Categories
தமிழ் வரலாறு

தியாகி அஞ்சலையம்மாள்

அஞ்சலையம்மாள்.

தவெக மாநாட்டுத் திடலில் காமராஜர், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார் போன்ற தலைவர்களோடு கம்பீரமாக நிற்கும் அஞ்சலையம்மாள்.

இணையத்தில் கிடைத்த மாநாட்டுத் திடல் படம்

இது யார் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

சில காலத்திற்கு முன்பே பள்ளிப் புத்தகங்களில் இவரைப்பற்றிய குறிப்புகள் பாடமாக இணைக்கப்பட்டது.

இன்று நான் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது இந்தக் கேள்வி எழாமல் இல்லை.

யார் இந்த அஞ்சலையம்மாள் என்று.

இவர் யாரென்று பார்க்கலாமா?

கோப்புப் படம் – அஞ்சலையம்மாள்

முதலில் இவர் பெற்ற பெரும்புகழை ஆராயலாம்.

சில காலத்திற்கு முன்பு அறம் என்று நயன்தாரா நடித்த படம் வந்ததே. அதில் நயன்தாரா மாவட்ட ஆட்சியாளராக ஒரு கிராமத்தின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பாரே?

அந்தக் காட்சி அஞ்சலையம்மாள் வாழ்க்கையிலிருந்து தான் எடுக்கப்பட்டது.
ஆமாம் அஞ்சலையம்மாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது தீர்த்தம்பாளையம் என்ற கிராமத்தின் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்தார். ஒரு கிளை வாய்க்கால் அமைத்து அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டது.

அதனால் நன்றி மறவாமைக்காக அந்தக் கிளை வாய்க்காலுக்கு அஞ்சலை வாய்க்கால் என்று பெயரிடப்பட்டது.

பெண்கள் வீட்டை விட்டே வெளியேறாத காலத்தில் இவர் சுதந்திரப் போராட்டத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும், நீல் சத்தியாகிரகப் போராட்டத்திலும் பங்கெடுத்து பெரிய சுதந்திரத் தொண்டாற்றியதைக் கண்டு வியந்த பாரதியார் இவரை நேரில் வந்து பாராட்டிச் சென்றிருக்கிறார்.

நெசவுத் தொழிலே முதன்மையான தொழிலாக செய்த அஞ்சலையம்மாளும் அவரது கணவரும், ஊர் ஊராக கைத்தறி துணிகளை விற்பனை செய்து சம்பாதித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திரப் போராட்டத்திலும் முழு ஈடுபாட்டுடன் இருந்தனர்.

1921 ஆம் ஆண்டு காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி இவர். நீல் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற அஞ்சலையம்மாள் நீல் சிலையை உடைத்த குற்றத்திற்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.

இவரது மகளை லீலாவதி என்று பெயர் சூட்டி காந்தியடிகள் தன்னுடைய வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று தன் மகளாகவே வளர்த்தார்.
அஞ்சலையம்மாள் மீது காந்தியடிகள் கொண்டிருந்த அன்பின் அடையாளம் இது.

1934 ல் காந்தியடிகள் கடலூருக்கு வந்தபோது அஞ்சலையம்மாளை சந்திக்க முயன்றார்.
ஆனால் காந்தியடிகள் – அஞ்சலையம்மாள் சந்திப்பு பரித்தானிய அரசால் தடை செய்யப்பட்டது.

புத்திசாலித்தனமாக அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து குதிரை ஏறி வந்து காந்தியடிகளை சந்தித்து விட்டார். இவரது துணிச்சலைப் பாராட்டி காந்தியடிகள் இவரை தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று கூறினார்.

இதையெல்லாம் செய்தும், பலமுறை சிறை சென்றும் கூட தனக்குத் தியாகி ஓய்வூதியம் வேண்டாம் என்று மறுத்தவர் இவர்.

1937, 1946 மற்றும் 1952 ல் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது பல நற்காரியங்களைச் செய்தார்.

“சட்டமன்ற உறுப்பினர்கள் சொகுசாக மூன்று வேளை சாப்பிட்டு மருத்துவரிடம் சென்று உடல் நிலையைப் பராமரிக்கிறோம். அங்கே பாமரன் பஞ்சு விளைவிப்பவன் ஒருவேளை சோறு சாப்பிட்டு வயலில் கஷ்டப்படுகிறான். நெசவாளி துணி இல்லாமல் இருக்கிறான். நாம் இதை சரி செய்ய வேண்டும்“ என்று குரல் கொடுத்தவர்.

அஞ்சலையம்மாள் எனும் வீரத்தமிழச்சியின் நினைவுகளையும், பெருமைகளையும் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.