அழகிய நாசிக் நகரின் அழகியலை வர்ணித்த முதல் பகுதியின் தொடர்ச்சியாக இந்த இரண்டாவது பகுதி.
ஒரு ஊரில் இத்தகைய சிறப்புகள் மொத்தமும் இருப்பதைக் கண்டு வியந்து போனேன்.
இது ஒரு பகுதி மலை வாசஸ்தளம். கடல் மட்டத்திலிருந்து 1916 அடி உயரம் கொண்டது.
நமது மாநிலத்தின் ஊட்டியில் பாதி உயரம்.
ஆதலால் இங்கு ஊட்டியின் தட்பவெப்ப சூழலில் பாதியை அனுபவிக்கலாம்.
அடுத்தது, இந்த நகரம் கோதாவரி ஆற்றங்கரையில் உள்ளது.
ஆர்ப்பரித்து ஓடும் நதியின் அழகில் மயங்கித்தான் போகிறோம்.
ராமாயண காவியத்தோடு மிகுந்த நெருக்கம் கொண்டது என்பதையும் பார்த்தோம். ராமனும் சீதையும் வனவாசம் தங்கியிருந்த இடம், அவர்கள் இதே கோதாவரியில் குளித்து மகிழ்ந்திருக்கிறார்கள் என்பது ஒரு நம்பிக்கை.
அவர்கள் வாழ்ந்த குகையும் இன்றும் பஞ்சவடியில் உள்ளது. அனைவரும் உள்ளே சென்று பார்க்கலாம்.
அதன் அருகிலேயே காலாராம் கோவிலும் உள்ளது.
நாகர்பாணி கட்டிடக்கலையை ரசிக்கலாம்.
அடுத்தது அழகான கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள கபாலீஸ்வர் கோவில்.
சிறிது படி ஏறி மேலே சென்று தரிசிக்குமாறு அமைந்துள்ள கோவில் இது. இங்கே ஒரு சிறப்பு என்னவென்றால் சிவனுக்கு நந்தி கிடையாது.
முகலாயர்கள் காலத்தில் கோவில் தாக்கப்பட்டு இவ்வாறு நந்தி இல்லாமல் போனதாக ஒரு வரலாறு.
அப்படியே கீழே கோதாவரி அருகே ஒரு லிங்கமும், சீதா குகை அருகே ஒரு லிங்கமும் உள்ளது.
அவற்றுக்கு நாம் நம் கைகளால் அபிஷேகம் செய்து வணங்கலாம்.
கங்கை நதிக்கு மாலை வேளைகளில் மேடை அமைத்து பூஜைகள் செய்வது போல, கோதாவரிக்கும் செய்யப்படுகிறது.
இந்த ஊரிலிருந்து 30 கிமீ தொலைவில் த்ரிம்பகேஸ்வர் என்ற புண்ணிய ஸ்தலம் உள்ளது.
இங்குள்ள சிவன் த்ரிம்பக்ராஜ் என அழைக்கப்படுகிறார்.
இந்த கோவிலில் நந்தி உண்டு ஆனால் லிங்கம் கிடையாது.
ஆஹா இதுதான் சிறப்பு.
லிங்கமில்லா கோவில், பீட பகுதி மட்டுமே உள்ளது.
அதிலும் தனிச்சிறப்பு என்னவென்றால், அந்த பீடத்தின் மையப்பகுதி துளையிலிருந்து 24 மணி நேரமும் நீர் வந்து கொண்டே இருக்கிறது.
அதை அகற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
நாம் நின்று தரிசிக்கும் பகுதியிலிருந்து அந்த சன்னதி கிட்டதட்ட 8-10 அடி கீழே இருக்கும்.
கீழே பார்த்து தான் வணங்குமாறு அமைந்திருக்கிறது.
பெளர்ணமி போன்ற விசேஷ நாட்களில் மட்டும் 200 ரூ கட்டண தரிசனம் செயல்படுகிறது. மற்ற நாட்களில் எவ்வளவு பெரிய மனிதராக இருப்பினும் தர்ம தரிசனம் தான்.
இது ஒரு சிறப்பான வித்தியாசமான ஆன்மீக அனுபவத்தைத் தரும். இந்தக்கோவிலை சார்ந்த குளம், சுத்திகரிக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது.
குளிப்பவர்கள் குளிக்கலாம் அல்லது தீர்த்தமாக கால் நனைத்து விடலாம்.
ஆனால் கபாலீஸ்வர் கோவில் அருகே கோதாவரியில் குளிப்பது ஆனந்தமான அனுபவம்.
சரியாக 4-5 அடி ஆழத்தில் ஓடும் நீர்.
இந்த ஊரில் இன்னொரு முக்கியமான ஆளும் இருக்கிறார். கார்த்திகேயர். ஆமாம் நமது முருகர் தான்.
சீதை குகையிலிருந்து, கபாலீஸ்வர் கோவிலுக்கு நடந்து செல்லும் பாதையில் ஒரு சின்ன கோவிலில் உள்ளார். வித்தியாசமான ஒரு கதையும் இருக்கிறது.
வட இந்தியாவில் முருகர் பிள்ளையாருக்கு அண்ணன். அதிலும் போர்க்கடவுள். கோபக்கார கடவுள்.
அதனால், இந்த ஊரிலுள்ள பெண்கள் மற்றும் பெரும்பாலான ஆண்கள் ஐப்பசி மாத கார்த்திகை நட்சத்திரம் தவிர்த்து மீதி 364 நாட்களும் இந்த முருகனை தரிசிப்பது இல்லையாம். கடவுள் கோபமாக இருப்பதால் அவரைப்பார்க்க பயம்.
அந்த குறிப்பிட்ட நாளில், லட்சிமியும், குபேரரும் இந்தக் கோவிலுக்கு வருவார்களாம்.
அப்போது முருகர் மகிழ்ச்சியாக இருக்கும் காரணத்தால், பெண்கள் குழந்தைகள் உட்பட கிட்டதட்ட 1.5 – 2 லட்சம் பேர் ஒரே நாளில் அந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வார்களாம்.
இந்தக்கோவில் நாட்டுக்கோட்டை நகரத்தார் என்ற ஆட்களால் பராமரிக்கப்படுகிறது.
மேலும் இந்த ஊரிலிந்து 120 கிமீ தொலைவில் பிரபல ஆன்மீக தலமான சீரடி உள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து சீரடி சுற்றுலா கூட்டிச் செல்லும் முகவர்கள் இந்த ஊரையும் இணைத்தே சுற்றிக் காட்டுகிறார்கள். சீரடி தான் முக்கியம் என்பதால் அங்கே பொழுது கழிந்தது போக பாக்கி என்ன உண்டோ அதில் என்ன முடியமோ, அதை மட்டும் காட்டுகிறார்கள்.
ஆனால் தனியாகவே இந்த ஊர் சுற்றிப் பார்க்க சிறந்தது.
விவசாயம், மலை வாசஸ்தளம், கோவில்கள், ஆறு என்பதைத் தாண்டி, தொழிற்சாலைகளும் பஞ்சமில்லாமல் இருக்கிறது இந்த பண நகரத்தில்.
நல்ல நினைவுகளைத் தரும் நல்ல நகரம் நாசிக்.
அன்புடன் அனுபவத்து எழுதும் நினைவுகள்.
புதிய பதிவுகள் பற்றிய அறிவிப்புகள் பெற நினைவுகள் whatsapp சேனல்