கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்ற குறளை முதல் வகுப்புக்கும் முன்னரே படித்து விடுவதால் இந்தத் தலைமுறை கற்பவற்றைக் கற்ற பிறகு அதற்குத் தகுந்தாற் போல நிற்பதில்லை போல.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கல்வியை படிக்கும் இந்தத் தலைமுறை அதன்படி நடந்து கொள்கிறதா என்பதை நாம் அன்றாட செய்திகளின் மூலமாக அறிந்து கொள்ளத்தானே செய்கிறோம்.
மேலும் கல்வி என்பது பொது ஒழுக்கத்தையும், மனித நேயத்தையும், அன்பையும் சக உயிர்களை மதிக்கும் பண்பையும் கற்றுத் தர வேண்டும். மேலும் கல்வி ஒரு மாணவனுக்கு வாழக்கையை சிறப்பானதாக வாழும் தைரியத்தைத் தர வேண்டும்.
ஆனால் இன்றைய கல்வியோ மாணவர்களிடையே போட்டி, பொறாமையை உருவாக்கி அவர்களை தற்கொலை செய்யும் அளவிற்குத் தூண்டுகிறது.
இதற்கு கல்வி முறை சரியில்லை என்று காரணம் சொல்லி விட இயலாது.
இதே கல்வித்திட்டம் தான் பல முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கி, பலரது வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கிறது.
அதேசமயம் மாணவர்களின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமையும், பெற்றோரின் கனவுகளும் அவர்களைத் தவறான பாதைக்கு வழி நடத்துகிறது.
கல்வியில் நாம் அனைவரும் பெரு மதிப்பு அளிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர், மாடியில் இருந்து உயிரோடு இருந்த ஒரு நாயைத் தூக்கி எறிந்து அதை காணொளியாகப் பதிவு செய்திருந்த விவகாரம் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அதேபோல சமீபத்தில் ஐந்தாம் ஆண்டு படிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் குடி போதையில் இரண்டு மூன்றாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்து, அவர்களின் தலையில் மது பாட்டில்களால் அடித்து மண்டையை உடைத்த செய்தி அறிந்து மனம் வருந்தினோம்.
மருத்துவம் செய்ய தகுதி வாய்ந்த ஐந்தாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் இப்படி மண்டையை உடைப்பது தான் அவர்களுக்குக் கல்வி சொல்லிக் கொடுத்ததா?
மேலும் இன்றைய தினம் நிகழும் பல இணையவழி மோசடிகளும் முழுக்க முழுக்கக் கற்றவர்களால் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது என்பது கொடுமை.
ஒழுக்கத்தை கற்றுத் தரும் கல்வியைப் பயின்றுவிட்டு அந்தக் கல்வியின் வழி நில்லாத மனிதர்கள் மாற வேண்டுமா அல்லது கல்வி இன்னும் கண்டிப்பான முறையில் மேற்கண்ட விஷயங்களை சொல்லித் தர வேண்டுமா?
கேள்விகளுடன் நினைவுகள்.