Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

பண்டிகை நெரிசலால் கிழிந்து தொங்கும் கிளாம்பாக்கம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

நேற்று என்னுடைய உறவுக்கார மாணவி ஒருத்தரை ஊருக்கு வழியனுப்புவதற்காக சென்றிருந்தேன்.

இது எனக்கு கிளாம்பாக்கத்தில் கிட்டத்தட்ட நான்காவது அனுபவம்.

பழைய மூன்று அனுபவங்களும் சாதாரண நாட்களில் இருந்த காரணத்தால் கொஞ்சம் மனதிற்கு ஆறுதலான அனுபவம் தான்.

ஆனால் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பு விடுமுறை கூட்டத்துடன் கண்ட அனுபவம் வழக்கமான கோயம்பேடு அனுபவமன்றி வேறல்ல.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த காரணத்தால், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகள் வரைக்கும் மாலை 7 மணி வரை பெரிய அல்லோகலம் இல்லை.

ஆனால் நேரம் கூடக் கூட வழக்கமான நெரிசலில் பாதி நெரிசல் இருக்கத்தான் செய்தது. காரணம் இன்னமும் கூட பெரும்பாலான தனியார் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்தே வருகின்றன.

என்ன ஒன்று பெருங்களத்தூரல் நின்று ஆள் ஏற்றாத காரணத்தினால் பெருங்களத்தூர் ஸ்தம்பிக்கவில்லை. அதற்கு பதிலாக கிளாம்பாக்கம் கிழிந்து தொங்குகிறது.

ஆம் நம் கட்டுரையின் தலைப்பு இது தான்.
கிழிந்து தொங்கும் கிளாம்பாக்கம்.

“300 பஸ் வர வேண்டிய இடத்துல, 3000 பஸ் வந்தா என்ன ஆவ?”

இது ஒரு ஆம்னி பேருந்து ஓட்டுனரின் தவிப்பு.

SRM பல்கலைக்கழக வாயிலில் ஏற வேண்டிய அந்த மாணவியை, தாமதமாகும் சூழ்நிலை அறிந்து கிளாம்பாக்கம் அழைத்துச் சென்றேன்.

SRM பல்கலைக்கழக வாயிலுக்கு 7.30 மணிக்கு வர வேண்டிய அந்தப் பேருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் 7.45 மணிக்கு நுழைந்தது.

கோயம்பேட்டில் 6.30 க்கு கிளம்பியது.

அடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கிளம்பிய பேருந்துகள், அதாவது கோயம்பேட்டில் இருந்து 7.30 மணிக்குக் கிளம்பிய பேருந்துகள் கிளாம்பாக்க நுழைவுவாயிலை அடையவே 9-9.30 மணி ஆனது என்ற தகவல்.

சரி எங்க கதையைத் தொடரலாம்

நாங்களும் கிளாம்பாக்கத்திற்குள் 7.45 மணிக்கே நுழைந்தோம். பேருந்து கிளாம்பாக்க முனையத்தின் வாயிலில் இருந்ததை இணைய வழிகாட்டியில் தெரிந்துகொண்ட என் உறவுக்கார மாணவி, அவசர அவசரமாக நீங்கள் கிளம்புங்கள் நான் 11 ஆவது நடைமேடையில் பேருந்தைக் கண்டு ஏறிக்கொள்கிறேன் என்று சென்று விட்டாள்.

வண்டியை, வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு அவளைப் பேருந்தில் ஏற்றி விடலாம் என்ற எண்ணம். ஆனால் கடந்தமுறை நான் வாகன நிறுத்தத்தில் அனுபவித்த நறுமண அனுபவம் என்னை வாகன நிறுத்தத்தின் உள்ளே செல்ல விடாமல் தடுத்து விட்டது.

ஆமாம் தரைதளத்திலிருந்து இரண்டாவதோ, மூன்றாவதோ கீழ்தளத்தில் வாகன நிறுத்தம் உள்ளது. மேலே பயணிகள் பெய்யும் மொத்த சிறுநீரும் அந்த தளத்தில் கசிகிறது.

சேர்ந்தாற்போல் ஒரு 2 நிமிடம் அங்கே நிற்க இயலவில்லை. இப்பொழுது என்ன நிலை என்பது தெரியவில்லை.

யோசடையுடன் சற்று முன்னே நகர்ந்து பார்த்தபோது பலரும் வெளியே வாகனத்தை நிறுத்தி விட்டு அழைத்து வந்தவர்களை நடைமேடை வரை விடச் சென்றார்கள்.
சுத்தமாக கைபேசி அலைவரிசையும் கிடைக்காத காரணத்தால் நானும் என் உறவுக்கார மாணவியைத் தேடி உள்ளே சென்றேன்.

7.45 மணிக்கு வாயிலில் நுழைந்த பேருந்து நடைமேடை வரும்போது மணி பத்து.

கிளாம்பாக்க பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறும் போது மணி 10.30.

காரணம் இது தான். 300 பேருந்து இயங்க வேண்டிய இடத்தில் 3000 பேருந்து இயங்கினால் சரிவருமா?

ஒரு பேருந்து முன்னே செல்ல இயலாமல் நிற்கும் போது அதன் பின்னே வந்த பேருந்து நடைமேடைக்குள் நுழைய இயலாமல் தடைபடுகிறது. அதே மாதிரி பல நடைமேடைகளிலிருந்தும் கிளம்பும் பேருந்துகள் வெளியே செல்ல வழியில்லாமல் தடைபடுகிறது.

நடைமேடைக்கு வெளியே அணிவகுத்து நிற்கும் பேருந்துகளால் நடைமேடையை விட்டு வெளியேற இயலாத ஆம்னி பேருந்து

நெரிசலும், தாமதமும் சென்னையிலிருந்து சற்றுத் தள்ளிப் போயிருக்கிறது என்று சொல்லலாமே ஒழிய, இல்லை என்று சொல்ல முடியவில்லை.

இன்னும் சற்று சிறப்பான சிந்தனை தேவை.

இப்படியான பண்டிகை நாட்களிலாவது, ஆம்னி பேருந்துகளுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சற்று தளர்வு கொடுக்கலாம்.

அப்படி மாற்று வழி பிறக்குமாயின் கிளாம்பாக்கம் சற்றே காலியாகும்.

அனைவருக்கும் பயண அனுபவம் இனியதாகும்.

அன்புடன் நினைவுகள்.