நடிகர் திலகம், சிம்மக்குரலோன், சிவாஜி கணேசன் அவர்களது பிறந்த தினமான அக்டோபர் 1 ஆம் தேதியில் அவரது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டு , அவரது புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டதை அறிந்து பெருமிதம் கொள்கிறோம்.
சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி, பேசவும் நினைக்கவும் ஆயிரமாயிரம் விஷயங்களும், பல சினிமாக்களும் இருந்தால் கூட, இன்று நாம் காணப்போவது சிவாஜி கணேசன் அவர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அந்த நாள் என்ற படம் பற்றி.
இன்றைய நவீன காலகட்டத்திலேயே பல முன்னனி நடிகர்கள் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு தயங்கும் சூழலில் 1954 ஆம் ஆண்டே சிவாஜி கணேசன் அவர்கள் அந்த நாள் என்ற படத்தின் மூலமாக எதிர்மறை காதாபாத்திரதர்தை ஏற்று நடித்திருந்தார்.
எதிர்மறை கதாபாத்திரமே அந்தக் காலத்தில் ஆச்சரியம் தான், அதில்லாமல் சில அதிசயமான செய்திகளும் உள்ளன இந்தப்படத்தில்.
இந்தப்படத்தின் இயக்குனர் பாலசந்தர். நானும் முதலில் நமக்குப் பரீட்சயமான பாலசந்தரோ என்று நினைத்தேன். ஆனால் தவறு. இவர் S.பாலசந்தர்.
இந்தப்படம் ஒரு தழுவல் படம். ஜப்பானிய படத்தின் தழுவல். 1954 ல் தழுவல் படம், அதுவும் ஜப்பானில் இருந்து என்பது புருவம் உயர்த்தும் செய்தி தானே?
ஆம் ஜப்பானின் பிரபல இயக்குனர் அகிரா குரோசாவா என்பவரது ராஷோமோன் என்ற படத்தைப் பார்த்து பிடித்துப் போன பாலசந்தர் அவர்கள் அதே பாணியில் ஒரு கதையை எழுதியுள்ளார். பல இடங்களிலும் ஒப்புக்கொள்ளப்படாத அந்தக் கதை, AVM மெய்யப்பன் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தயாரிக்கப் பட்டிருக்கிறது. முதலில் ஏதோ ஒரு நாடக நடிகரை வைத்து சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின்பு, அது பிடிக்காத தயாரிப்பாளர், நடிகர் திலகம் அவர்களை கதாநாயகனாக போடுமாறு கூறிய காரணத்தால், மீண்டும் அனைத்து காட்சிகளும் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து படமாக்கப்பட்டிருக்கிறது. இதுவும் ஒரு புதுமையான நிகழ்வு தான்.
சரி படத்தின் கதைக்குள் நகரலாம்.
இரண்டாம் உலகப்போரின் பின்னனி கொண்ட கதை.
அதாவது இரண்டாம் உலகப்போர் நடக்கிறது, சென்னையின் மீது ஜப்பானிய இராணுவத்தால் குண்டுகள் வீசப்படுகிறது போன்ற காட்சிகளின் பின்னனி கொண்ட படம்.
ஆனால் படத்தின் மையக்கரு என்பது இறந்து போன சிவாஜி கணேசனை யார் கொன்றது என்ற புதிருக்கான விடை தான்.
அந்தக்காலகட்டத்தில் கதாநாயகன் இறந்தது போல படமெடுப்பதே அரிது, அதிலும் முதல் காட்சியிலேயே கதாநாயகன் இறந்து விட்டது போலவும், பிறகு வரும் காட்சிகள் அவரது இறப்புக்கான காலணத்தின் விசாரிப்புகளாகவும், அவரைப்பற்றிய கடைசி நேர நினைவுகளாகவும் இருப்பது ஆச்சரியம்.
அவரது இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என ஐந்து கதாபாத்திரங்கள் காட்டப்படுகிறது. சிவாஜி கணேசனின் மனைவி, எஜமானி, பக்கத்து வீட்டுக்காரர், தம்பி மற்றும் தம்பி மனைவி.
இவர்கள் சிவாஜி கணேசனை கொன்றிருக்க என்ன காரணங்கள் இருந்திருக்கலாம், யார் கொலையாளி என்ற ரீதியில் படம் விறுவிறுப்பாக நகர்கிறது.
ரேடியோ இன்ஜினியரான சிவாஜி கணேசன் சுட்டுக் கொல்லப்படும் அளவிற்கு என்ன தவறு செய்தார்?
ஏன் அவருக்கு நெருங்கிய ஐவரின் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இறுதியில் அந்த ஐவரில் ஒருவர் தான் கொலையாளி என உறுதி ஆகும் வரை படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது.
ஜப்பானிய இராணுவத்திற்கு ஆதரவாக சிவாஜி கணேசன் அவர்கள் செயல்பட்டு, ரேடியோ மூலமாக ஜப்பானிய இராணுவத்துக்கு சென்னையின் மீது குண்டு போட இடங்களை தெரியப்படுத்துகிறார். இதைக்கண்டறிந்த அவரது மனைவி, நாட்டுக்கு துரோகம் செய்யாதீர்கள் என கண்டிக்கிறார்.
சிவாஜி கணேசன் கேட்கவில்லை.
விவாதம் முற்றி அவரது மனைவி அவரை சுட்டுக் கொல்கிறார். மிக மிக வித்தியாசமான இந்தப்படம் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 , அதாவது தமிழ் புத்தாண்டு பண்டிகைக்காக வெளியாகி இருக்கிறது.
வசூலில் சொதப்பினால் கூட நல்லபடமாக பின்பு மக்களின் மனதைக் கவர்ந்த்தோடல்லாமல் சில பதக்கங்களையும் வாங்கியிருக்கிறது.
நடிகர் திலகத்தின் இனிய நினைவுகளோடு, அவரது வித்தியாசமான படத்தின் நினைவுகளைப் பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
மேலும் சில பழைய பொக்கிஷ சினிமாக்களை பற்றி வாசிக்க,