Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஆசிரியர் பணி – அவலப்பணி- பகுதி 2

ஆசிரியர் பணியில் எனது தனிப்பட்ட அனுபவம் என்பது கசப்பாக இருந்த விதத்தை பகுதி 1 ல் பேசியிருந்தோம்.

இந்த பகுதியில் மற்ற சில அவலங்களைப் பற்றி பிரச்சினைகள் பற்றி பேசலாம்.

பொதுவாக எந்தவொரு வேலைக்கு சேரும் போதும், பட்டதாரிகளின் பட்டம் நிர்வாகத்தால் வாங்கி வைக்கப்படுவதில்லை.

ஏன் மாவட்ட ஆட்சியாளராகவே பணியாற்றும் நபரிடமும், நேர்காணல் முடிந்த பிறகு, அவரது பட்டங்களை சோதித்து விட்டு அதைத் திருப்பி அளித்து விடுவார்கள்.

ஆனால் இந்த தனியார் கல்லூரிகளிலோ, அடமானம் போல நாங்கள் படித்து வாங்கிய பட்டத்தை அவர்கள் வாங்கி வைத்துக் கொள்வார்கள்.

காரணம் என்னவென்றால், ஒரு செமஸ்டர், அதாவது ஒரு கல்விப் பருவத்தின் நடுவே நாங்கள் வேலையை விட்டு ஓடி விடக்கூடாது என்பதற்காக, பாதுகாப்புக்காக வாங்கி வைக்கிறார்களாம்.

ஒருவேளை போதுமான சம்பளமும், பாதுகாப்பான பணிச்சூழலும் இருக்கும்பட்சத்தில் ஏன் ஒரு வேலையாள் ஓடப்போகிறார்?

இந்த ஒரு விளக்கத்திலேயே அவர்களது லட்சணம் என்னவென்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

மேலும் பல்கலைக்கழகம், இது மாதிரி பட்டங்களை வாங்கி வைக்கக் கூடாது என்று உத்தரவு போட்ட பிறகும் இப்போதும் பல கல்லூரிகளில் அந்த பழக்கம் கைவிடப்படவில்லை.

அந்த உத்தரவு எப்படி வந்தது என்ற வரலாறு மிக மோசம். ஒரு கல்லூரி நிர்வாகம் பணியிலிருந்து விடுதலை பெற நினைத்த பட்டதாரி ஆசிரியரின் பட்டங்களை திருப்பித் தர இயலாது என்று மறுத்த காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பிறகு ஆசிரியர்கள் சார்பாக வழக்குத்தொடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவு வந்த பிறகே பல்கலைக்கழகம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

ஆனாலும் அது மதிக்கப்படுவதில்லை.
காரணம் இங்கே பல கல்வி நிறுவனங்களின் முதலாளிகள் தான் அரசியல் கட்சிகளின் முதுகெலும்பு. அவர்களை யார் கேள்வி கேட்பது?யாராலும் முடியாது என்ற ரீதியில் தான் நடைமுறை உள்ளது.

மாணவர் சேர்க்கை கொடுமை

ஒரு டீ மாஸ்டரின் வேலை என்ன?

டீ போடுவது. கடைக்கு டீ குடிக்க, ஆட்களைக் கூட்டி வந்து அவர்களுக்கு டீ போட்டு கொடுத்து பணம் சம்பாதித்துக் கொடுப்பாரா? ஆனால் தனியார் கல்லூரிகளில் அந்த அவலம் உண்டு.

கல்லூரிகளுக்கு முகவர்கள் போல செயல்பட்டு, வருடத்திற்கு 5-10 மாணவர்களை ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றிரண்டு மாத சம்பளம் நிறுத்தப்படும், சம்பள உயர்வு கிடையாது, சலுகைகள் கிடையாது போன்ற நிலை.

நல்ல நிலையில் இயங்கும் கல்லூரிகளில், துறைகளில் மாணவர்கள் ஏன் சேராமல் இருக்கப்போகிறார்கள்?

ஒரு மாநிலத்தில் 500-700 கல்லூரிகள் இருந்தால் என்ன செய்வது?

இப்படி கல்லூரி கட்டமைப்பில் துவங்கி, எல்லாவற்றிலும் ஏமாற்றும் தனியார் கல்லூரிகளை, பள்ளிகளை எந்த அரசும் கேள்வி கேட்காது.

கொரோனா காலத்தில் மாணவர்களிடம் பணம் முழுமையாக வசூலிக்கப்பட்டது. ஆனால் பல கல்லூரிகள் ஆசிரியர்களுக்குப் பாதி சம்பளமும், பல கல்லூரிகள் சம்பளமே தராமலும் இருந்த காரணத்தால், சாலைகளில் இறங்கி கீரை விற்கும் அளவிற்கு ஆசிரியர் சமுதாயம் ஓஹோவென வாழ்ந்தது. இனியொருமுறை ஆசிரியர் தின வாழ்த்துக் கூறும் முன்பு, சற்றே உங்களால் முடிந்த கேள்வியை எழுப்புங்கள்.

எனது ஆசிரியருக்குத் தேவையான நல்வாழ்க்கை உறுதி படுத்தப்பட்டிருக்கிறதா என்று!

இந்த கட்டுரையின் முதல் பாகம் இங்கே

தொடர்ந்து வாசிக்க, செயற்கை நுண்ணறிவு குறித்து சிவப்ரேம் இங்கு எழுதுகிறார்.

உருவகக் கதை: தவெக தலைவருக்கு வந்த சோதனை

புதிய பதிவுகள் பற்றிய அறிவிப்புகள் பெற நினைவுகள் whatsapp சேனல்