66 சதவீத விலை உயர்வு. ஆனால் எனது சம்பளம் 20 சதவீதமே உயர்ந்து இருந்தது. மேற்சொன்ன விலைவாசி உயர்வு எல்லா காரணிகளுக்கும் பொருத்தம். அப்படியிருக்க எனது சம்பளம் உயர்த்தப்படாமல் இருந்த காரணத்தால் எனது சேமிப்பு குறைந்ததே?
அடுத்த நிகழ்வு இன்னும் அதிர்ச்சி.
சம்பளக்குறைப்பு
அதாவது மாணவர்களின் சேர்க்கையில் வீழ்ச்சி ஏற்பட்ட காரணத்தால் எங்களது சம்பளம் குறைக்கப்பட்டது. இதெல்லாம் நியாயமா சார்.
மாணவர்கள் அதிகளவில் சேர்ந்தபோது எங்களுக்கென்ன நிர்வாகம் லாபத்தில் பங்கு கொடுத்ததா?
இப்படி சம்பள விஷயத்தில் இருக்கும் அவலம் மட்டுமல்ல. தனியார் ஆசிரியர்களின் மற்ற அவலங்களையும், மோசமான நினைவுகளையும் தொடர்ந்து பேசலாம்.
இந்த கட்டுரையின் இரண்டாம் பாகம் இங்கே.
தொடர்ந்து வாசிக்க, செயற்கை நுண்ணறிவு குறித்து சிவப்ரேம் இங்கு எழுதுகிறார்.