உறவாக வாழ்ந்தவர்கள் உடலாக மட்டுமே நம்மோடு வாழ்ந்தவர்கள் அல்ல.
நமது நினைவுகளிலும், உயிரிலும் கலந்த அவர்கள் மண்ணுலகிலிருந்து பூத உடலை விட்டுப் பிரிந்தாலும், நம்மிடையே வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை உணர அதிக காலம் தேவைப்படுகிறது.
ஆறுதலுக்காக மட்டுமே ஆன்மா என்ற வார்த்தை உருவாக்கப்பட்டிருந்தால் இங்கே பாதி பேர் நடைபிணம் தான்.
அனுபவத்தில் பிறந்தது தான் ஆன்மா என்ற அந்த சொல்.
நம்மை விட்டுப் பிரிந்த நமது உறவு உன்னதமான ஆன்மாவாக என்றென்றும் நம்மோடு வாழ்வதை வாழ்வின் வெவ்வேறு சூழ்நிலைகளில் நம்மாமல் உணர இயலும்.
கனவிலோ, ஏதாவது பழைய ஞாபகங்களின் வழியாகவோ, வார்த்தைகளின் வழியாகவோ, நண்பர்களையோ, உறவினர்களையோ சந்திக்கும் போது அவர்களைப் பற்றி பேச்சு வருகிறது என்றால் அது அவர்கள் அந்த இடத்தில் அந்த குறிப்பிட்ட நபரின் வழியே நம்மிடம் தொடர்பு கொள்வதாகத்தான் அர்த்தம்.
அவ்வளவு தான் முடிந்து விட்டது . இனி இவர் நம்மோடு இல்லை என்ற நிலை நல்ல உறவுகளுக்கிடையே இல்லவே இல்லை என்பதை உணர ஆரம்பிக்கும் போது உடல் என்பது மட்டுமே தொடர்பு ஊடகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அறிகிறோம்.
இவ்வளவு பெரிய கட்டுரையை எழுதும் நான் இதை என் மூளையிலிருந்து எழுதுகிறேனா? மனதிலிருந்து எழுதுகிறேனா? அல்லது என்னோடு இருந்து மறைந்து இன்று என்னோடு இருக்கும் எனது உன்னதமான உறவின் தூண்டுதலால் எழுதுகிறேனா என்பதே புரியவில்லை.
இதை இதே கோர்வையில் இன்னொரு முறை எழுத எனக்குத் தெரியாது. ஏனென்றால் இதை எப்படித் தொடங்கினேன் என்னென்ன எழுதினேன், ஏன் இது எவ்வளவு பெரியது என்பது கூட எனக்குத் தெரியவில்லை. எழுதி முடித்த பிறகு தான் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு விஷயம்.
நம்மால் இழப்பைத் தாங்க இயலாது என்பது உண்மை.
இறந்தவர்களை நினைக்கும் போது ஒவ்வொரு முறையும், சிறிது காலம் வரை கண்ணும், அதன்பிறகு இதயமும் கலங்கத்தான் செய்யும்.
ஆனால் அதைத் துடைத்துக் கொள்ளும் நம் கைகள் நமக்கான கைகள் மட்டுமல்ல. மனதிலிருந்து அவர்களின் ஆன்மா உரையாடி நம்மை சமாதானப்படுத்தி கண்களைத் துடைக்கிறது என்பதே உண்மை.
வந்தவரெல்லாம் தங்கிவிடத்தான் மனிதப்பதருக்கு ஆசை.
ஆனால் நாம் சாதாரண மனிதப்பதர்கள் தானே!
இயற்கையை மீறி என்ன செய்து விட முடியும்?
ஒன்றே ஒன்று செய்யலாம்.
அந்த இயற்கை என்ன செய்தாலும் என்னிடமிருந்து என் உன்னதமான உறவின் பூத உடலைத்தான் பறிக்க முடியும். ஒருபோதும் எங்களின் உணர்வுகளையோ, நினைவுகளையோ, எங்களுக்குள் இருந்த அன்பையோ ஒன்றும் செய்ய இயலாது!
உண்மைதானே!
தைரியமாக வாழக்கையை முன்னெடுப்போம்.
வந்தவரெல்லாம் இங்கே தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கான இடம் இல்லாமல் போயிருக்கும்.
வயோதிகமும், உடல் பிரச்சினைகளும் அவர்களை வாட்டியிருக்கும்.
வாழ்க்கை என்பது பூத உடலினுள்ளே ஆன்மா அடைந்து கிடப்பதல்ல, அதை விடுத்து இறைவனிடம் சரண்டைவதே சித்தம் என்ற ஆன்மீக கோட்பாட்டை அறிந்தவராயினும், உறவு மண்ணை விட்டு மறைந்து போகும் போது மனது வலிக்கத்தான் செய்கிறது.
ஆனால் வலிக்காத தசை பலமடைவதில்லை என்பதைப்போல நாம் பக்குவமான மனிதனாக மாற இந்த மறவ முடியாத வலி என்பது என்றென்றும் உறுதுணையாக நிற்கும்.
ஒரு இழப்பைச் சந்தித்த மனிதன் அடையும் பக்குவம் என்பது வேறு எந்த சூழலிலும் கிடைப்பதில்லை.
ஏன் இந்த சுழற்சி?
இது இப்படியே இருந்துவிடக்கூடாதா?
எனது அப்பா, எனது அப்பாவாகவே, எனது தாத்தா எனது தாத்தாவாகவே, எனது பாட்டி எனது பாட்டியாகவே இங்கேயே தங்கிவிட்டால் என்ன?
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கும்.
நடைமுறைக்கு சரிவராது.
நடைமுறையைப் பழகிவிட்டால், இழப்பு ஏன் என்பது புரிந்து மனது பக்குவம் அடைந்து விடும்.
எத்தனை பக்குவம் அடைந்தாலும் என்றாவது ஒரு நாள் அந்த இழப்பை நினைத்து மிகப்பெரிய வருத்தம் அடையலாம். இதைப்போல.
நித்தமும் ஏதாவது ஒன்று குத்திக் கொண்டே இருக்கலாம் நம் இழப்பின் வலியை அதிகப்படுத்த.
ஆனாலும் வேறு வழியில்லை.
பழகித்தான் ஆக வேண்டும், பக்குவப்படத்தான் வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
காலத்தின் கட்டாயத்தை கடவுளாலேயே மீற முடியாது என்ற பல புராண கதைகளைக் கடந்து வந்த நாம், என்ன? சாதாரண மனிதர்கள்.
இதிலிருந்து விலக்கா?
அனுபவித்தே ஆக வேண்டும்.
மறக்க முடியாது ஆனால் பழகிக் கொள்ளலாம்.
வருத்தங்களுடன் நினைவுகள்
தொடர்ந்து வாசிக்க, முன்பக்கம், மற்றும் நினைவுகள் துணைப்பிரிவு