Categories
சிறுகதை தமிழ்

மகப்பேறு – சிறுகதை

வைஷ்ணவியும், கதிரவனும், காதலித்து திருமணம் செய்தவர்கள்.

திருமணம் செய்தார்கள் என்று ஒற்றை வரியில் இருப்பதால், அவ்வளவு எளிதாக திருமணம் நிகழ்ந்துவிட்டதாக எண்ண வேண்டாம். எந்த காலத்திலும் பெண் பிள்ளையைப் பெற்றவர்களுக்கு மகளை நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்து கரை சேர்ப்பது என்பது மிகப்பெரிய சவால் தானே?

ஊர் கூடி, ஆசிர்வாதம் செய்து, உறவினர்களுக்கு சொல்லி, ஜாதகம் பார்த்து, மந்திரங்கள் ஓதி செய்து வைக்கப்பட்ட திருமணங்களே ஓரிரு ஆண்டுகளில் சந்தி சிரிக்க சபைக்கு வந்து வாதாடி விவாகரத்து பெற்று முடிகிறதே?

காதல் என்ற பெயரில், பார்க், பீச்சில், மால்களில், சினிமா தியேட்டர்களில், வண்டியில் ஊர்சுற்றிய நேரத்தில் இவர்கள் என்ன புரிந்து கொண்டிருப்பார்கள்?

அந்த பையன் எப்படிப்பட்டவன்?
அவன் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை?
அவர்கள் பின்புலம் என்ன?

இதெல்லாம் தெரியாமல் திடீரென பெண் பிள்ளை காதலிக்கிறது என்று சொன்ன உடனேயே ஒப்புக்கொண்டு விடுவார்களா? அவளைப்பெற்றவர்கள்?

பெண் வீட்டில் சம்மதம் கிடைக்க பல மாதங்கள் போராடிய பின்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இருவரும் பள்ளி ஆசிரியர்கள்.

திருமணம் தடபுடலாக நடந்து முடிந்தது.

திருமணம் நடந்து முடிந்த சில மாதங்களில் , ஏதும் விஷேசம் உண்டா என்ற கேள்வி எழாமலா இருக்கும்?

ஆனால் இந்த காலகட்டத்தில், திருமணம் முடிந்து இயல்பாக சில மாதங்களில் குழந்தை பிறப்பது என்பது அரிதாக அல்லவா மாறிவிட்டது?

திட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம்,
நாம் இருவர் நமக்கு இருவர்,
நாம் இருவர் நமக்கு ஒருவர்;

காப்பர்- டி வாசகங்கள், ஆணுறைக்கான விளம்பரங்கள் என சில வருடங்களுக்கு முன்பு இருந்த சூழ்நிலை இப்போது எங்கே இருக்கிறது?

நமக்கு விவரம் தெரிந்து வெள்ளிக்கிழமை இரவு தூர்தர்ஷன் சேனலில் படம் போடும் போது காப்பர் டி விளம்பரம் அடிக்கடி வரும்.

அந்த மாதிரியான ஒரு சூழ்நிலை இன்று எப்படி மாறி இருக்கிறது? எந்த சேனலிலும், எப்.எம். ரேடியோவிலும் சரி, கருத்தரிப்பு மையங்கள் பற்றிய விளம்பரங்கள் இல்லாமல் இல்லை.

ஏரியாவுக்கு 4 கருத்தரிப்பு மையங்கள்.

நாய், பூனை, ஆடு, மாடு போல இயற்கையாக மனிதனுக்கு நடக்க வேண்டிய இனப்பெருக்கம், பணத்துக்காக, வியாபாரம் ஆக அல்லவா மாறிவிட்டது?

ஒருபுறம் ஆண்களை பயமுறுத்தும் சித்த வைத்திய தாத்தாக்கள், மறுபுறம் விஷம் நிறைந்த உணவுகள், சிகரெட், சாராயம், மாசு, தூசு, வேலைப்பளூ.
அய்யோ சாமி!

அப்படி விஷம் கலந்த உணவுகளும், பிட்ஸா, பர்கர் போன்ற விஷங்களும் இந்த தம்பதியையும் சோதிக்க தவறவில்லை.

இயற்கையாக, இயல்பாக, சீரான காலத்தில் வரும் மாதவிடாய் என்பது இந்த காலத்தில் நூற்றில் எழுபது பெண்களுக்கு இல்லை. காரணம் சூழ்நிலை, சமுதாயம், உணவு, பழக்க வழக்கம்.

அது குழந்தை பெறுவதில் நிச்சயம் சிக்கலை உருவாக்காமல் இருப்பதில்லை.

இந்த தம்பதியும் அதில் விதிவிலக்கல்ல.

