சமீபத்தில் வெளியான தங்கலான் திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் ஏகாம்பரம் அவர்களை, ஒரு வார இதழும், ஒரு சமூக வலைத்தளப்பக்கமும் பேட்டி எடுத்து பாராட்டி இருந்தார்கள். நாமும் ஆச்சரியத்தில் அதைக் காணலானோம் ஏன் எதற்காக என்று. அதற்கான விளக்கங்களும், மேலும் சில தகவல்களும்.
தங்கலான் படத்தைக் குறிப்பிடக் காரணம் அதிலுள்ள தனித்தன்மையும் உழைப்பும் தான். இந்தப்படத்தில் எல்லோரும் கோவணம் தானே கட்டியிருக்கிறார்கள், இதில் என்ன வடிவமைப்பு இருக்கிறது? இரண்டு முழம் கச்சைத் துணியை எடுத்து காலை அகற்றி குறுக்கே பாய்ச்சினால் காஸ்ட்யூம் ஓவர் என்று நாம் சாதாரணமாக நினைத்திருக்கலாம்.
ஆனால் அந்த ஆடை வடிவமைப்பாளரின் பேட்டி வார இதழிலும், சமூக வலைதளங்களிலும் வந்த பிறகே புருவம் உயர்த்தி அவரை மனமகிழ்ந்து பாராட்ட முடிவு செய்து இந்த பாராட்டுக் கட்டுரையை எழுதினோம்.
முதலில் அந்தப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்ட ஆடைகளின் நிறங்கள் பற்றி விவரித்திருந்தார்.
இப்போது நாம் வண்ண வண்ணமாக உடுத்தும் ஆடைகள் சாயப்பட்டறைகளில் சாயம் ஏற்றப்பட்டு பல வண்ணங்களில் கிடைக்கிறது என்பதை அறிவோம். அந்த சாயப்பட்டறை கழிவுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையும், அது மக்களை பலவிதங்களில் பாதிப்பதையும் அறிந்திருக்கிறோம்.
இந்தப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்ட ஆடைகளின் நிறங்கள் செயற்கை நிறமிகளால் ஆனவை அல்ல. சாயம் பூசப்பட்டவை அல்ல. அனைத்தும் இயற்கை நிறமிகள். அதாவது ஆங்கிலத்தில் டை என்று சொல்வார்களே! இதில் உபயோகிக்கப்பட்டது நேச்சுரல் டை.
உலர்ந்த பழங்கள், இலைகள் போன்றவற்றிலிருந்து கிடைத்த இயற்கை நிறமிகளால் மட்டுமே இந்தப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்ட மொத்த ஆடைகளுக்கான நிறமும் உருவாக்கப்பட்டதாம்.
அடடே, வியப்பல்லவா? இயற்கை நிறமிகள் வழக்கொழிந்து போய் எவ்வளவு வருடங்களாகிவிட்டது?
நாங்களெல்லாம் சாப்புடுற கேசரிக்கே செயற்கை நிறமி போடுறோமே? யார்டா இவரு ஆடைகளுக்கு இயற்கை நிறமிய பயன்படுத்துறாரு? அப்படின்னு இவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயன்றோம்.
சில தகவல்கள் கிடைத்தது. இவர் ஆடை வடிவமைப்பு சம்பந்தமான கல்வி பயின்றவர், அது மட்டுமல்ல அதே துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஆரம்பத்தில் பல தனியார் நிறுவனங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.
மேலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவர் ஒரு ஆராய்ச்சியாளரும் கூட. ஆடைகளில் நிறங்களை உருவாக்கிட செயற்கை நிறமிகளை ஒழித்து இயற்கை நிறமிகளை பயன்படுத்திடும் நோக்கில் இயற்கை நிறமிகளை பற்றி ஆராய்ச்சி செய்கிறார்.
இந்த தங்கலான் படத்தில் அத்தனை பேருக்கும் இயற்கை நிறமிகளால் ஆன ஆடை கொடுக்கப்பட்டது இதற்கான முதல்படியாகக் கூட இருக்கலாம்.
இந்தப்படத்தில் ஆரோனாக வரும் விக்ரம் கதாபாத்திரத்திற்கு பாடம் செய்யப்பட்ட விலங்கின் தோளில் ஒரு கிரீடம் போன்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார். மரத்தாலான ஆபரணங்களை உருவாக்கி அணிவித்து காட்சிபடுத்தியிருக்கிறார். இப்படி பல தனித்துவங்கள் இந்தப் படத்தில் உள்ளன.
