Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

சாலையோர காதல் கதை

ஒரு சிறிய உருவகப்படுத்தப்பட்ட கற்பனை காதல் கதை.

திவ்யா – அழகி, யாருக்கும் பார்த்த உடனேயே பிடித்துவிடும் அவளை.

பாலாஜி- கொஞ்சம் பழமைவாதி, 90 ஸ் ஸ்டைலிலானவன். இன்னும் கூட அவனைப்பார்த்தால் 90 ஸ் பீலிங் ஒட்டிக்கொள்ளும்.

எங்கள் ஏரியாவின் முதல் முக்கிய சாலை வழியாக வந்து இரண்டாவது முக்கிய சாலையை கடந்து, எங்கோ சென்று மறைந்து மீண்டும் வந்த வழியே செல்வது திவ்யாவின் அன்றாட வழக்கம்.
திவ்யா வருவதும் தெரியாது போவதும் தெரியாது. அவளிடம் அப்படி ஒரு நளினத்தை உணரலாம். எவருக்கும் திவ்யாவின் இந்தப்பண்பு மிகவும் பிடித்தமானது.

தினமும் திவ்யாவை பின்தொடர்ந்தே பாலாஜியும் வருவது வழக்கம். ஆனால் பாலாஜி ஏரியாவிற்குள் வந்தாலே அலப்பறை தான். பாலாஜி வந்துவிட்டான் என்று ஏரியாவில் அனைவருக்கும் உணர்த்தி விடுவான்.
அவனும் முதல் முக்கிய சாலை வழியே ஏரிக்கரை அருகே சென்று மீண்டும் திரும்பி வேலைக்கு செல்வது வழக்கம்.

திவ்யா மற்றும் பாலாஜியை பெரும்பாலும் நான் முதல் முக்கிய சாலையில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
அவர்கள் சரியாக எங்கே போய் வருகிறார்கள், யாரை சந்திக்கிறார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.

பாலாஜியும், திவ்யாவும் ஒன்றாக வருவது பார்க்க அழகாக இருக்கும். இது ஒரு புது காதல் கதை என்று நம் மனதிற்குள் ஒரு ராகம் ஒலிக்கும்.

ஆனால் இப்படியான ஒரு நல்ல காதல் கதையில் படையப்பா நீலாம்பரி போல வந்து நுழைந்தவள் வேலம்மாள். வேலம்மாள் என்றதும் 80 களின் ஆள் என்று நினைக்காதீர்கள்.

அவள் 2k kid. மிடுக்கான தோற்றம், செம ஸ்டைல்.

அவளுக்கென்று ஒரு தனி அடையாளம்.பெயர் மட்டும்தான் பழசு. ஆள் அட்ராசிட்டி கேர்ள்.
அவளது பாட்டியின் நினைவாக அந்தப்பெயரை வைத்திருக்கக் கூடும். சம்பந்தமில்லாத பெயர்.

பாலாஜி ரக்கட் பாயாக இருக்கும் காரணத்தால் வேலம்மாளுக்கும் பாலாஜி மீது ஒரு சிறிய ஆசை உண்டு.

ஆனால் திவ்யாவின் நளினமும், அழகும் பாலாஜியை வேலம்மாளின் பக்கம் பார்வை கூட செலுத்த விடவில்லை.

நீண்ட நாளாக நிகழ்ந்தது இந்த முக்கோண காதல்.
பாலாஜியோ திவ்யாவின் மீது பெரிய ஈர்ப்புடன் இருந்த காரணத்தால் வேலம்மாளுக்கு திவ்யா மீது வெறுப்பு.

நேற்று இரவு பெய்த மழையில் சாலை முழுக்க மழைநீர் தேங்கியிருந்தது.

திவ்யாவின் மீது வெறுப்பிலிருந்த வேலம்மாள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திவ்யாவின் மீது மழைநீரும், சகதியையும் தெளித்து, அவள் அழகை குலைத்தால் பாலாஜி நம்மைப் பார்க்கக் கூடும் என்று எண்ணி அதை செய்தும் விட்டாள்.

இதனால் ஆத்திரமடைந்த திவ்யாவின் அப்பா, வேலம்மாள் மீது கடும் கோபமுற்று அவளை வசைபாடினார், பதிலுக்கு வேலம்மாளின் அப்பா திவ்யாவின் அப்பாவை ஒத்தைக்கு ஒத்தை அழைத்தார்.

இது எதுவுமே தெரியாத நம் பாலாஜியோ தான் போகும் வழியில் இருவர் சண்டையிடுகிறார்களே என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே நெருங்கினான். வேலைக்கு போக அவனுக்கு நேரமாகி விட்டதால் இருவரையும் விலகி பாதை தருமாறு பாலாஜி கூச்சலிட, இருவரும் விலகினார்கள்.

அவர்கள் இருவரும் விலகிய காரணத்தால் தான் நானும் சரியான நேரத்திற்கு இன்று வேலைக்கு வர இயன்றது. ஆம் நானும் பாலாஜிக்குப் பின்புறம் தான் இருந்தேன். இந்தக்கூத்துகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பாலாஜியிடம் நல்ல பெயர் வாங்க நினைத்த திவ்யாவும், வேலம்மாளும் சோகமாக நகர்ந்தார்கள்.

என்ன செய்வது நாம் நினைத்தது எல்லாம் நடந்து விடுகிறதா என்ன? யாருக்கு என்ன என்ன நிகழ வேண்டுமோ அதுவே நிகழும். இன்று திவ்யா மற்றும் வேலம்மாளுக்கு இடையே இப்படி ஒரு கலவரம் நிகழ்ந்து அவர்கள் பாலாஜியிடம் வசை வாங்க வேண்டும் என்பது விதி. இதை யாரால் மாற்ற இயலும்?

ஒரு வேளை வேலம்மாளின் மதி சரியாக இருந்திருந்நால், அவள் திவ்யாவை தொந்தரவு செய்யாமல் விட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

சிந்தித்து செயல்பட்டால் சிறப்பான வாழ்க்கை உண்டு.

ஒரு செயலை செய்யுமுன் பின்விளைவுகளை யோசிக்காமல் செய்யக்கூடாது என்பதை ரகுவிடம் கற்றுக் கொண்டேன்.

ரகு என்பது நான் சாலையில் சந்தித்த மணல் லாரி.

திவ்யா- white Eicher passenger van
வேலம்மாள்- வேலம்மாள் பள்ளி வாகனம்.
பாலாஜி- 90s kid Mahindra Tourister van

மழை நேரங்களில் சாலைகளில் பயணிக்கும் போது வேலம்மாள் மாதிரி அடுத்தவர்களை கஷ்டப்படுத்துவதும் தவறு, திவ்யா மாதிரி உஷாரில்லாமல் இருப்பதும் நமக்கு சங்கடம்.

நிதானம் பிரதானம். அதுவும் வாகன ஓட்டிகளுக்கி மிக முக்கியமானது பொறுமை.

சரியான வேகத்தில் சக பயணர்களை மதித்து இடையூறு இல்லாமல் வாகனங்களை இயக்குவோம் என்ற வேண்டுகோளை நினைவுகள் வாசகர்களிடம் வைக்கிறோம்.