வைஷ்ணவிக்கும் மாதவிடாய் இயல்பான சீரான கால இடைவெளியில் வராது. திருமணம் முடிந்து சில காலத்தில் சில பெண்களுக்கு இது இயற்கையாகவே சரி ஆகும் என்ற நம்பிக்கையும் ஆறு மாத காலத்தில் உடைந்து போனது.

காதலித்து திருமணம் செய்த தம்பதி என்பதால் அவர்களுக்கு எந்த மனச்சலனமும் இல்லை.

ஆனால் பெண்ணை பெற்ற அம்மாவுக்கு மனவேதனை தீரவில்லை. வைஷ்ணவியை மருத்தவமனைக்கு அழைத்து சென்றே ஆக வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்.

அவர்கள் விருப்பத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக, வைஷ்ணவி மருத்துவமனைக்கு செல்ல ஆரம்பித்தாள்.

வைஷ்ணவிக்கு மருத்துவம் துவங்கும் போதே, கதிரவனையும் சோதித்துக்கொள்ள செய்தார்கள்!

அவனிடம் ஏதாவது குறை இருந்தால், அதிலும் பணம் சம்பாதிக்கலாமே?

அவனிடம் குறை ஒன்றும் இல்லை என முடிவு தெரிந்த பின், வைஷ்ணவிக்கு ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து மருத்துவம் பார்க்க துவங்கினார்கள்.

சில மாதங்கள் ஒரு நாள் விட்டு ஒருநாள் மருத்துவமனை சென்று ஏதோ ஊசி போட்டுக்கொண்டால் தான் இயற்கையாக 30 நாளில் வரவேண்டிய மாதவிடாய் வரும்.

இயற்கையாக நிகழும் நிகழ்வுக்கு சில ஆயிரங்கள் செலவு செய்து, அலைந்து திரிந்து வரிசையில் நின்று ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயம்.

அப்படி இப்படி மீண்டும் ஆறு மாதங்கள் கழிய அந்த மருத்துவத்தை தொடர வைஷ்ணவிக்கு மனமில்லை.

“எனக்கு இது ஒருமாதிரியாக இருக்கிறது. உடம்பில் ஏதோ மாற்றங்கள் தெரிகிறது. எனக்கு சில காலம் இதிலிருந்து விடுப்பு வேண்டும்” என்று கேட்க, கதிரவனும் ஒப்புக்கொள்கிறான்.

அந்த மருத்துவத்தை நிறுத்திய அடுத்த மாதம் வைஷ்ணவிக்கு மாதவிடாய் தள்ளிப்போகிறது!

சரி வழக்கமான நிகழ்வு தானே என்று நினைக்க, இது அதுவல்ல.

இந்தமுறை இது நல்ல செய்தி. மருந்தகத்தில் வாங்கி வரப்பட்ட பரிசோதனை கருவி வைஷ்ணவி கர்ப்பமாக இருக்கிறாள் என்று காட்டியது!

இருவருக்கும் சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை.

இருந்தாலும் மருத்துவமனையில் சென்று ஆய்வு செய்து கொள்ளலாம் என்று மருத்துவமனையில் சென்று சோதனை செய்கிறார்கள்.

நல்ல செய்தி தான்.

கதிரவனின் தந்தைக்கு திதி கொடுத்து ஒரு ஒரு வாரத்தில் இது நிகழ்ந்ததால், அவருடைய கருணை என்று இருவரும் முடிவு செய்து கொண்டார்கள்.

மருத்துவரின் அறிவுரைப்படி, மருந்து மாத்திரைகள் உட்கொண்டு, உணவு வகைகளை பார்த்து பார்த்து எடுத்துக்கொள்கிறாள் வைஷ்ணவி.

அவளுக்கு உடம்பில் ஏற்கனவே கோளாறு இருந்த காரணத்தால் கொஞ்சம் பயம் அதிகம்.

இப்படியே கிட்டதட்ட ஒன்றரை மாதங்கள் கழிந்தது. விலக்கு வந்து 55 நாட்கள் கழித்து ஒரு நாள் சிறிய அளவில் இரத்தப்போக்கு இருந்த காரணத்தால் மருத்துவமனைக்கு விரைந்தரா்கள்.

திருமணமாகி மருத்துமனைக்கு ஆறு மாதம் அலைந்து திரிந்து கிடைத்த வரம். ஏதாவது பிரச்சினை வந்துவிடக்கூடாது என்ற பயம்.

மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து பார்த்ததில் பிரச்சினை ஏதுமில்லை. சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்னும் ஒருவார காலம் படுத்த படுக்கையாக ஓய்வில் இருந்தால் நல்லது என மருத்துவர் அறிவுரை கூற, வைஷ்ணவியின் அம்மாவும். அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

நமது அம்மா, பாட்டி காலங்களில் மகப்பேறு காலத்திலும் பெண்கள் யதார்த்தமாக வேலை செய்து சுகப்பிரசவம் அடைந்தார்கள்
இப்போதெல்லாம் சுகப்பிரசவம் என்பதே வழக்கொழிந்து கொண்டு வருகிறது.

கருத்தரிப்பதே மருத்துவர்களின் மேற்பார்வையில் தானே நடக்கிறது? அப்படியிருக்க சுகப்பிரசவம் எங்கே?

வைஷ்ணவியும் ஒருவாரம் அம்மா வீட்டில் படுத்த படுக்கையாக ஓய்வில் இருக்க கதிரவனும் சம்மதிக்கிறான்.

ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து வீடு திரும்பும் முன்னர் மாலை நேரத்தில் வைஷ்ணவியை சென்று பார்த்து வருகிறான்.

ஒரு நாள் திடீரென வைஷ்ணவிக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது.

அவர்கள் நினைத்தது கிடைக்கவில்லை.

வைஷ்ணவிக்கும், கதிரவனுக்கும் இதை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்ததோ? இல்லை உருவாக்கிக்கொண்டார்களோ தெரியவில்லை.

வைஷ்ணவியின் அம்மாவுக்கு வேதனை தாங்க முடியவில்லை.

கதிரவனின் அம்மாவுக்கு சேதி சொல்லப்பட்டது.
நல்லவேளை வைஷ்ணவியின் மாமியார் இந்த விஷயத்தில் இந்த கால யதார்த்தத்தை உணர்ந்தவராக இருந்தார்.

அவரும் அதை கடந்து போகுமாறு அறிவுரை கூறிவிட்டு சோகத்தை தனக்குள் அடைத்துக்கொண்டார்.

வைஷ்ணவிக்கு இனி ஓய்வு தேவையில்லை.
அவள் வேலைக்கு போகலாம். கதிரவனோடு அவள் வீட்டுக்கு போகலாம்.

வைஷ்ணவி இனி கதிரவனோடு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யலாம். சாலையில் இருக்கும் மேடு பள்ளங்களை கண்டு பயப்படத்தேவையில்லை.

இதெல்லாம் ஆறுதலாமா? ஆனால் அவர்களுக்கு இப்போதைக்கு இதெல்லாம் தான் ஆறுதல்.

கதிரவனோடு கிளம்பி வீட்டிற்கு வந்தாள். கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு பின்னர் அவனோடு இருசக்கர வாகனத்தில் பயணிக்கிறாள். அப்பாவுடன் பயணம் செய்யும் குழந்தை போல, மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டு சாலையை வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணம் செய்கிறாள்.

வீட்டு அருகே வந்தவுடன், அவளை காணாமல் தவித்த தெரு நாய்கள், அவள் மீது வந்து ஏறி தொற்ற, வீட்டிற்குள் வேகமாக சென்று பிஸ்கட்களை கொண்டு வந்து நாய்களுக்கு உணவளிக்கிறாள்.

நாய்களுக்குள் பிஸ்கட்டுக்காக சண்டை வர, “ஏய், சண்ட போடாம சாப்புடுங்க” என்று அதட்டுகிறாள்..

நாய்களுக்கு உணவளித்து முடித்த பின், கணவனும் பசியாகத்தான் இருப்பான் என்பதை உணர்ந்து, சாப்பிட ஏதாவது ரெடி பண்றேன் என்று கிச்சனுக்குள் நுழைந்தாள்.

ஒருவாரம் மாமியார் புழங்கியதால் பாத்திரங்கள் இடம் மாறிக்கிடந்த கிச்சனை சரிசெய்து விட்டு, அம்மா, சாப்பிட என்ன வேணும் என்று கேட்டு, சமையலை முடிக்கிறாள்.

சாப்பிட்டு முடித்த கையோடு, அந்த ஒருவாரத்தில் அவர்கள் பார்க்காமல் விட்ட ஏதோ ஒரு சினிமாவுக்கு இரவுக்காட்சி செல்ல திட்டமிடுகிறார்கள்.

“நாளைக்கு வேலை இருக்குல?
இன்னிக்கு என்ன நைட் ஷோ?” என்று கேட்ட மாமியாரை கதிரவன் சமாளிக்க, இருவரும் நைட் ஷோ போய் வருகிறார்கள்.

மறுநாள் காலையில் எழுந்து பரபரப்பாக மாமியார் செய்து வைத்த சமையலை எடுத்து கட்டிக்கொண்டு கிளம்புகிறாள்.

