Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

மழை முன்னெச்சரிக்கை கூத்துகளும், கட்டாயமும்

மழை எச்சரிக்கை கூத்துகள்.

சமீபத்தில் மெரினா கடற்கரையில் நடந்த நிகழ்வின் போது முன்னெச்சிரிக்கையாக போதுமான அளவு தண்ணீர் ஏற்பாடு இல்லாத காரணத்தால் உயிரிழந்த மக்களின் கதையை அறிந்து வருந்தினோம்.

இன்று அதே சென்னை மக்கள் உலகம் அழியும் வண்ணம் முன்னெச்சிரிக்கைக் கூத்துகளை செய்வதைக்கண்டு வியந்து இதை எழுதுகிறோம்.

ஆம்.

இன்று தற்காலிகமாக நான் ஒரு காய்கறி அங்காடிக்கு செல்ல வேண்டிய கட்டாயம். அங்கே சென்று பார்த்தபோது எனக்குப் பெரிய வியப்பு.

முக்கிய ரகங்களில் ஒரு காய்கறியும் மிச்சமில்லை. எல்லோருமே குறைந்தபட்சம் 600-700 ரூபாய்க்கு காய் வாங்குகிறார்கள்.
சாம்பாருக்கு தடியங்கா வாங்கச் சென்ன எனக்கு உலகம் அழியும் பீதியை உருவாக்கி விட்டார்கள்.

பாலுக்கு வரிசை, பன் ஸ்டாக் இல்லை, பிஸ்கட் தீர்ந்து போகும் நிலை.

காரணம், புயல் மழை வெள்ள அபாய எச்சரிக்கை.

உண்மைதான் 2015 ல் நிகழ்ந்த மிகப்பெரிய அவலம் நமக்குத் தெரியும்.

நினைவுகள் பதிப்பாசிரியரான நான் நேரடியாகக் களமாடியிருக்கிறேன்.

பதிப்பு நிறுவனர் சிவப்ரேம் வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பெரிய உதவித் தொகையைக் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய உதவிகளை நானும் எனது நண்பர்களும் சேர்ந்து செய்தோம்.

அவ்வாறு நாங்கள் களமாடிய போது கண்ட காட்சிகள் இன்னும் கூட எங்களுக்கு மறக்கவில்லை.

ஒரு மாடி முங்கும் அளவிற்கும், சில இடங்களில் இரண்டு மாடிகள் முழுகும் அளவிற்கும் நீரோட்டம். கிட்டதட்ட 3 நாட்கள் பட்டினியாக, தண்ணீர் பற்றாக்குறையுடன் பரிதவித்த மக்களைக் கண்டோம்.

அதை மனதில் கொண்டு தான் இன்று மக்கள் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அவர்களையும் சொல்லி குற்றமில்லை.

எவ்வளவோ பாத்தாச்சு, இதை சமாளித்து விடமாட்டோமா என்ற தைரியத்தைத் தர வேண்டிய தொலைக்காட்சி மற்றும் செய்தி நிறுவனங்கள், சுவாரஸ்ய்த்தை அதிகரிப்பதற்காக, பொழுதென்றும் மழை, மழை மழை என்று பொதுமக்களை கடுமையான பதட்டத்திற்குள்ளாக்கி இருக்கிறார்கள்.

நேற்று நான் வேளச்சேரி பாலத்தைக் கடந்த்போது ஒரு 20-30 வாகனங்கள் அங்கே நிறுத்தப்பட்டிருந்தன.

அங்கேயும், ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ட்ரோன்களை பறக்க விட்டு , நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பின்னாடியே காவலர்கள், ஒவ்வொரு வாகனத்திற்கும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துக் கொண்டிருந்தார்கள்.

வேளச்சேரி பாலத்தில் வாகனங்கள் நிறுத்தம் துவக்க நிலை

அபராதம் ஆயிரம் ரூபாய் தான் என்று தெரிந்த பிறகு இன்று 70-80 வாகனங்கள் அங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

காலக் கொடுமை.

அபராதத் தொகை தெரியாமல் பயந்து போயிருந்த மக்கள் மீடியாவின் உதவியால் இன்று தைரியமாக வாகனங்களைப் பாலத்தின் மீது நிறுத்தியிருக்கிறார்கள்.

சொல்ல முடியாது இதே மீடியாவின் உதவியோடு பாலத்தின் மீது வாகனம் நிறுத்துவதற்கு அபராதமா? என மக்கள் போராடலாம்.

மீடியாவுக்கு 24 மணி நேரமும் எதையாவது கிளப்பியாக வேண்டுமே?

எது எப்படியோ, முன்னெச்சரிக்கை என்ற பெயரில் மிக அதிகப்படியான துரித முன்னெச்சரிக்கை எடுப்பது இயற்கையை நிறுத்தி வைக்காது.
இந்த எச்சரிக்கை ஏற்பாடுகள் ஏரி குளங்களை அழித்து வீடு கட்டிய போது நம் மனதில் இருந்திருந்தால் இந்த பயம் இன்று இருந்திருக்காது.

சரி இனி அதைப்பேசி ஒன்றும் பலனில்லை.

வழக்கம்போல், ஒருவருக்கொருவர் கை கொடுப்போம்.
பரபரப்பான வாழ்வில் மறைந்து போன மனிதநேயம் மழை வெள்ளம் காரணமாக மீண்டும் துளிர்க்கட்டும்.

சுனாமி என்ன, பூகம்பம் என்ன, வெள்ளம் என்ன, எது வந்தாலும் சென்னையை நாம் தூக்கி நிறுத்துவோம்.

பாத்துக்கலாம் வாங்க.

தொடர்ந்து வாசிக்க, நினைவுகள் முன்பக்கம்.