விளம்பர மோகத்தின் விளைவு நுகர்வுத் தூண்டல்.
நாம் முந்தைய பகுதியில் நம்மை ரசிக்க வைத்த விளம்பரங்கள் மற்றும் முட்டாள்தனமான விளம்பரங்களைப் பற்றி பார்த்தோம்.
ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவை நம் மனதில் பதிந்து நமது மூளைக்கு இடும் கட்டளை. அந்த விளம்பரங்கள் உருவாக்கும் நுகர்வுத் தூண்டல்.
இது நமக்குத் தேவையா, இது நமது தகுதிக்கு ஏற்றதா? இது நமது அன்றாட பழக்கவழக்கத்திற்கும், பாரம்பரியத்திற்கும் ஒத்துப்போவதா என்பதை எல்லாம் சிந்திக்காமல், குருட்டுத்தனமாக இதை வாங்கி ஆக வேண்டும் என்ற ஆசையை நம்மில் விதைக்கின்றன.
உதாரணமாக ஒரு விளம்பரத்தில் எதித்த வீட்டுல இருக்கு, பக்கத்து வீட்டுல இருக்கு, ஏ ஒங்க வீட்டுல இல்லையா? என்று விளம்பரம் ஒன்றை கடந்து வந்திருக்கிறோம்.
அது எங்க வீட்டுக்குத் நேவையா இல்லையா என்பதைக் கடந்து பலரும் அதை வாங்கி இருக்கிறார்கள். இன்று பல வீடுகளிலும் அது ஒரு மூலையில் முடங்கி இருக்கிறது.
நமக்குத் தேவை இல்லாவிட்டாலும் நம்மிடம் திணிக்கும் ஒரு ரகம்.
இதை விட அச்சுறுத்தலான ஒரு ரகம். நமக்கு ஒவ்வாத ஒன்றை, அல்லது நமநு தகுதிக்கு மீறிய ஒன்றை நம்மிடம் திணிப்பது.
உதாரணமாக பீட்சா, பர்கர் போன்ற அயல்நாட்டு உணவு வகைகள். ஒரு சினிமா கூட உண்டு. இரண்டு சிறுவர்கள் விளம்பர மோகத்தில் பீட்சா சாப்பிடத் துடியாகத் துடிக்கும் கதை.
கடைசியில் அந்த இருவரும் அய்ய்யய இது நல்லாவே இல்ல என்று சலித்துக் கொள்வார்கள்.
உண்மை இது தான்.
பர்கர் போன்ற உணவு வகையில் என்ன ருசி, என்ன ஆரோக்கியம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் விற்பனை அமோகம்.
இதை அடுத்த கொடிய ரகம் ஒன்று உள்ளது.
நமது பாரம்பரியத்தை அழிக்கும் ரகம்.
உதாரணமாக நிலக்கடலை.
நிலக்கடலை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் கூடும், அது கூடும் இது கூடும் என்று கதை கட்டப்பட்டு, நம்மிடமிருந்து நிலக்கடலை சாப்பிடும் பழக்கத்தை வெகுவாகக் குறைத்து விட்டு, இப்போது அடுத்த தலைமுறையிடம் அதே நிலக்கடலையை சாக்லேட்டில் வைத்து விற்கிறார்கள்.
குளிர்பானம் இல்லாமல் உணவு அருந்தினால் உணவு செரிமானமே ஆகாது என்று ஒரு கூட்டம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது.
ஓட்ஸ் தான் உடலுக்கு சத்து என்று ஒரு கூட்டம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது.
அடுத்தது 40 வயதானாலே போன்ஸ்ம், மஸ்ஸில்ஸ்ம், (bones and muscles) வீக் ஆகும். அதை சரிசெய்ய இந்த சத்துமாவு குடிங்க, இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள் என்று பல விளம்பரங்கள் வருகின்றன.
நம்முடைய தாத்தா பாட்டிகள் எந்த மாத்திரை சாப்பிட்டு இத்தனை திடகாத்திரமாக இருக்கின்றனர்?
இந்த குறிப்பிட்ட சத்துமாவைக் குடித்தால் தான் குழந்தை வளரும் என்று நம்பவைக்கப்பட்டு அதன் வியாபாரமும் படுஅமோகமாக நடப்பது உண்மை. ஆனால் குழந்தைகள் என்னவோ, வளரும் விதத்தில் தான் வளர்கின்றன.
ஐன்ஸ்டீனும் கூட ஆரோக்கிய பானம் குடித்து தான் அறிவாளி ஆனார் என்று கூட விளம்பரம் வரலாம்.
யாருக்குத் தெரியும்?
யார் கேட்பது இவர்களை?
ஆனால் இந்த விளம்பரங்களை எதிர்த்து ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த கதையும், விளம்பரங்களில் வரும் சூட்சமங்களையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.
ஆதங்கத்துடன் நினைவுகள்