கண்ணுக்குத் தெரியாமல் ஆரம்பித்து விட்ட இறுதி உலகப்போர்.
எல்நினோ எனும் பருவநிலை மாற்றம் காரணமாக வறட்சியில் வாடும் தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள், மக்களின் பசியைப் போக்குவதற்கும், வறட்சியின் சூழலை கட்டுக்குள் வைக்க அவர்கள் எடுத்துள்ள முடிவு நம்மை கடுமையான சோகத்தில் ஆழ்த்துவதாக உள்ளது.
எல் நினோ பருவநிலை மாறுதலால் பனாமா கால்வாயில் ஏற்பட்ட தண்ணீர் சிக்கலை பற்றி இந்த பக்கத்தில் எழுதியிருந்தோம்.
தற்போது தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே என்ற நாட்டில் எல் நினோ பருவநிலை மாறுதலால் ஏற்பட்ட வறட்சி காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு கிட்டதட்ட 60 லட்சம் மக்கள் உணவுத் தட்டுப்பாட்டை சந்திக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அந்த அரசாங்கம், அந்த நாட்டிலுள்ள விலங்கு காப்பகங்களிலுள்ள 200 யானைகளை கொன்று அவற்றின் இறைச்சியை உணவுத் தட்டுப்பாட்டினால் தவிக்கும் மக்களுக்கு உணவாக்கத் திட்டமிட்டுள்ளது.
ஆமாம் 200 யானைகள் இறைச்சிக்காக கொல்லப்படவுள்ளன.
சமீபத்தில் இரண்டு கோவில் யானைகள் அடுத்தடுத்து இறந்த செய்தி கேட்டே துக்கம் தாளாத நம் மக்களும் அரசாங்கமும், கோவிலில் பொம்மை யானைகளை வைத்துக்கொள்ளலாம் அல்லது ரோபாட்களை வைத்துக்கொள்ளலாம் என பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அங்கே எப்படியான சூழ்நிலை இருந்தால் இறைச்சிக்காக யானைகளைக் கொல்ல முன்வந்திருப்பார்கள்?
கிட்டதட்ட 34000 யானைகள் இருக்க வேண்டிய இடத்தில் 64000 யானைகள் இருப்பதாகவும், வறட்சி காலத்தில் யானைகளைப் பராமரிப்பதும் மிகவும் கடினமாக இருக்கும் காரணத்தாலும், உணவுத் தட்டுப்பாடு என்று துயரின் காரணத்தாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சகாரா பாலைவனத்தின் உப நாடுகள் அதாவது sub- sahara நாடுகளில் இந்த ஜிம்பாப்வேயும் ஒன்று.
ஏற்கனவே இதன் அண்டை நாடான நமிபியா வில் 83 யானைகள் இறைச்சிக்காக கொல்லப்பட்டு விட்டன என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த வறட்சி என்பது இங்கு முதல் முறை அல்ல.
இதன் முன்னும் பல வருடங்கள் கடுமையான மற்றும் மிதமான என்ற ரீதியில் வறட்சியை சந்தித்த நாடுதான் இது. அதன் வரலாறைக் காணலாம்..
கீழ்க்கண்ட புகைப்படம் இந்த நாட்டின் வறட்சி பாதித்த பகுதிகளை வண்ண ரீதியாகக் காட்டுகிறது.
கடுமையான வறட்சி என்பது எல் நினோ என்ற பருவ நிலை மாறுதலால் மட்டுமல்ல.
மாறிவரும் உலக சூழ்நிலையும், இயந்திர உலகின் வெப்பமயமாதல் விளைவும், மற்றும் மனிதனின் ஒட்டுமொத்த அட்டூழியத்தின் பலனாக இதே பூமி ஒரு நாள் நமக்கு மிகப்பெரிய தண்டனை தரக்காத்துக்கொண்டே இருக்கிறது.
இன்று யானை, நாளை என்னை, நாளை மறுநாள் உன்னை என இந்த சுயநலமிக்க மனிதக்கூட்டம் யாரையாவது அடித்துச் சாப்பிட்டாவது உயிர் வாழ வழிவகுத்துக்கொண்டே இருக்கத்தான் போகிறது.
ஆனால் ஒட்டுமொத்த இயற்கையும் சீறும் போது இந்த மனித இனம் சின்னாபின்னமாகிப் போகும் என்பதில் ஐயமில்லை.
பாவம் பசித்த மக்களின் உணவுத் தட்டுப்பாட்டை நீக்கும் அரசாங்கத்தை நாம் குறை கூறவில்லை. ஆனால் இதுபோன்ற எத்தனை சூழல் வந்தாலும் திருந்தாத மனித இனத்தை நாம் சுட்டிக்காட்டி திருந்தச் செய்யாவிட்டால், இது நமிபியா, ஜிம்பாப்வேயோடு மட்டும் நின்று விடாது.
நாம் வாழும் பூமிக்கு நம்மால் இயன்ற நல்லதை செய்யாவிட்டாலும், தீங்கு செய்யாமல் இருப்பதே பெரும் உதவி தான்.
நினைவுகள் வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்.