Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

பட்டாசு மட்டும் தான் மாசுபொருளா?

தீபாவளி பண்டிகை என்றாலே முக்கியமான 2 விஷயங்கள் பட்டாசும், புத்தாடைகளும் தான்.

அதில் ஒரு முக்கியமான விஷயம் சமீப காலங்களில் மிகப்பெரிய பேசுபொருளாகி வருகிறது.

பட்டாசு தான் அது.

பட்டாசு சுற்றுச் சூழல் மாசு.
பட்டாசு வெடிக்கும் காரணத்தால் ஒரே நாளில் இவ்வளவு புகை கிளம்பியது.
பட்டாசு வெடித்து முடித்த இரண்டு நாட்களுக்கு நகரம் முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது போல இருந்தது.

பசுமைப் பட்டாசு, சீனப்பட்டாசு என்று பல பல விதங்களில் பட்டாசு சம்பந்தமான பேச்சு அதிகரித்துள்ளது.

அதாவது பட்டாசு வெடிப்பது மட்டுமே உலக சூழல் மாற்றத்திற்குக் காரணம். மற்றபடி எந்த விதத்திலும் உலகத்தின் சுற்றுச் சூழல் மாசுபடுமாறு மனிதன் நடந்து கொள்வதே இல்லை.

ஆகவே இந்தப் பட்டாசு வெடிப்பதை மட்டும் நிறுத்தி விட்டால் உலகின் மாசு ஒட்டுமொத்தமாக அழிந்து விடும் என்ற ரீதியில் சமீப காலமாக பேச்சுகள் அதிகரித்துள்ளது.

இன்னொரு ரகம் தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?
நரகாசூரன் என்று ஒருவன் இருந்தானா? ஆதாரம் இருக்கிறதா?

நாமெல்லாம் தான் அசுரர்கள். நம்மில் ஒருவர் இறந்ததைத் கொண்டாடலாமா என்றும் ஒரு பேச்சு!

ஏங்க, 10 வயசு பையனுக்குத் தெரியுமாங்க இந்த சுற்றுச் சூழல் மாசும், நரகாசூரன் கதையின் அறிவியல் ஆதார ஆய்வுகளும்?

சிறுவர்கள் கொண்டாடும் மத்தாப்பு வகைகள்

பாக்கெட்ட பிரிச்சு 2 மிளகா வெடிய ஒன்னா கோர்த்து பத்த வெச்சுட்டு ஓடி வருவான். ஒன்னு அங்குனயே வெடிக்கும், இன்னொன்னு பறந்து போய் வெடிக்கும். அப்ப குதிச்சு அவனோட நண்பர்களோட இன்பத்தப் பகிருவான்.

அடுத்தது, 7-8 மிளகா வெடிய ஒன்னா சேர்த்து பத்து வெப்பானுங்க

8 ம் வெடிச்சுட்டா, ஏதோ ராக்கெட் கண்டுபிடிச்ச விஞ்ஞானி மாதிரி , நாங்களே சரவெடி செஞ்சு வெடிச்சோம்னு பெருமையா 2 நாளைக்குப் பேசிக்குவாங்க.

பட்டாசு இணைய புகைப்படம்

அவங்ககிட்ட போயி சுற்றுச் சூழல் சீர்கேடுனு பேசி, அவங்க மகிழ்ச்சியில மண்ணள்ளி போடனுமா?

இன்னொரு விஷயம் இருக்குங்க. எப்படி விவசாயிகளுக்கு குரல் கொடுக்குறமோ, அதே மாதிரி தாங்க சிவகாசி பட்டாசு தொழிலாளர்களும்.

இந்த ஒரு நாள் வியாபாரத்த நம்பி தான் அவங்க வருஷம் முழுக்க வேலை செய்றாங்க.

வேலைன்னா, வெள்ளையும், ஜொள்ளையுமா செய்றதில்ல.
பட்டாசு மருந்து அவங்க உடம்பு முழுக்க பட்டு அரிக்கும். அதோட வீட்டுக்கு வந்து குளிச்சுட்டு தான் அவங்க அடுத்த வேலையப் பாக்க முடியும்.

சில இடங்கள்ல விபத்து ஏற்பட்டு உயிர்பலி நடக்குறதையும் நாம அப்பப்ப பார்க்க தானே செய்யுறோம். அவங்க வாழுறதுக்காவாவது கொஞ்சம் இரக்கம் காட்டி ஆகனும்.

பட்டாசு மாசு கட்டுப்படுத்தப்படனும், தேவை தான்.

