Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

அமாவாசை சம்பிரதாயம்- சடங்கா அல்லது வியாபாரமா?

முதலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி என்ற இரு நாட்களும் பூமியின் சுழற்சியால் மாதம் ஒரு முறை வரும் சுழற்சியான நாட்கள் என்பதையும், இந்த இரு நாட்களுக்கும் விசேஷ சக்தி என்பதெல்லாம் இல்லை என்பதையும், ஈர்ப்பு விசையில் உள்ள மாறுதல் காரணமாகவே கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளன என்பதையும் அறிவியல் பூர்வமாக நாம் அறிந்திட வேண்டும். சரி இது அறிவியல்.
அதாவது ஒரு இருசக்கர வாகனம், அல்லது ஒரு மகிழுந்து எப்படி இயங்குகிறது என்று கேட்டால், இயந்திரவியல் விளக்கம் தருவது போல, இந்த பூமியின் இயக்கத்தையும், அதனால் ஏற்படும் மாறுதல்களான அமாவாசை மற்றும் பௌர்ணமி பற்றியும் அறிவியல் ரீதியாக விளக்கி விடலாம்.

இத்தகைய உலகத்தை, பால்வெளியை உருவாக்கிய சக்தி எது என்று கேட்டால் நமக்குத் தெரியாது.

ஏதோ ஒரு தீப்பிளம்பிலிருந்து வெடித்துச் சிதறி என பல கோட்பாடுகள் சொல்லப்படுகிறது.

அந்த தீப்பிழம்பு ? யாரால் உருவானது?

விடையில்லா சக்தி. அந்த விடையில்லா சக்தியை வணங்க வேண்டியது நமது கட்டாயம். அப்படி வணங்க வேண்டிய அந்த சக்தியை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாக உருவகப்படுத்தி வைத்திருக்கிறது.

அந்த சக்தியிடம் மனதார ஒவ்வொரு நாளும் இப்படி ஒரு வாழ்க்கை அமைந்ததற்கு நன்றி என்று சொல்லிவிட்டு, சக மனிதனிடம் அன்பாக வாழ்ந்தாலே, அது நாம் இந்த பால்வெளிக்கு, இந்த பூமிக்கு செய்யும் மிகப்பெரிய கடனாகும்.

அதை விட்டு விட்டு, அந்த சக்தியை உருவகப்படுத்துவதில் துவங்கி, சாஸ்திரம், சம்பிரதாயம் கோட்பாடகள் நம்பிக்கை என்று எல்லை கடந்து, நம்பிக்கை மூட நம்பிக்கையாகி, மனிதர்களிடையே மதக்கலவரம் வரும் அளவுக்கு இது அதிகமாக பின்பற்றப்படுவதால் தான், மதம் சார்ந்த மூட நம்பிக்கைகள் சாடப்படுகிறது.

அப்படி இந்து மதத்தில் இருக்கும் ஒரு நம்பிக்கை தான், அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து வணங்குவது.

நமது வாழ்க்கைக்கு வழிகாட்டிய, வாழ்வு தந்த முன்னோர்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக மாதம் ஒரு நாள் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அமைக்கப்பட்ட சடங்கு தான் இந்த அமாவாசை விரதமும், மற்ற சடங்குகளும்.
மனிதன் சுயநலவாதியாக இருக்கக் கூடாது, பிற உயிர்களிடமும் அன்பாக இருக்க வேண்டும்.

தான் என்றைக்குமே மனிதானாகவே இருக்க முடியாது, அடுத்த அல்லது முற்பிறவியில் தானும் பறவையாகவோ, அல்லது மிருகமாகவோ இருக்கலாம், இருந்திருக்கலாம் என்று உணர்த்தினால் தான் மற்ற உயிர்களின் மீது அன்பு காட்டுவான் என்பதற்காகவே, காகத்திற்கு சாப்பாடு, மாட்டுக்கு அகத்திக்கீரை என மற்ற உயிர்களுக்குப் படையலிடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம்.

அது போல கடவுளையே நம்பி வாழும், அடுத்த வேளை உணவுக்கு வழியில்லா சக மனிதனான பிராமணனுக்கு, சில தான தர்மங்கள் செய்து, தனது முன்னோரின் நினைவாக, தானும் மனிதனாக வாழ வேண்டும் என்பதற்காக அந்த சடங்கு ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம்.

நன்றாக கவனிக்கவும். இங்கு பிராமணன் என்பவர் அடுத்த வேளை உணவைக்கூட சேமித்து வைக்காத கடவுளின் சேவகர்.

ஆனால் இன்று …

காலையிலேயே புல்லட்டில் அந்த ஐயர் வந்து நிற்கிறார். கோவில் ஊழியர்கள் 20 ரூபாய்க்கு டோக்கன் போட்டு மக்களை வரிசைப்படுத்துகிறார்கள்.

ஒரு விளையாத தேங்காய், புகை வராத பத்தி, அரை கற்பூரம், கையில் அடங்கும் அளவு எள், கலர் பொடி (குங்குமம், மஞ்சள் என்ற பெயரில்), இரண்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு.நாலு குச்சி அகத்திக்கீரை. இந்த செட் 100 ரூ.

கூட்டமாக நிகழும் தர்ப்பணம்

ஒரு ஐந்திலிருந்து பத்து பேர் வரை வட்டமாக அமர வைக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக மந்திரம் ஏதோ சொல்லப்படிகிறது.

