Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

தமிழ்த்தாய் வாழ்த்து- தகராறு வாழ்த்தா?

தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினை

மாப்பிள்ளையோட சீப்பை ஒழித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும் என்பது போல, சில விஷயங்களில் சமீப காலமாக நிகழ்ந்து வரும் கேலிக்கூத்துகள் ஏற்புடையதாக இல்லை.

திருவள்ளுவருக்குக் காவி அணிவித்தாலும், அவர் இந்து என்று சொன்னாலும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அவர் கூறிய கருத்து மாறாது.

அதுபோல, கனியன் பூங்குன்றனார் வழிவாழும் தமிழ்ச் சமூகத்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கருத்து மாறாது.

வெளித்தோற்றத்தின் மாற்றம், ஒட்டுமொத்த கருத்தையும் மாற்றி விடுமா என்ன?

சிறிது காலத்திற்கு முன்பு இசையமைப்பாளர் ரஹ்மான் வெளியிட்ட கருப்பு நிற தமிழ்த்தாயின் உருவப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு வந்தது.

ஏன் தமிழ்த்தாய் கருப்பாக இருக்கக் கூடாதா?

இதே பாணியில் தான் நாம் வணங்கும் கடவுள்களின் முகங்களும்.

அதாவது எந்த ஒரு தெய்வமும் கருப்பு இல்லையா?
தமிழ்க்கடவுளான முருகன் கூட தக தகவென பவுடர் போட்டு கலராகத்தான் இருக்கிறார்.

இதெல்லாம் கடவுளின் கோட்பாடுகளை மாற்றிவிடுமா?

ஆனால் தொடர்ச்சியாக ஒரு கவர்ச்சி என்பது இந்த மாதிரி விஷயங்களில் மறைந்திருக்கிறது.

திருவள்ளவருக்கு திருநீறு அணிவித்தாலும் சண்டை வருகிறது. தமிழன்னை கருப்பு நிற பெண் மாடலாக இருந்தாலும் சண்டை வருகிறது.

இதற்குக் காரணம், ஒரு பொதுப்படையான பிம்பத்தை மக்கள் மனதில் திணிக்க இயல்வது.

அது போலத்தான் இந்த தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் சர்ச்சையும்.

திராவிட நல் திருநாடு என்ற வார்த்தையை எடுத்து விட்டால் என்ன மாறிவிடப்போகிறது?

திராவிடம் என்பது தமிழையும் அடக்கிய மொழிக்குடும்பம் என்று பலவிதமான கருத்துகளும் கூறுகிறது. அப்படியிருக்க அந்த வார்த்தை மீது ஏன் இவ்வளவு வன்மம்?

காரணம், கட்சிகளின் பெயரும், கட்சி தூக்கி நிறுத்தும் விளம்பரப் பெயரும். அதாவது இரண்டு முக்கியமான கட்சிகளுக்கு இடையிலான போட்டி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் தான் பிரதிபலிக்க வேண்டுமா?

அந்த திராவிட என்ற வார்த்தையைத் தூக்கி விட்டால், இந்த இனத்தின் அடையாளமோ, மொழிக்குடும்பமோ மாறி விடப்போகிறதா என்ன?

ஆனால் இது யதார்த்தமாக நிகழ்ந்த தவறு என்று தூர்தர்ஷன் மன்னிப்புக் கோரி விட்டது.

ஆனாலும் சமூக வலைத்தளங்களில் இதை ஒரு சாதனையாக ஒரு சாரார் பிரதிபலிப்பது, நாம் மேற்பேசிய திருவள்ளுவர், தமிழன்னை போன்ற சம்பவங்களைத்தான் நினைவுபடுத்துகிறது.

மேலும் மனோன்மணியம் நூலில் இருந்த தமிழ் வாழ்த்து இது அல்ல, அதில் மேலும் சில வார்த்தைகள் இருந்தன என்றும், திராவிட கட்சிகளின் வசதிப்படி இந்தப்பாடல் வடிவமைகப்பட்டுள்ளதாகவும் ஒரு பேச்சு நிலவுகிறது.

உண்மைதான், இணையத்தில் தேடிய போது அந்த முழுப்பாடல் கிடைத்தது.

இணையத்தில் கிடைத்த பாடல்

அந்த நீக்கப்பட்ட 4 வரிகளின் கருத்து, தமிழன்னையை பிற மொழிகளோடு ஒப்பிட்டு, அந்த மொழிகளை விடப் பெரிதாகவும், அவைகளைப்போல அழிந்து விடக்கூடாது எனவும் இருந்தது.

ஆகையால் தான் அந்த வரிகள் தேவையில்லை என நீக்கப்பட்டிருக்கலாம். நமது தாயை வாழ்த்துகிறோம் என நினைத்து, நீ பக்கத்து வீட்டு அம்மாவை விட நல்லவ என்று சொல்ல முடியாது அல்லவா?

அதானல்தான் அந்த 4 வரி நீக்கம்.

ஆனால் இப்போது இந்த திராவிட நல் நாடு என்ற வரியை நீக்குவது வரலாறையும், புவியியல் அமைப்பையும் பிற மனிதப்பிறவிகளின் மீதான வெறுப்பையும் ஏற்படுத்துகிறது.

தொடர்ந்து வாசிக்க, நினைவுகள்.