Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

திருப்பதி லட்டில் கலப்படமா?- புரட்டாசி புத்தர்கள் அதிர்ச்சி!

புரட்டாசி என்றாலே பல புத்தர்கள் உருவாகும் மாதமாகி விட்டது. சிறு வயதில் எனக்கு விவரம் தெரியவில்லையா அல்லது சமீப காலமாகத்தான் இப்படி மக்கள் அதீத பக்தியில் ஆழ்ந்து விட்டார்களா என்று எனக்குப் புரியவில்லை.

உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
புரட்டாசி புத்தர்கள் என்று நான் குறிப்பிடுவது புரட்டாசி மாதம் மட்டும் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று விரதம் இருப்பவர்களைத் தான்.

எனது நினைவின் படி எங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்வது வழக்கம். அன்று கோவிலுக்குப் போக வேண்டும் என்ற காரணத்தால் அன்று ஒரு நாள் அசைவம் சாப்பிடுவதில்லை.

ஆனால் நான் சென்னை வந்த பிறகு பெரும்பாலான புரட்டாசி புத்தர்களை சந்திக்கிறேன். நீங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் புரட்டாசி மாதம் மட்டும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். அவர்களது கொள்கை எல்லாம் சரிதான்.

ஆனால் சிலபேர் அடிக்கும் லூட்டி அநியாயம்.
ஆம்லெட் போட்ட கல்லை கழுவிவிட்டு அதில் தோசை ஊற்றினால் கூட அது தீட்டு என்று சாப்பிட மாட்டார்கள்.

கல்லில் என்ன தீட்டைக் கண்டார்களோ? கண்ணப்ப நாயனார் கதை அறியாதவர்களோ?

இது கேலி செய்வதற்காக அல்ல. ஆனால் யதார்த்தத்தை மீறிய பக்திப் பரவச அட்ராசிட்டிகளை தவிர்ப்பது நல்லது தானே?

முன்பெல்லாம் ஒரு இழவு விழுந்த வீட்டிலிருந்து 16 நாட்கள் யாரும் வெளியே கூட போக மாட்டார்கள்.
சுற்றமும், உறவும் நட்பும் அதற்கு உறுதுணையாக இருந்து அந்த சடங்குகளை செய்தார்கள்
இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டதல்லவா?

அதுபோல பக்தியிலும் சரி விரத நடைமுறைகளிலும் சரி சில யதார்த்தங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒருவேளை உங்களுக்கு சைவ விரதம் இருப்பதற்கு போதுமான வசதிகள் இருந்தால் நல்லது. ஆனால் முட்டை ஆம்லெட் போட்ட கல்லில் தோசை சாப்பிடுவதற்கு பதிலாக நான் பட்டினி கிடப்பேன் என்பதெல்லாம் சற்று அதிகம்.

சரி இந்த கருத்தை நான் தனிப்பட்ட ஆளாக சொன்னால் அதற்கு பெரிய எதிர்ப்பு வரும் என்று எனக்குத் தெரியும் . ஆனால் நிகழ்வுகளைப் பார்த்தால் இந்த கருத்தை நான் மட்டும் சொல்வது போல இல்லை. பெருமாளும் கூட இதைத்தான் சொல்லாமல் சொல்கிறார் போல.

அதுதான், திருப்பதி லட்டு செய்ய உபயோகப்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றி கொழுப்பு போன்ற பொருட்கள் இருந்தது தெரியப்படுத்தப்பட்ட விஷயத்தை தான் சொல்கிறேன்.

லட்டிற்கான நெய் கலப்படமானது என்பதை உறுதிபடுத்தும் ஆய்வறிக்கை

இதில் புரட்டாசி விரதம் இருப்பவர்களின் தவறு ஏதுமில்லை. ஆனால் நீங்கள் தீட்டு பார்த்து பார்த்து விரதம் அனுசரித்து தவமாய் தவம் கிடந்து தரிசனம் முடித்த பிறகு கோவிந்தா கோவிந்தா என மாட்டுக்கொழுப்பு கலந்த லட்டை சாப்பிட்டதில் என்ன சாதனை?

திருப்பதி கோவில் முன்பக்கத் தோற்றம் மற்றும் லட்டுப் பிரசாதம் (இது கலப்படமானதா அல்லது கலப்படமற்றதா என்பது தெரியவில்லை)

சரி அதுபோகட்டும், நாம் வீட்டில் உபயோகிக்கும் நெய்யில் அசைவ கலப்படம் இல்லையா?

அல்லது பருப்பை பாலஷ் செய்ய கொழுப்பு உபயோகிக்கப்படவில்லையா?

இப்படி கலப்படம் நிறைந்த உலகில் நான் மட்டும் கலப்படமில்லாத தீட்டுப்படாத புரட்டாசி புத்தன் என்று சொல்வது பக்திப் புரட்சியா? அப்படி புத்தனாக முடிவு செய்து விட்டால், புத்தன் வழி, வள்ளுவன் வழி மாமிசமே இல்லாமல் வாழ்ந்து விட வேண்டியது தானே?

உங்களால் முடியாது தானே?

அல்லது முடியும் என்று சவால் விடத் தோன்றுகிறதா? அப்படித் தோன்றினால் புரட்டாசி புத்தனாக இல்லாமல் முழு நேர புத்தனாகி விடுங்களேன்.
மாறிவிட்டு இங்கே பதிலும் போடுங்கள். எங்களால் இப்படி ஒரு மாற்றம் வந்தால் பேரின்பம் தான்.

பக்தி தவறு என்றோ, உணர்வுகளை கேலி செய்வதற்காகவோ இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. சொல்லப்போனால் இதே திருப்பதி கோவிலில் நடக்கும் அன்னதான விருந்தை இங்கே போற்றியிருக்கிறோம்.

ஆனால் அவன் செய்கிறான், இவன் செய்கிறான் , வாட்ஸ் அப்பில் பார்வர்டு செய்தியில் படித்தேன், புரட்டாசி மாதம் பூமி சூடாக இருக்கும் அதனால் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் நான் 150 வருடம் வாழுவேன் என்ற அறிவியல் ஆதாரமில்லாத, முட்டாள்தனமான செய்திகளை உதாரணமாக்கிக் கொண்டு ஒரு தன்னனுணர்வு இல்லாமல் பிறர் போல நானும் பிரதியாகிறேன் என்று பலரும் இன்று நானும் புரட்டாசி புத்தன் என்கிறார்கள். நானும் கார்த்திகையில் ஐயப்பன் என்கிறார்கள். இதெல்லாம் கடவுளுக்கே பொறுக்காது.

கடவுளை மனதார வேண்டினால் போதும்.

இப்படியான ஐதீகங்களை கடவுள் சொன்னதாக மனிதன் தான் உருவாக்கி வைத்திருக்கிறான்.
நானும் மனிதன் தான். நான் என்னால் ஆனது எனக்கு ஏற்றதை சொல்கிறேன் வாக்குவாதத்திற்காக அல்ல.

இன்னொரு முக்கியமான விஷயம். நெய்யில் கலப்படம் செய்து இத்தனை கோடி மக்களின் உணர்வுகளில் விளையாடிய அந்த நிறுவனம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் எங்கள் வாதம்.

அன்புடன்- அறிவுடன் நினைவுகள்.

தொடர்ந்து வாசிக்க சென்ற மாத பதிவுகளை முன்வைக்கும் நினைவுகள் பதிப்பாசிரியர் குறிப்பு – 02

புதிய பதிவுகள் பற்றிய அறிவிப்புகள் பெற நினைவுகள் whatsapp சேனல்