Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

த.வெ.க மாநாடு: தமிழுக்கு வந்த சோதனை

மாபெறும் மாநில மாநாடு 😂

மா- பெறும் மாநில மாநாடு.

இந்த பிரச்சினை குறித்த காணொளி ஏற்கனவே இணையத்தில் பரவலாக பேசப்படும் நிலையில், நாம் நமது பயணத்தில் ஒரு பகுதியாக இதை மேற்குறிப்பிட்டு பேச வேண்டியது அவசியமாகிறது. ஏற்கனவே விஜய் அவர்கள் இந்த தவெக வை நடத்த வாயில் வயரைக்கடித்து வண்டி ஓட்டுவது போல ஓட்ட வேண்டும் என்று ஒரு உருவகக் கதை எழுதியிருந்தோம்.

அதை சற்றும் ஏமாற்றாத வகையில் அந்த கட்சியின் தொண்டர்கள் மிகப்பெரிய பேனர் (விளம்பரப் பதாகை) ஒன்றில் தமிழை தவறாக அச்சிட்டு வைத்து மாட்டிக் கொண்டு அல்லோகலப்படுத்தி இருக்கிறார்கள். அதன் விளக்கம் இதோ!

மாபெறும் மாநில மாநாடு.

மாபெறும் மாநில மாநாடு பேனர்

மாபெறும் என நான் எனது கைபேசியில் எழுத முயன்றாலே அதுவே மாபெரும் எனத் திருத்திக் கொள்கிறது.

ஆனால் எத்தனையோ நபர்கள் படித்தும், அச்சகத்தில் அச்சடிக்கும் வரை கவனிக்காமலும் இப்படி அச்சாகி அது இணையத்தை கலக்க என்ன காரணமாக இருக்கும்?

ஒருவேளை வேண்டுமென்றே வைத்திருப்பார்களா?
ஆராயலாம்.

மா- மாம்பழம் அல்லது விலங்கு என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி.

மாபெறும் என்பது மாம்பழத்தைப் பெறும் என்பதைக் குறிக்கும்.

விக்கிரவாண்டியில் மாபெறும் மன்னிக்கவும், மாபெரும் மாநாடு நிகழ்கிறது. ஒருவேளை இந்தத் தொகுதியல் மாம்பழம் சின்னத்தில் விழும் ஓட்டுகள் அதிகம்.

அந்த ஓட்டுகளை கவரும் விதமாக இந்த மாநாடு அமையப் போகிறது என்பதைக் குறிப்பதற்காக, இதனை மாபெறும் என்று அச்சிட்டார்களா தெரியவில்லை..

ஒருவேளை இப்படி இருக்குமோ?

மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் அனைவருக்கும் மட்டன் பிரியாணி வழங்கப்படும். அதையே மா பெறும் அதாவது விலங்கைப்பெறும் மாநாடு என்று மறைமுகமாக சொல்லியிருப்பார்களோ?

இந்த இரண்டையும் தாண்டி வேறு என்ன இருக்கலாம்?

மாட்டு மூளை போல மாற்றி மாற்றி பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடும் மக்களின் மனதைக் கவரும் மாநாடாக இது அமைந்து, அந்த மாட்டு மூளைகளை தவெக வுக்கு ஓட்டுப் போடத் தூண்டும் என்ற நோக்கத்தில் மாபெறும் என்று எழுதியிருப்பார்களா?

சரி அடுத்த பொருள்.
மா என்றால் பெரிய என்பது பொருள்படும்.

ஒருவேளை பெரிதாக எதையாவது பெறப்போகும் மாநாடு என்பதை மனதில் கொண்டு மா பெறும் என்று அச்சிட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் பொதுவாக தமிழில் மாபெரும் என்று குறிப்பது, மிகப் பெரிய, அல்லது பெரியதை விடப் பெரிது என்பதை விளக்கும்.

எப்போதுமே விஜய் ரசிகர்கள் சற்று வித்தியாசமான ஆட்கள் என்பதை இங்கிருந்தே உணர்த்தத் துவங்கி விட்டார்கள்.

மாபெறும் என்று சூட்சமமாக எதையோ மறைத்து அச்சிட்டு இதை ஒரு இணைய பேசுபொருளாக மாற்றி விட்டார்கள்.

தவறோ, சரியோ நாம் பலரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற தற்கால கோட்பாட்டை தவறில்லாமல் செய்து இணையத்தில் மாநாட்டிற்கான விளம்பரத்தை செய்து விட்டார்கள்.

பாவம் தளபதிக்கு இவர்கள் தான் தலைவலியும், இவர்களே தான் மருந்தும்.

நாம் முன்கூறியது்போல தளபதி வயரை வாயில் கடித்து தான் வண்டி ஓட்ட வேண்டும்போல.

அதில் இன்னொரு தவறும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

மாநிலமே, திரண்டு வாரீர் என்பது. மாநிலமே என்பது மாநில மக்களை மறைமுகமாகக் குறித்தாலும் இந்த நேரடி வார்த்தை அஃறிணை எதிர்நிலையில் உள்ளது.

அப்படியென்றால் ஓரிணையில் மாநிலமே திரண்டு வா என்ற ரீதியில் அது எழுதப்பட்டிருக்கலாம்.

அல்லது மாநில மக்களே திரண்டு வாரீர் என்று மறைமுகமில்லாமல் வெளிப்படையாக இருந்திருக்கலாம்.

சரி, மாபெறும் என்பதற்கே விடை தெரியாமல் இருக்கும் நமக்கு இந்த ஆராய்ச்சி அவசியமற்றது.

சரி கேலிகள் ஒருபுறம் இருக்கட்டும். இப்போது கருத்துக்கு வரலாம்.
ஒரு கட்சியின் சார்பாக எதையாவது அச்சிட்டு விளம்பரம் செய்வதற்கு முன்பு அதை ஒருமுறைக்கு பத்து முறை சரிபார்க்க வேண்டும்.

தமிழில் நாம் பேசுவது சரளமாக இருந்தாலும், எழுதுவது என்பது குறைந்து கொண்டே வருகிறது.

அப்படி இருக்கும் சூழலில் இதுபோன்ற ரகர றகர பிழைகள், லகர, ளகர, ழகர பிழைகள் எல்லாம் வருவது இயல்பு.

ஆனால் கட்சி பேனரில் வருவது ஏற்புடையதல்ல.

அங்கங்கே கட்சிகளில் கவிஞர் அணி என்று ஒரு பெரிய அணி இருக்கும் போது இங்கே பேனரில் எழுத்துப்பிழை , அதுவும் தாய் மொழியில் எழுத்துப்பிழை என்றால் கட்டாயம் கேலிக்கூத்து தான்.

அதுவும் இன்றைய இணைய சமுதாயத்தில் இது போன்ற கேலிக்கூத்துகளை சும்மா விடுவார்களா?

கவனம் தேவை.

இது கேலிக்காக மட்டுமல்ல.

தமிழில் எனக்கு எழுத்துப்பிழை இல்லாமல் எழுத வராது என்று கௌரவமாக உருவாகும் ஒரு சமூக அவலத்தையும் கண்டித்து தான்.

தமிழின் அவலநிலையைத் தொடர்ந்து பேசலாம்.

அன்புடன் நினைவுகள்.