Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

ஆன்மீகம் என்பது அடுத்தவனை குறைப்பதா?

கடவுள் என்பதை கட- உள் என்று பிரித்து உன் உள்ளே இருக்கும் நல்ல ஆன்மாவை உற்றுநோக்கி அது சொல்லும் வழியில் நடப்பது தான் ஆன்மீகம் என்றும், கடவுள் என்பது நம்மிலிருக்கும் நல்ல குணங்களின் பிரதிபலிப்பே எனவும் பல நேரங்களில் பல மதத்தலைவர்களாலும் விளக்கப்பட்டிருந்தாலும் கூட மனிதன் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

இங்கே நாத்திகம் பேசும் மனிதர்கள் யாரும் கோவிலை இடிக்கவோ, கடவுளின் சிலைகளை அவமதிப்பதோ இல்லை.

ஆத்திகவாதி, கடவுளின் பக்தன் என்று கூறிக்கொண்டு அன்றாடம் பக்தி பக்தி என அலையும் சிலரே சாமி சிலைகளை உடைப்பதும், மற்ற மதத்தின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பவர்களாகவும் உள்ளனர்.

ஊர்கூடி தேர் இழுத்துத் திருவிழா கொண்டாடுவது கடவுளுக்குச் செய்யும் வெறும் முறைகள் மட்டுமல்ல. மக்கள் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டவும், அன்பைப் பரிமாறவும் வேண்டும் என்பதற்காகத் தான்.
ஆனால் இன்றைய சூழலில் உன் சாதி பெருசா, என் சாதி பெருசா யார் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள் பார்த்து விடலாமா என்பதை கௌரவப் போட்டியாக நடத்துகிறார்கள்.

அல்லது ஒரு சாதிக்காரன் இங்கே வரக்கூடாது, தேரைத் தொடக்கூடாது என்று வெட்டுக் குத்து கலவரத்தில் முடிக்கிறார்கள்.

இதற்கா ஆன்மீகம்? இதைத்தான் பக்தி என்கிறதா வேதங்கள்?

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட ஒரு பிள்ளையார் சிலை இன்னொரு கும்பலால் கல் வீசித் தாக்கப்பட்டிருக்கிறது. அந்த கும்பல் பற்றிய முழுத் தகவல் இல்லை.

அதிகபட்சம் என்னவாக இருந்திருக்கும்? நம்மால் யூகிக்க முடியாத ஒன்றா?

சாதி பிரச்சினையாக இருந்திருக்கலாம். அல்லது அவர்களது பிள்ளையாரை விட இவர்களது பிள்ளையார் பெரிதாக இருந்திருக்கலாம்.

அதுவும் இல்லாவிட்டால் இரண்டு அணிகளின் தலைவர்களுக்கிடையிலான சொந்தப் பகை காரணமாக இருந்திருக்கலாம்.

அவர்கள் வைத்திருக்கும் பிள்ளையார் சிலையை தெய்வமாக மதிக்காமல் வெறும் கல்லாக நினைத்து தானே சிதைக்கிறார்கள்? அப்படியானால் இவர்கள் வைத்திருக்கும் பிள்ளையாரும் அதே கல்தானே?
பிறகு ஏன் அதை கையெடுத்து வணங்கி கொண்டாடுகிறார்களோ?

இது மட்டும் என்னவோ முரண்பாடாகத்தான் இருக்கிறது. இது கற்சிலை தானே கடவுளல்லவே என்று கேட்டால் மட்டும் கொதித்து எழுந்து விடுகிறார்கள்.

கடவுளை என்று தமது கௌரவப்பொருளாக மனிதன் பார்க்க ஆரம்பித்தானோ, அப்போதிலிருந்தே கடவுளும் மறைந்து விட்டார் மனிதமும் மறைந்து விட்டது.

கடவுளை வணங்குவது தவறல்ல. ஆனால் கடவுளின் பெயரால் கலவரம் செய்வது தவறு.

கடவுளை கடவுளாக மதிக்காமல், சக மனிதனை மனிதனாக மதிக்காமல், பட்டையும் கொட்டையும் போட்டு நாமம் பாடிவிட்டால் மட்டும் மோட்சம் கிடைத்துவிடுமா?

முதலில் மனிதர்களாவோம், பிறகு கடவுளைத் தேடுவோம்.

ஆன்மீகம் என்ற பெயரில் நிகழும் அராஜகங்களை அழிப்போம்

அன்புடன் நினைவுகள்.