Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

இதுதானாப்பா ஜனநாயகம்? இதுவா கட்சிக் கொள்கை?

உனக்கென்னப்பா நீ ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்ற சொல்லாடலை நாம் அடிக்கடி எங்கேயாவது கடந்து வந்திருப்போம்.

அதாவது கஷ்டப்படாமல் வாழ்வில் சிறப்பாக வாழ்ந்து, வெவ்வேறு உயரங்களை, ஒரு பாமரன் கனவில் கூட நினைக்க முடியாத உயரங்களை எளிதாக அடையும் பெரிய பதவியிலிருக்கும் அல்லது பெரிய பணக்கார வீட்டு பிள்ளைகளை பார்த்து பலரும் சொல்லும் வசனம் தான் “உனக்கென்னப்பா, நீ ராஜா வீட்டு கன்னுக்குட்டி”

இன்றைய சூழலில் அப்படி ஒரு ராஜா வீட்டு கன்னுக்குட்டி தான் நமது மாநிலத்தின் துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

திராவிட முன்னேற்ற கழகம் என்பது என்ன, அதன் வரலாறு என்ன? எப்பேர்பட்ட தலைவர்களால் கட்டமைக்கப்பட்டது, யாருடைய கொள்கையால் உருவாக்கப்பட்டது, எதற்காக உருவாக்கப்பட்டது என்பதையெல்லாம் நாம் நினைத்துப் பார்த்தால் இந்த பதவிப்பிரமாணம் முற்றிலும் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று.

சமூக நீதி , அனைவருக்கும் சம வாய்ப்பு, பாமர மக்களின் முன்னேற்றம் என்ற கொள்கையை காற்றில் பறக்க விட்டு, MLA சீட் வாங்குவதற்கு இந்த தகுதி, அமைச்சராக இந்த தகுதி என்று நிர்ணயிக்கப்பட்ட போதே அந்த கட்சி தனது பழைய தகுதியை இழந்து விட்டது.

இன்று ஏதோ பெயரளவில் திராவிட சித்தாந்தங்களை பேசிக்கொண்டு, மதசார்பு கட்சிகளோடு சண்டையிட்டுக் கொண்டு அரசியல் செய்து வருகிறார்கள்.

மக்களுக்கான திட்டங்களில் சிறப்பாக செயல்படுவது என்னவோ ஒருபுறம் இருந்தாலும், கட்சி கட்டமைப்பிலும் சமூக நீதியும், சமத்துவமும் பின்பற்றப்பட்டிருந்தால் சிறப்பு.

இன்று இவரை துணை முதல்வராக ஏற்றுக் கொண்டு கூனிட்டு வளைந்து நிற்கும் கட்சியின் முக்கியப் புள்ளிகளும் திராவிட சித்தாந்தம் என்பதை மறந்து பணமும், அதிகாரமும் என்று வாழும் கூட்டம் தான் என்பதால் இவர் துணை முதல்வர் ஆவதற்கு எதிர்ப்பு எழவில்லை போல..

ஜனநாயகம் என்ற சொல்லின் அர்த்தம் என்னவென்று படித்திருந்தால் கூட இப்படி மன்னராட்சி காலம் போல, இளவரசனை பட்டத்து இளவரசனாக ஆக்கி இருந்திருப்பார்களோ தெரியவில்லை.
அடுத்தது மன்னர் பட்டம் தான்.

இவரது தந்தை திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் கட்சியின் தலைவராக, துணை முதல்வராக, முதல்வராக படிப்படியாக வந்தது கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஏனென்றால் அவரின் கட்சிப்பணிகளும், நீண்ட கால அர்ப்பணிப்பும், சென்னை மேயராக ஆற்றிய நற்தொண்டுகளும் அவருக்கு அந்தத் தகுதியை ஏற்படுத்தித் தந்திருந்தது.

ஆனால் உதயநிதி அவர்களை கட்சியில் இணைந்த குறுகிய காலத்திலேயே நேரடியாக MLA போட்டி, MLA ஆகி ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே அமைச்சர் பதவி, அமைச்சராகி சில மாதங்களில் துணை முதல்வர் பதவி.

திரு.மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதி அவர்கள் துணை முதல்வராகும் முன்பு பயணித்த பயண ஒப்பீடு.

அதாவது இவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் தேர்தலே இதுதான்.
அதற்குள்ளாகவே இவர் துணை முதல்வர் என்றால் , துரைமுருகன், எ.வ .வேலு, ஆ.ராசா, K.N .நேரு போன்ற சீனியர்கள் எல்லாம் வெறும் தொக்கு தானா?

ஏன் இவரது அத்தை கனிமொழிக்கு இந்த துணை முதல்வராகும் தகுதி இல்லையா?

இது மிகப்பெரிய தவறு என்பதை எதிர்த்து சொல்லக்கூட திராணி இல்லாத கட்சியாக திமுக வும் மாறிவிட்டது.

இவர்கள் அதிமுக வை எப்படி விமர்சித்தார்களோ அதை விட களவலமானவர்களாகி விட்டார்கள் இன்று.

என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நான் எனது பணியின் மூலமாக பதில் சொல்வேன் என்கிறார் கன்னுக்குட்டி.

உண்மையிலேயே துணை முதல்வர் பதவியில் ஒரு குரங்கையோ கன்னுக்குட்டியையோ வைத்து நல்ல நாலு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தால் வேலை தன்னைப்போல நடந்து விடப்போகிறது.

இவர் என்னவோ அரசியல் சாணக்கியன் போலவும், பல வருடம் அனுபவம் பெற்றவர் போலவும் பேட்டி தருவதும், அதை மீடியா பெரிதாக பேசுவதும் அடேங்கப்பா.

என்னங்கப்பா இது ஜனநாயகம்?

தமிழ்நாடும், திராவிட கட்சியும் இவர்களது குடும்ப சொத்தா என்ன? இதை எந்த முதுகெலும்பு உள்ள கட்சித்தொண்டன் கேட்கப் போகிறான்?

கண்டிப்பாக அப்படி ஏதும் நடக்காது.
இனிமேல் இப்படித்தான்.

இவர்தான் நமக்கு துணை முதல்வர்.
சொல்ல முடியாது.
திடீரென முதல்வராகவும் அறிவிக்கப்படலாம்.

அறிஞர் அண்ணாவையும், நெடுஞ்செழியனையும், பெரியாரையும் நினைத்து ஒருமுறை மனதில் புழுங்கிக்கொள்கிறேன். உண்மையான திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக துக்கம் அனுசரிக்கிறேன்.

எதிர்த்துப் பேசினாலும் ஏதாவது பிரச்சினை வரலாம்.

நமக்கு எதற்கு வம்பு ?

துணைமுதல்வர் உதயநிதியையும், வருங்கால துணை முதல்வர் இன்பநிதியையும் வாழ்த்தி வணங்கி விடலாமா?

குழப்பத்துடன் நினைவுகள் வலைப்பக்கம்.