பட்டாசு மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தி, புது ரக மாசு குறைவான மாற்று வேதிபொருட்களைப் பரிந்துரைக்கலாம். சரவெடி ரக பட்டாசுகளின் விற்பனையைக் கட்டுப்படுத்தலாம்.

மிக உயர் ரக, வண்ண வண்ண வெடிகள், பகுமானத்துக்காக வெடிக்கப்படும் பட்டாசுகளின் அளவைக் கட்டுப்படுத்தலாம் அல்லது விலையை அதிகப்படுத்தி அதன் விற்பனையைக் குறைக்கலாம்.

வான வேடிக்கை பட்டாசுகள்

பட்டாசு விற்பனையை ஒழுங்குபடுத்தலாம்.

ஏற்கனவே நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதுவே அதிகபட்சமாகத்தான் தெரிகிறது. எனது எண்ணப்படி காலை வேளையில் ஒரு 3 மணிநேரமும், மாலை வேளையில் 3 மணி நேரமும் பட்டாசு வெடிப்பதற்காக ஒதுக்கலாம்.

இப்படியெல்லாம் செய்து பட்டாசு மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தலாம்

அதை விடுத்து ஒரே அடியாக ஒரு மாவட்டத்தின் பிழைப்பிலும், குழந்தைப் பருவத்தின் இன்ப நிலையிலும் மண்ணள்ளி போட நினைப்பது தவறு தானே!

இன்று வரை என் மனதில் நீங்கா இனிய நினைவுகள் என்றால் அது பல தீபாவளி நாட்களாகவும், நாங்கள் பட்டாசு வெடித்த நாட்களாகவும் தான் இருக்கும்.

அப்படி ஒரு நீங்கா நல் நினைவுகளைத் தரும் நன்னாளை இந்த சந்ததியிடமிருந்து இல்லாமல் ஆக்கி விடுவதற்கா இந்த ஆதங்கம்?

பட்டாசு மாசைப்பற்றி பேசும் பல சமூக ஆர்வலர்களும், வாகன புகை மாசு பற்றி ஏன் பேசுவதில்லை.

பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் மாசு குறைக்கப்படுவதற்காக, ஒரு வாரமோ, பத்து நாளோ அனைவரும் அலுவலகத்திற்கு சொந்த வாகனத்திற்கு வரக்கூடாது என்ற விதிமுறை வந்தால் ஏற்றுக் கொள்ளுமா இந்த சமூகம்?

புத்தாடைகள்

நாம் உடுத்தும் ஆடைகளின் மூலமாக எந்தவித மாசும் அடையவில்லையா இந்த பூமி?

சாயக்கழிவுகளால் ஏற்படும் மாசு யார் கண்களுக்கும் தெரிவதில்லையா?

சாயம் போட்ட ஆடைகளை விடுத்து பழைய மாதிரி கதர் ஆடைகளையோ, கைத்தறியில் இயற்கை சாயம் பூசப்பட்ட ஆடைகளையோ அணிவிக்க இந்த சமுதாயம் தயாராக இருக்கிறதா?

அப்படி கைத்தறி ஆடைகளை அணிந்தால் நெசவு செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையாவது மேம்படும்.

இப்படி எல்லா விஷயத்திலும் அவரவர் சௌகரியத்தை தானே முதன்மையாகக் கருதுகிறோம்.

உதாரணத்திற்காக 4-5 ஆட்கள் பயணிக்கும் மகிழுந்தில் ஒரே ஒருவர் தினமும் அலுவலகம் சென்று வருவதனால் ஏற்படும் காற்று மாசு, போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை மனதில் கொண்டு இனி மகிழுந்தில் காரணமில்லாமல் ஒருவர் மட்டும் பயணித்தால் கடுமையான அபராதம் அல்லது தடை விதிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்வார்களா?

இதையெல்லாம் பற்றி துளியும் யோசிக்காத, இந்த சமுதாயமும், அரசாங்கமும், மக்களும், சமூக ஆர்வலர்களும் இந்த பொடியன்களின் சந்தோஷத்திற்குக் காரணமான பட்டாசை மட்டும் குறிவைப்பது நியாயமல்ல.

ஏசி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என்று அன்றாடம் பூமிக்கு பாரம் விளைவிக்கும் நாம் இந்த ஒரு நாளில் ஏற்படும் மாசு பற்றி மட்டும் பேசி உலகத்தைக் காப்பாற்றப் போகிறோமா?

சற்று சிந்திக்கலாமே?

கேள்விகளுடன் நினைவுகள்.