நைட் ஷோ பார்த்து அசதியாக தூங்கும் கதிரவனை தட்டி எழுப்புகிறாள். நேரமாச்சு பஸ் போய்ட்டா துரத்தி தான் பிடிக்கனும்னு.

அவன் எழுந்து கிளம்பி வண்டியை எடுத்து இவளை பேருந்து நிலையத்திற்கு வருவதற்குள் இவளை அழைத்துச் செல்லும் பள்ளி பேருந்து கொஞ்ச தூரம் கடந்து சென்று விட்டது.

வேகமாக துரத்திச்சென்று பள்ளி பேருந்தை அடுத்த நிறுத்தத்தில் பிடிக்கிறார்கள்.

அவளை விட்டு வீடு திரும்பிய கதிரவனும் வேகமாக குளித்து கிளம்பி வேலைக்கு சென்று விட்டான்.

மாலை நேரத்தில் அவளது பள்ளி பேருந்து அந்த நிறுத்தம் அருகே வரும்போது கதிரவனும் சரியாக வேலை முடிந்து வீடு திரும்புவான்.

இருவரும் ஒன்றாக வீட்டிற்கு வருவார்கள்.
இதுதான் வழக்கம்.

அன்று மாலையும் அதே தான் நடந்தது.
கதிரவன் வந்த்தும் அவன் வண்டியில் ஏறிய வைஷ்ணவி பானிபூரி சாப்பிடலாம் என்றாள்.

கிட்டதட்ட இரண்டு மாதங்கள் பானிபூரி சாப்பிடவில்லை. இன்று ஏனோ அந்த ஏக்கத்தை தீர்த்துக்கொள்ள ஆசை.

இருவரும் பானிபூரி சாப்பிட்டு கதிரவனின் அம்மாவுக்கும் பானிபூரி வாங்கிக்கொண்டு வீடு சென்றார்கள்.

வழக்கமாக காலை சுற்றும் தெரு நாய்கள், வழக்கமாக அவற்றுக்குள் சண்டை, வழக்கமாக அவற்றை திட்டிய வைஷ்ணவி.

வழக்கத்திற்கு மாறாக ஒன்றே ஒன்று மட்டும்.
அந்த மூவருக்குள்ளும் ஒளிந்திருந்த அந்த சோகம்.

கண்ணுக்குப் புலப்படாத அந்த பிள்ளை இல்லாவிட்டால் என்ன?

ஆசிரியர் வேலை செய்யும் இருவருக்கும் பிள்ளைக்கா பஞ்சம்? பெற்ற பிள்ளையிடம் மட்டும்தான் அன்பு, பாசம, காட்ட முடியுமா என்ன?

பள்ளியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அங்கிருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆசிரியர்கள் தானே பெற்றோர்கள் போல!

இந்த முறை இல்லாவிட்டால் என்ன?
செவ்வாய் கிரகத்தில் கால் வைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டோம், நம்மால் ஒரு பிள்ளை பெற இயலாதா?

இப்போது இருக்கும் மருத்துவ  வளர்ச்சியில் அது எளிமை தான்.

வீணாக வருந்தி தினம் தினம் நம் கண்முன்னே இருக்கும் பிள்ளைகளின் அன்பை பெற இயலாமல் போய்விட வேண்டாம்.

இதையும் கடந்து போவோம்!
பெற்றாதான் பிள்ளையா?

நாளை நம் பிள்ளைகளுக்கு நடத்த வேண்டிய பகுதியை படிக்க தயாராகலாம்.

மனதிலிருக்கும் சோகம் எனும் குப்பையை தூக்கி எறியலாம் என இருவரும், தேநீர் அருந்திவிட்டு ஆளுக்கொரு புத்தகமாக படிக்கத்துவங்கினார்கள்.

கதிரவனின் அம்மா மறுநாள் காலை சமையலுக்காக காய்கறிகளை நறுக்கி ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டிருந்தார்கள்.

வெளியே வீட்டு வாசலில் பிஸ்கட்டுக்காக நாய்கள் மீண்டும் வரிசை கட்ட, கதிரவனின் அம்மா, பாரு உங்கள ஒரு நாள் வீட்டு ஓனர் சத்தம் போடப்போறாரு, தெருவுல போற எல்லா நாயும் நம்ம வீட்டு வாசல்ல தான் கிடக்குது, என்று வசை பாடத்துவங்கினார்.

இருவரின் உதட்டிலும் புன்முறுவல் பூத்தது!

(செயற்கை நுண்ணறிவால் இயற்றப்பட்ட படம்)

தொடர்ந்து வாசிக்க,

தீதும் நன்றும் பிறர்தரவாரா – சிறுகதை

விபத்து- சிறுகதை (பலரை சிதைத்த கதை)

ஈடு செய்ய இயலாத இழப்பு