மேலும் அந்த கிராமத்துப்பெண்கள் முதன் முதலாக ரவிக்கை அணியும் காட்சியும் அந்தப்படத்தில் மிக அற்புதமான காட்சி. அந்தக்காட்சியில் ரவிக்கைகளை தையல் இயந்திரத்தில் தைத்தால் அது அந்தக்கால தோற்றத்தில் வராது என்பதால் அனைவருக்கும் கைகளாலேயே ரவிக்கைகளைத் தைத்துக் கொடுத்தார்களாம்.
இப்படி ஆடை உரிமையைப் பற்றி பேசிய படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தனது அயராத உழைப்பால் தனித்துவமான ஆடை வடிவமைப்பை அளித்திருக்கிறார் ஏகாம்பரம்.
இது மட்டுமல்லாது ஒரு முக்கியமான விஷயமும் அவரைப் பாராட்ட மிகப்பெரிய காரணமாக அமைகிறது. அந்தப்படத்தில் அந்த ஒரு காட்சி தவிர்த்து மற்ற காட்சிகளில் பெண்கள், கதாநாயகி உட்பட ரவிக்கை இல்லாமல் சேலை மட்டும் உடுத்தி நடித்திருப்பார்கள். ஆடலும் பாடலும் கூட உண்டு. அப்படி நடிக்கும் போது அவர்களது சேலை விலகி மானம் போய்விடுமோ என்று அஞ்சாமல் நடிக்கக் காரணம் இவரது யோசனை தான் என்று இவர் வார இதழுக்கு அளித்த பேட்டியின் மூலமாக அறிந்து கொண்டோம்.
சர்பட்டா பரம்பரை படத்தில் 1960 களை நம் கண்முன்னே கொண்டு வந்த வடிவமைப்பாளரும் இவரே, ராட்சசி படத்தில் ஜோதிகாவை மிடுக்கான தலைமை ஆசிரியையாக நமக்குக்காட்டிய வடிவமைப்பாளரும் இவரே. மேலும் NGK படத்தில் சூர்யாவின் ஒட்டுமொத்த ஆடை வடிவமைப்பும் இவருடையதே!
இந்திய மக்களின் பாரம்பரிய இயற்கை நிறமிகளை லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இன்றும் பத்திரப்படுத்தியிருக்கிறார்கள். அதன் பெருமை நமக்குதான் தெரியவில்லை.
ஆனால் அதை மீட்டெடுக்கும் ஆராய்ச்சியில் இவர் உள்ளார் என்பதால் இவரை நாம் அனைவரும் மனமுவந்து பாராட்டி இவரது பயணம் வெற்றியடைய வேண்டுதல் செய்வது அவசியமாகிறது.
சரி ஒரு மனிதனுக்குள் இந்தத் துறை மீது ஏன் இத்தனை ஆர்வம்?
இது நீச்சல் தெரிந்த மீன்குட்டி. ஆம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அம்மையார்குப்பம் என்ற ஊராட்சியில் நெசவாளர் சமூகத்தில் பிறந்திருக்கிறார்.
தறிகளின் சத்தத்தை தாலாட்டாக கேட்டு வளர்ந்திருக்கிறார்.
நலிவடைந்த விவசாயிகளுக்காக இங்கே குரல் கொடுக்க ஆயிரமல்ல, லட்சம் பேர் உண்டு, ஆனால் முதன்முறையாக ஒரு சினிமாக்காரன், நலிவடைந்த நெசவுத்தொழிலை சுட்டிக்காட்டி பேசியிருப்பது வரவேற்க்கத்தக்கது.
பூர்வீக நெசவுத்தொழிலின் பலம் என்ன, நெசவாளியின் தரமென்ன என்று உலகிற்கு எடுத்துச் சொல்ல அமைந்த முதல் வாய்ப்பாகவும் இந்தப்படமும் இந்தப்பேட்டிகளும் அமைந்துள்ளன.
நலிவடைந்த நெசவாளர்களின் நிலையை உலகறிய இது ஒரு துவக்கப்புள்ளியாக இருக்கட்டும்.
இதை சினிமாக்காரன் பேட்டியாக மட்டும் பார்க்காமல் நலிவடைந்த நமது நெசவாளிகளின் ஆதரவுக் குரலாக நினைத்து, நினைவுகள் வாசகர்ளோடு இதைப் பகிர்கிறோம். நலிவடைந்தோரை கை கொடுத்துத் தரம் உயர்த்த நம்மால் இயன்றதை செய்யலாம்.