Categories
சினிமா தமிழ்

வேட்டையன்- வச்ச குறி தப்பவில்லை- சினிமா விமர்சனம்

கதை மற்றும் திரைக்கதை பற்றிய முழு வெளிப்பாடும் இல்லாவிட்டாலும், சில பாராட்டுதலுக்காவும், சில விமர்சனங்களுக்காகவும் ஆங்காங்கே சிலவற்றை வெளிப்படுத்த உள்ளோம். சினிமா பார்க்காதவர்கள் கவனத்துல் கொள்ளவும்.

முதலில் இந்தப்படத்திற்கு ஏன் எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றன என்பதே புரியவில்லை.
படம் பார்ப்பதற்கே நான் ஒரு எதிர்மறை நோக்கத்துடன் தான் சென்றேன். ஆனால் ஏமாற்றமோ, மோசமோ இல்லை.

சராசரிக்கு மேற்பட்ட வகை படம் என்றே குறிப்பிடலாம்.

படத்தின் முன்னோட்டத்தில் காட்டப்பட்டது போல, படத்தில் கதாநாயகன் ஒரு அதிரடி காவல் கண்காணிப்பாளர்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.

அதாவது, தவறு செய்து விட்டு அதிகாரத்தாலும், பணத்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நினைக்கும் குற்றவாளிகளை சுட்டுக் கொலை செய்யும் அசாத்தியமான அதிகாரி.

சட்டென ரஜினி இன்ட்ரோ வராமல், பகத் பாசில் பின்பாட்டு பாடியது படத்தின் ஆரம்ப காட்சிகளை சலிப்புற செய்தது.

அதன்பிறகு படத்தின் முக்கியக்கதையை இணைக்கும் துஷாரா சம்பந்தப்பட்ட காட்சிகளும், சிறிது நீளம், அதாவது அவர் ஒரு தைரியசாலி என்பதைக் காட்டுவதற்காக, சில காட்சிகளை இணைத்து படத்தை சற்றே நீளப்படுத்தி விட்டார்கள்.

அதன்பிறகு கதைக்களமான சென்னையில் படம் சூடு பிடிக்கிறது. அங்கிருந்து ஒரு ஆரோக்கியமான க்ரைம் த்ரில்லர் வகை படத்தை அனுபவிக்க இயன்றது.

படத்தின் ஆரம்ப காட்சியில் காட்டப்பட்ட அமிதாப் பச்சன், ரித்திகா சிங், கிஷோர், ரஜினி, துஷாரா ஆகியோர் ஒரு புள்ளியில் வந்து இணையும் நல்ல ஒரு இடைவேளை.

சமீபத்திய ஒரு பெண்ணுக்கு எதிரான கொலை பிரச்சினையில் ஒரு இளைஞன் சிறையில் இறந்து போன பிறகு, ஒரு மாதிரியான எதிரெதிர் பேச்சுகள் கிளம்பியது நமது நினைவில் உள்ளது.

அந்த பையன் அப்பாவி என்பது போல. அதை மையப்படுத்திய கதை, ஒருவேளை அவன் அப்பாவி எனில் கொலை செய்தவன் யார்? என்று கிளம்பும் படம், மேலும் ஒரு சமூக கருத்தையும், சில பொருளாதார குற்றப்பிரிவு சம்பந்தப்பட்ட விளக்கங்களையும் தருகிறது.

போட்டித் தேர்வுகளுக்கும், குறிப்பாக நீட் தேர்வுக்கும், கோச்சிங் சென்டர் என்ற பெயரில் நடக்கும் அவலங்களையும், பணக் கொள்ளையையும், அதனால் மாணவர்கள் சந்திக்கும் பாதிப்புகளையும் மிக விளக்கமாக சொல்லியிருக்கிறது படத்தின் இரண்டாம் பாகம்.

ரஜினிக்காக படம் இல்லாமல் படத்தில் ரஜினி மாஸ் காட்டியிருந்த காரணத்தால், மிக அழகாக ரசிக்கும்படி இருந்தது.

சில சண்டைக்காட்சிகள் விசிலடிக்கும் ரகமாகவே அமைந்திருந்தது.

குறி வச்சா இரை விழனும் என்ற வசனம் அடிக்கடி வந்தாலும், சில இடங்களில் ரசிக்கும்படி இருந்தது.

பாட்ஷா பாணி கண்ணாடி ஸ்டைல் அருமை.

தற்காலிக சமூக அவலத்தை ஏற்கனவே நடந்த ஒரு சந்தேகத்திற்குரிய பிரச்சினையுடன் இணைத்து, கதாநாயகனுக்கும் தேவையான கெத்தை விட்டுக்கொடுக்காமல் படம் அமைந்த விதம் அருமை.

பகத் பாசில் கதாபாத்திரம் படத்தை ஜாலியாக தூக்கிப்பிடித்தது போல, ஒரு பெரிய சோகத்தையும் தந்தது. ஆனால் பல படங்களில் பார்த்து சலித்த ஹேக்கர் கதாபாத்திரம் என்பதால் லேசாக புளித்த இட்லி போல இருந்தாலும், பகத் பாசில் என்ற கார சட்னி அதைத் தூக்கி நிறுத்தி விட்டது.

மிடுக்கான காவல் ஆய்வாளராக ரித்திகா சிங் அருமை. கிஷோர் கதாபாத்திரம் நல்லதொரு சஸ்பென்ஸை தந்தது.

வில்லன் கதாபாத்திரம் பாதி படத்தில் வருகிறது.
ஆனால் பாவம், துஷாரா கதாபாத்திரத்திற்கு தந்த விளக்கம் வில்லன் கதாபாத்திரத்துக்கு தரப்படவில்லை.

பெரிய பணக்காரன் என்றால் கொடூரமான வில்லன் என்று நாமே யூகித்துக் கொள்வோம் என்று விட்டுவிட்டார்கள் போல.

ஆனால் அதுவே நல்லது. படம் இன்னும் நீளமாக இருந்திருந்தால் நம்மை சோதித்திருக்கும். மொத்தத்தில் மிகப்பெரிய ஒரு சமூக கருத்தைப் பேசியிருக்கும் நல்ல படம்.

ஒன்று அல்லது இரண்டு முறை சலிக்காமல் பார்க்கலாம்.

வேட்டையன், வச்ச குறி பெரிதாக சொதப்பவில்லை.

தொடர்ந்து வாசிக்க, நினைவுகள் முன்பக்கம்.