என்னென்று காதில் விழாமலேயே மற்றவர்கள் செய்வதைப்பார்த்து நாமும் செய்து முடித்து பத்தி சூடனை பத்த வைக்கும் முன்பே ஐயர் நம் அருகே வந்து விடுகிறார்.

கையில் எள்ளை எடுக்கிறோம், நமது தந்தையார் பெயரை சொல்லி எள்ளை கழுவி முடிக்கும் முன்பே பக்கத்து இலைக்கு போய்விடுகிறார். நான் எனது தாத்தா பெயரை சொல்லும் போது பக்கத்து இலைக்காரர் அவர் அப்பா பெயரைச்சொல்லி எள் கழுவ ஆரம்பிக்கிறார். நான் எனது அப்பா பெயரை சொல்லிக் கொண்டிருந்த போது முந்தைய இலைக்காரர், அவரது தாத்தா பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஒரு போஸ்ட் மேன் ஒரு வீட்டுக்கு வந்த தபாலைக்கிழித்து பக்கத்து பக்கத்து வீடுகளுக்குக் கொடுத்தது போல, இதென்ன பரிதாபமோ. எங்க அப்பா சாப்புட்டாரோ, தாத்தா சாப்புட்டாரோ ஒன்றும் புரியவில்லை.

அதாவது நமநு முன்னோர்கள் இந்த சடங்கை எதற்காக ஏற்படுத்தியிருந்தார்கள் என்ற காரணத்தை மறந்து, இன்று அது ஒரு வியாபாரமாக மாறி நிற்பதை உணராமல் நாமும் ஆட்டு மந்தைகளைப்போல அந்தக்கூட்டத்தில் சென்று எதையோ செய்து விட்டு, எதையோ சாதித்து விட்டதாக நனைத்து மகிழ்வது நியாயமாகவே தெரியவில்லை.

அந்த ஐயர் என் கண்முன்னே நான் நின்ற 25 நிமிடங்களில் 2000 ரூ சம்பாதித்தார். காலை 5 மணிக்குத் துவங்கி, 10 மணி வரை ஏன் 11, 12 வரை கூட நடக்கிறது.

கிட்டதட்ட என்னுடைய ஒரு மாத சம்பளத்தை இன்று கல்லா கட்டி விடுவார் போல.

அடுத்தது அந்த செட் வியாபாரம். அவர்களும் ஒரு மகப்பெரிய தொகையை கல்லா கட்டாமல் ஓயப்போவதில்லை.

இவர்கள் சம்பாதித்து விட்டுப் போகட்டும். நமது நம்பிக்கையில் குதிரை ஏறுகிறார்கள், அது அவர்களது சாமர்த்தியம். ஆனால் தர்ப்பணம் கொடுக்க வந்து நின்ற கூட்டத்தைப்பார்த்து 100 ரூ இருந்தா இங்க நில்லுங்க, 20 ,30 லாம் பக்கத்துல ஓடிருங்க என்று அந்த ஐயர் இரண்டு, மூன்று தடவை கூச்சலிட்டது சற்றே வெறுப்பாகத்தான் இருந்தது.

எனது அருகிலிருந்த கூட்டத்திற்கு தர்ப்பணம் நடத்திக்கொண்டிருந்தவர் பண்டாரமாம், பிறகு தெரிந்து கொண்டேன்.

இதில் என்ன வேறுபாடோ எனக்கும் புரியவில்லை.
அதாவது நமது முன்னோர்கள் இந்த சடங்குகளை ஏற்படுத்தியது, ஆத்மார்த்தமான திருப்திக்கும், நல்ல எண்ணங்களுக்குமே தானே ஒழிய இப்படி அவசர கதி வியாபாரத்தை ஊக்குவிப்பதற்காக அல்ல. கூட்டத்தை முண்டியத்துக்கொண்டு நான் வேலைக்குப் போகனும்னு வரிசையை மீறி தர்ப்பணம் கொடுத்து விட்டு ஒருவர் எதையோ சாதித்த மகிழ்ச்சியுடன் போகிறார். தனது கடன் முடிந்து விட்டதாக நினைத்துக் கொள்கிறார்.

அமாவாசைகளில் மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவளிப்பதும், பிராமணனுக்கு தானம் கொடுப்பதும் என சடங்குகள் உருவாக்கப்பட்டது இப்படி கடனை கழிப்பதற்காகவா?

சற்றே சிந்தித்தால் நாம் எவ்வளவு கேவலமானவர்கள் என்பது புரியம்.

கோவிலுக்கு சென்று சாமி கும்பிடவது மனநிம்மதிக்கு என்று புரியாமல் வண்டியில் போகும் போது சாலையை கவனிக்காமல், சாமி சிலைக்கு முத்தம் கொடுக்கும் நமது கூட்டத்திற்கு இன்று அமாவாசை தர்ப்பணம் என்பது கடமை நினைவேற்றுதலாகவும், வியாபாரமாகவும் மாறிப்போனதை உணரமுடியவில்லை.

செய்வன திருந்தச் செய் என்பதும் நமது முன்னோர்கள் சொன்னது தான். இனியாவது எதையாவது செய்யும் போது, உண்மையிலேயே அது எதற்காக செய்யப்படுகிறது என்பதை உணர்ந்து செய்வோமா?

தொடர்ந்து வாசிக்க, ஆன்மீகம் பற்றிய முந்தய சிந்தனைகள் இங்கே –

ஆன்மீகம் என்பது அடுத்தவனை குறைப்பதா?

கல்விக்கூடத்தில் ஆன்மீகம் தவறா?

கோடிகளில் புரளும் கோவண ஆண்டி

.